திருவிளையாடல் புராணம் - மாபாதகம் தீர்த்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
மாபாதகம் தீர்த்தல்
அவந்தி என்ற ஊரில் ஒரு அந்தணர் தன் மனைவியுடனும், ஒரே மகனுடனும் வசித்து வந்தார். மகன் தீயகுணங்களின் பிறப்பிடம். ஒருநாள் தந்தை மகனைக் கண்டிக்கவே தாய் தடுத்தும் கேளாமல் தந்தையின் தலையை மண்வெட்டியால் சிதைத்து விட்டான். பின் அரச தண்டனைக்கு அஞ்சி நடுநிசியில் தந்தையின் உடலை எரித்துவிட்டு, பொருள்களுடனும், பெற்றவளுடனும் வேற்றூர் புறப்பட்டான்.
நடுக்காடு. கள்வர்கள் அத்தீயவனை அடித்துப் போட்டு விட்டு, தாயையும் கொன்றுவிட்டு பொருள்களுடன் ஓடி விட்டனர்.
ஒரே நாளில் அனாதையாய், ஆண்டியாய் உடுத்திய உடையுடன் பிச்சை எடுத்தான். ஊழின் போக்கை அப்போதுதான் உணர்ந்தான். தான் செய்த பாவங்களை எண்ணிக் கண்ணீர் விட்டான்.
அழுக்குத்துணியும், சிக்குப் பிடித்த தலையுமாய் அவனைக் கண்டோ ரெல்லாம் ’சீச்சீ என்றனர்.
கங்கையில் நீராடிக்கொலைப் பழியைத் தீர்க்க புறப்பட்டான். ஆனால் நதிக்கரைக்குப் புறப்படுகையில் எதுவோ அவனைப் பின்னே இழுத்தது. திரும்பிப் பார்த்தால் கண்ணிற்கு எதுவும் தென்படவில்லை. இதனால் கங்கையில் நீராடல் கிடைக்காமலே பூமியில் அலைந்தான்.
இவன் தந்தை செய்த புண்ணியம்! அத்தோடு பல புண்ணிய ஸ்தலங்களில் அலைந்ததின் பயன்! மதுரை நோக்கி வந்தான்.
அச்சமயம் இறைவனும், இறைவியும் வேடர் உருவத்தில் கோபுர வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
இவனைக் கண்டதும் இவன் தந்தையைக் கொன்ற மகாபாவி அல்லவா? இவனை வெட்டுங்கள்" என்றார் தேவி.
உடனே ஈசன் படிப்பும், நற்குணமும், நற்செயலும் உள்ளவனைக் காப்பாற்றுவதைக் காட்டிலும், இவன் போன்றவரை காப்பது பெரும் நன்மை தரும்" என்று தேவியிடம் கூறிவிட்டு, தீயவன் பக்கம் திரும்பி, தினமும் பசுவிற்கு நல்ல புல்லும், நீரும் கொடு. தினம் இறைவனது அபிஷேக நீரில் குளித்து, அங்கப் பிரதட்சணம் செய். தினமும் பிட்சை எடுத்து ஒருவேளை தான் உண்ண வேண்டும். பிரதிபலன் கருதாமல் அடியார்க்குத் தொண்டு செய். மூன்று மாதங்கள் இதுபோல் செய்தால் உன்னைத் தொடரும் பிரம்மஹத்தி விலகும்." என்று சொல்லி மறைந்தார். அவனும் அவ்விதமே செய்து மகாபாதகம் தொலைத்துத் தூயவனானான்.
மூன்று காலமும் ஈசனை வழிபட்டு பெரியவர்களிடம் பணிவும், பக்தியும் கொண்டு நன்னெறியோடு வாழ்ந்தான்.
மாபாதகம் தீர்த்த இந்த 26-ஆம் திருவிளையாடலை தினமும் பயபக்தியுடன் படிப்பவருக்கும், கேட்பவருக்கும் நற்குணங்கள் வளரும். பிரம்மஹத்தி தொலையும். அகால மரணம் சம்பவிக்காது. எல்லா நன்மைகளும் கிட்டும்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



கருத்துகள் இல்லை