திருவிளையாடல் புராணம் - அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
அந்தணப் பெண்ணின்
கொலையைக் கண்டுபிடித்தல்
கொலையைக் கண்டுபிடித்தல்
புதூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த அந்தணன் ஒருவன் தன்மனைவியுடனும் கைக்குழந்தையுடனும் மதுரையிலுள்ள தன் மாமனார் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். நடந்து தான் அந்த நாளில் செல்வர். நடுத்தரக் குடும்பத்தினர். வசதி உள்ளவர் மட்டும் பல்லக்கிலோ, வண்டி கட்டிக் கொண்டோ போவார்கள்.
நடந்து நடந்து அந்தணன் மனைவி களைத்து விட்டாள். தாகம் நாக்கை வரட்டியது. ஓய்ந்து போய் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தாள். அந்தணர் நீர் கொணரும் பொருட்டுச் சென்றார். சற்று நேரம் ஆனதும் துணியை விரித்து அலுப்பாய் படுத்தவள் கண் உறங்கி விட்டாள். குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
விதியின் வலிமையைப் பாருங்கள்! முந்தைய நாள் ஒரு வேடன் அந்த ஆலமரத்தில் அமர்ந்திருந்த ஒரு கிளியை அடிக்க அம்பு விட்டான். குறிதவறவே அம்பு கிளையில் மாட்டிக் கொண்டது. பறவை பறந்து விட்டது. வேடன் கண்ணிற்கு அம்பு தென்படாததால் வேடன் சென்று விட்டான்.
இப்போது பெருங்காற்று வீசவே கிளையிலிருந்த அம்பு விடுபட்டு முழு வேகத்துடன் மல்லாந்துபடுத்திருந்த அந்தணப் பெண்ணின் மார்பில் தைக்கவே அக்கணமே அப்பெண்ணின் உயிர் பிரிந்தது.
சிறிது தூரத்தில் அந்தணன் தண்ணீருடன் வந்தான். ஏதுமறி யாத மழலை மங்கையின் பிணத்தருகில் விளையாடிக் கொண்டி ருந்தது. உயிரற்ற மனைவியைக் கண்டு அலறி அழுதான். பின் சினத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தான். தூரத்தில் ஒருவேடன் வந்து கொண்டிருந்தான். ’அம்பெய்தவன் அவனே என அவனை பிடித்து அடித்தான் அந்தணன். வேடனோ தான் அப்போது தான் வந்ததாக மன்றாடினான்.
’இந்த அந்தரமான காட்டில் அம்பு வந்த மாயம் தான் என்ன எனக் கொதித்த அந்தணன் அறியாக் குழந்தையையும், உயிரற்ற மனைவியின் சடலத்தையும் சுமந்து கொண்டு, வேடனையும் கட்டி இழுத்துக் கொண்டு மதுரை அரசவைக்கு வந்தான். மன்னனிடம் முறையிட்டான்.
வழக்கைக் கேட்ட குலோத்துங்கனுக்கு ஒரே குழப்பம். சாம, தான, பேத, தண்ட முறைகளையெல்லாம் பிரயோகித்தும் வேடனும் ஒரே பிடிவாதமாக முதலில் கூறியதையே கூறினான். மந்திரிகளும் ஆளுக்கொன்று கூறினர். தாயை இழந்த குழந்தை கதறியது.
தந்தைக்காக கால்மாறி ஆடிய பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து உமையொடு பாகனே! கருணைக் கடலே! சக்தியே விளையாட்டுக்கு கண்ணைப் பொத்திய போதிலும் பூலோகத்தில் பிறக்க கட்டளையிட்ட நீதிதேவனே! நந்திதேவரை மீனாகப் பிறக்க உத்தரவிட்டவனே! கங்கைக் கரையில் அருளும் விசுவநாதா! கலியுகக் குற்றங்களைக் களைகின்றவனே! கைலாசவாசனே! இன்றுவரை நடுநிலையில் தீர்ப்பு வழங்கி நீதிமான் என்று பெயரெடுத்த எனக்கு சோதனை வந்திருக்கின்றது. இந்த தர்ம சங்கடமான நிலையிலிருந்து காப்பாற்ற உம்மால் மட்டுமே முடியும். ‘பழிச்சொல் வராமல் நீதிவழங்க அருள் புரியவேண்டும்" எனப் பலவாறு விண்ணப்பித்தார்.
குலோத்துங்கா, இன்று ஊரடங்கிய பின் வைசிய வீதியில் நடக்கும் திருமணத்திற்கு வந்து வாசல் திண்ணையில் காத்திரு. அங்கு உன் பிரச்சினைக்கு விடை கிடைக்கும்" என அசரீரியின் குரல் கேட்டு மன்னன் மகிழ்ந்தான்.
அந்தணனிடம் இதைக் கூறிய வேந்தன் அவனையும் அழைத்துக் கொண்டு நடுநிசியில் திருமண வீட்டை அடைந்தான். திண்ணையில் இருவரும் அமர்ந்தனர். திருமண வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த பலருக்கு நடுவில் நிலக்கரிபோல் கறுத்து, பனைமரம் போல் உயர்ந்திருந்த இருவர் அரசனின் கவனத்தைக் கவர்ந்தனர். அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்தான். அவர்கள் மெதுவே உரையாடினர். ஒருவன் கல்யாண வீட்டில் மணமகன் உயிரைக் கவர்வது என்பது எவ்வளவு சங்கடம்?" என்றான்.
அதற்கு இரண்டாமவன் இதிலென்ன சங்கடம்? தாலி கட்டி முடிந்ததும் கோதானம் செய்வதற்காக அதோ கட்டி இருக்கிறார்களே பசு, அதன் கொம்பில் போய் அமர்ந்து கொள்வோம்... ஒரே குத்து... நம் வேலை முடிந்தது! விதி முடிந்துவிட்டால் புல் தடுக்கினாலும் உயிர் போய்விடும்! ஏன் இப்படித் தயங்குகிறாய்? நேற்று காலை என்றைக்கோ வேடன் விட்ட அம்பு காற்றில் விழுந்து அந்தணப் பெண் மரிக்கவில்லையா? பழி நம்மீது வருமே என்ற அஞ்சு கிறாயா? ஏதேச்சையாக அங்கு வந்த வேடன் மேல் பழி வந்தது போல், இங்கும் பழி ஏற்கப் போவது பசுதான்... புறப்படு... நேரம் நெருங்கிவிட்டது" மறுகணம் இருவரையும் காணோம். உள்ளே தாலி கட்டுவதற்கான கெட்டிமேளம்.
மன்னன் அந்தணனிடம் யமதூதர் சொல் கேட்டாயோ?" என்றான். கூற்றுவர் சொல் மெய்யா என அறிய மேலும் நடப்பதைப் பார்ப்போம்" என்றான் அந்தணன்.
கல்யாண வீட்டின் மேள சப்தத்தால் மிரண்ட மாடு முளையைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவர, ஜனங்கள் தாறுமாறாய் ஓட ஐயோ, ஐயோ" என்ற அழுகுரல்! சப்தம் அடங்கி மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டபின் பார்த்தால் மணக்கோலத்தில் இரத்த வெள்ளத்தில் மாண்டு கிடந்தான் மணமகன்.
திகைத்தான் அந்தணன். அரண்மனை சென்றதும் அமைச்சர் களிடம் நடந்ததை உரைத்த வேந்தன் வேடனை விடுதலை செய்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு பொருள் பல கொடுத்து அனுப்பினான். அந்தணனுக்கும் பொருள் கொடுத்து மறுமணம் செய்து கொள்ளச் சொன்னான்.
பழிதீர்த்த நடராஜப் பெருமானின் உயர்த்திய வலது காலுக்கு தண்டையும், சதங்கையும் பூட்டி அழகுபார்த்தான் குலோத்துங்கன். இறைவனின் இந்த 25-ஆம் திருவிளையாடலை நினைப்பவ ருக்கும், பக்தியுடன் படிப்பவருக்கும், கேட்பவருக்கு பழி, பாவங்கள் அண்டாது.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



கருத்துகள் இல்லை