திருவிளையாடல் புராணம் - இந்திரன் பழிதீர்த்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
இந்திரன் பழிதீர்த்தல்
தேவலோகத்தில் ஆடல் பாடல்கள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அதிலும் திலோத்தமை என்ற தேவமங்கை அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தாள். அவள் ஆட்டத்தில் மயங்கிய இந்திரன் அப்போது அங்கே வந்த தேவ குருவான பிரகஸ்பதியைக் கவனிக்கவில்லை. அதனால் வணங்க வில்லை. ஆட்டம் முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என அலட்சியமாக இருந்துவிட்டான். குருவை அலட்சியப்படுத்தியதால் குரு கோபித்துக் கொண்டு தேவர்கள் கண்ணில் படாமல் மறைந்துவிட்டார்.
ஆட்டம் முடிந்தது. தக்க பரிசளித்து திலோத்தமையை அனுப்பிய பின்தான் குருவை அலட்சியம் செய்தது இந்திரனுக்கு உறைத்தது. குரு இருப்பிடத்தைத் தேடிச் சென்றான். அவர்தான் மறைந்துவிட்டாரே! நடந்தபின் வருந்துவது முட்டாள் தனம். வருந்தித்தான் என்ன பயன்?
குருவை இழிவுபடுத்துவது பெரிய பாவமாயிற்றே! அதனால் இந்திரனது அறிவு, பலம், படிப்பு எல்லாம் மங்கியது. எப்போது இந்திரனின் பலம் குறையும் என்று காத்திருந்த எதிரிகளான அசுரர்கள், தேவர்கள் மேல் போர் தொடுத்து ஜெயித்து இந்திரனை விரட்டிவிட்டனர். இந்திரன் மற்ற தேவர்களுடன் போய் பிரம்மாவிடம் முறையிட்டான். காப்பாற்றவேண்டுமென்று வணங்கினான்.
நடந்ததைக் கேள்விப்பட்ட பிரம்மா குருவை அவமானப் படுத்தியவன் கதி அதோ கதிதான்! குருவின் அனுக்கிரகம் இல்லாமல் வெற்றி அடைய முடியாது. உங்கள் குரு கோபித்துக் கொண்டு போய் விட்டதால் ஒரு புதிய குருவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.
புதிய குருவையும் நீங்களே சொல்லுங்கள்" என்று வேண்டி னான் இந்திரன். தக்ஷப் பிரஜாபதியின் மகனான விசுவரூபர் என்பவர் சிறந்த அறிவாளி. ஆனால் அசுரருக்கு மருமகனாயிற்றே" என யோசித் தார். ஆயினும் வேறு சரியான குரு கிடைக்காததால் அவரையே வைத்துக் கொள்வது என முடிவாயிற்று.
விசுவரூபரும் தன்னிடமுள்ள ஒரு சிவகவசத்தை இந்திரனுக்குக் கொடுத்தார். இந்திரனும் அதைப் போட்டுக் கொண்டு எதிரிகளை ஜெயித்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, சொன்னபடி நடந்து வந்தான். கொஞ்சநாள் சென்று விசுவரூபர் யாகங்களில் அவிர்பாகத்தை அசுரர்களுக்கு மறைமுகமாக கொடுத்துவருவதை அறிந்த இந்திரன், அவரது மூன்று தலைகளையும் வெட்டிவிட்டான்.
தவவலிமையால் வேதபாராயணம் செய்த தலை மீன்கொத்திக் குருவியாகவும், சுரபானம் செய்த தலை புறாவாகவும், உலக விவகாரங்களில் ஈடுபட்ட தலை, நெருப்புக் கோழியாகவும் மாறின.
உடல் பிசாசாக கருப்பு உருவமும், கோணலான முகமும், கையில் தடியும், துணியும் கொண்டு இந்திரன் எங்கு சென்றாலும் பயமுறுத்தியது.
இதற்கிடையில் விசுவரூபனை இழந்த அவன் தந்தை கோபம் கொண்டு இந்திரனைக் கொல்ல ஒரு எதிரி உருவாக வேண்டு மென்று எட்டு நாட்கள் ஒரு பெரிய யாகம் செய்தார். அதிலிருந்து ஒரு பெரிய பயங்கரமான அசுரன் உண்டானான். அவனே விருத்திராசுரன். அவன் புயலெனச் சீறிப் புறப்பட்டு இந்திரனைப் போருக்கழைத்து தோற்கடித்து விரட்டிவிட்டான்.
தோற்றுப்போன இந்திரன் தேவர்களுடன் வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தான். நடந்ததைச் சொல்லிக் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான்.
மகாவிஷ்ணு யோசித்தார். ததீசி என்று ஒரு முனிவர் இருக்கிறார். அந்த நாளில் தேவர்களும், அசுரர்களுமாகப் பாற் கடலைக் கடையும்போது தங்கள் ஆயுதங்கள் பத்திரமாக இருக்க வேண்டி ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்திருந்தனர்.
வெகு காலமாக அமிர்தம் கடைந்தனர். ததீசி முனிவர் ஆயுதங்களை பாதுகாக்க வகை அறியாமல் விழுங்கி விட்டார். அதெல்லாம் அவர் முதுகெலும்பில் மறைந்து கிடக்கிறது. அதை யெடுத்துப் புது ஆயுதம் செய்தால் விருத்திரனைக் கொல்லமுடியும்" என்றார் மகாவிஷ்ணு.
எல்லோரும் ததீசி முனிவரிடம் சென்று கெஞ்சிக் கேட்டார்கள். அவரும் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி உடலை விடுத்து சிவலோகம் சென்றார். தேவர்களும், வீணாதண்டமென்ற அந்த எலும்பை எடுத்து தேவசிற்பியான விசுவகர்மாவிடம் கொடுக்க அவர் அதைக் கொண்டு உறுதியான, கூர்மையுள்ள ஓர் ஆயுதம் செய்து தந்தார். அதுதான் வஜ்ராயுதம். அதையெடுத்துக் கொண்டு இந்திரன் வெள்ளை யானையிலேறி விருத்திராசுரனை எதிர்த்துச் சண்டையிட்டான்.
தோற்ற விருத்திராசுரன் கடலில் போய் ஒளிந்து கொண்டான். தேவர்கள் பிரம்மாவிடம் போய் முறையிட்டனர். அவர் அகத்தியரைப் போய் வேண்டிக் கொள்ளச் சொன்னார். அவ்வாறே அவர்கள் அகத்தியரைத் தொழுது நிற்க, அவர் சமுத்திரம் முழுவதையும் குடித்துவிட்டார்.
அப்போது சமுத்திரம் எப்படி இருந்தது தெரியுமா? மலைகள், புல், பூண்டுகள், செடிகள் கரடுமுரடான பாறைகள், நீர்வாழ் பிராணிகள், அப்பப்பா அதிலே ஒரு உயரமான மலை உச்சியில் விருத்திராசுரன் தவம் செய்து கொண்டிருந்தான். இந்திரன் அவன் அருகில் போய் அவன் தலையை வெட்டி விட்டான்.
உடனே அவன் பிசாசாக மாறி கையில் உலக்கையுடன் இந்திரனை விரட்டிக் கொண்டுவந்தான். விசுவரூபப் பிசாசும் இதனுடன் சேர்ந்து கொண்டது.
குளத்தில் தாமரைப் பூவிற்க்கடியிலுள்ள தண்டுக் குழலைப் பார்த்திருக்கிறீர்களல்லவா? அதில் போய் ஒளிந்து கொண்டான் இந்திரன். வெளியே எட்டிப்பார்த்தால் பிசாசுகள்! தாமரைத் தண்டில் இருந்தபடியே செய்த தவறை எண்ணி எண்ணி வருந்தினான். இந்த சமயம் நூறு அசுவ மேத யாகங்கள் செய்து இந்திர லோகத்தை ஆண்டவன் நகுஷன். மமதை தலைக்கேறி இந்திராணியை அடைய நினைத்தான். இந்திரன் மனைவி சப்த ரிஷிகள் பல்லக்குத் தூக்கிவர தன் இருப்பிடம் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்", விதியாரை விட்டது?
சப்த ரிஷிகளை பல்லக்குத் தூக்க உத்தரவிட்டான் நகுஷன். ’ஸர்ப, ஸர்ப என அதட்டினான். (ஸர்ப-சீக்கிரம்) காமவேகத்தில் இந்திராணியின் இருப்பிடத்திற்கு சீக்கிரம் போகவேண்டும் என்ற அவசரம்!
குறுமுனி அகஸ்தியர் இருந்த பக்கம் பள்ளமாய் இருந்ததால், நகுஷன் தனது காலை அவர் தலைமேல் வைத்துக் கொண்டான். பிரம்பால் அவரைக் குத்தி அவசரப்படுத்தினான்.
அகத்தியர் வாதாபியை விழுங்கி ஏப்பமிட்டவராயிற்றே! ’அடர்ந்த கானகத்தில் மலைப்பாம்பாய் விழுந்து கிட என சபித்து விட்டார்.
பல்லக்கிலிருந்து கீழே இறங்கி அவர் காலடியில் விழுந்து வணங்கி நகுஷன், சாப விமோசனம் தரும்படி வேண்டினான்.
மனமிரங்கிய அகஸ்தியர் பஞ்சபாண்டவர்களில் தருமனோடு நீ சம்வாதம் செய்வாய்; முடிவில் மோட்சம் கிடைக்கும்" என்றார்.
நகுஷன் மலைப் பாம்பாக பூமியில் விழுந்தான்.
இந்திரன் குருவிடம் அனுக்கிரகம் பெற்ற நேரத்தில்தான் நகுஷன் பூமியில் பாம்பாய் விழுந்தான்.
நகுஷன், இந்திரன் இருவருமே கர்வமும், பேராசையும் கொண்டு இழிநிலை அடைந்தார்கள். அவைகள் இல்லாமல் வாழ்ந்தால் தான் முன்னேற்றம் கிடைக்கும்.
அச்சமயம் குரு பிரகஸ்பதியை தினம் துதித்தான் இந்திரன். குருவும் அவனை மன்னித்து அவனுக்குக் காட்சி தந்தார்.
அவரிடம் தன்நிலையைக் கூறி அழுதான் இந்திரன். பிரகஸ்பதியும் அவனை அணைத்து ஆறுதல் கூறி ’சிவ வழிபாடு செய்தால் இந்தப் பிசாசு உன்னைத் தொடர்வதை நிறுத்தி விடும் என்று கூறினார்.
இந்திரன் அதுகேட்டு மகிழ்ந்து தாமரைத் தண்டிலிருந்து வெளியே வந்தான். தேவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு பூலோகத்தில் காடு மலைகளில் சிங்கம், புலிகளை வேட்டையாடிய படியே சிவத்தலங்களை வணங்கி, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வந்தான். ஆயினும் பிசாசுகள் அவனைப் பின்தொடர்ந்தே வந்தன!
கடம்பமரங்களும், வில்வமரங்களும் மண்டிக்கிடக்கும் காடு. அங்கு சிங்கத்தையும், கரடியையும், பன்றிகளையும் கண்டும் வேட்டையாட இந்திரனுக்கு மனம் வரவில்லை. ’நமக்குத் துன்பம் செய்யாத அவைகளை ஏன் துடிக்கத் துடிக்க வதைக்க வேண்டும் என்ற இரக்க எண்ணம்! எல்லா வற்றையும் விட ஆச்சரியம் என்ன தெரியுமா? அவனை உறக்கத்திலும் நிழலைப் போல் விடாது பின்பற்றி வந்த அந்தக் கரும் பேய்களை காணோம்! இந்திரன் மகிழ்ச்சிக்கு அளவே யில்லை! இங்கு ஏதோ விசேஷமிருக்க வேண்டுமென தீர்மானித்த இந்திரன் தேவர்களை நாலா புறமும் தேடச் சொன்னான்.
அப்போது தேவர்கள் அங்கே ஒரு சிவலிங்கத்தையும், குளத்தையும் கண்டுபிடித்தனர். இந்திரன் குருவை வணங்கி இனி நான் செய்யவேண்டியது என்ன?" என்று கேட்டான். அதற்கு குரு, முதலில் இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடு. காற்றிலும், மழையிலும், வெயிலிலும் இருக்கும் இந்த சுந்தர லிங்கத்திற்கு ஒரு கோயில் கட்டி விமானமொன்று அமைத்து வழிபடு. உன் கொலைபழி நீங்கும். ஏனெனில் இந்த மூர்த்தியிடமும், இந்த தீர்த்தத்திடமும் பெரும் விசேஷமிருப்பதால் தான் உன்னைத் துரத்தி வந்த கொலைப் பேய்களைக் காணவில்லை" என்றார்.
குரு சொற்படி சாஸ்திர சம்பிரதாயங்களோடு குளத்தில் நீராடிய தேவேந்திரன் லிங்கத்தை வழிபட்டான். காடுகளை வெட்டி நிலத்தை சமதளமாக்கினான். லிங்கத்தை தினம் தரிசித்தான். லிங்கத்திற்கு வெயில்படாமலிருக்க தன் வெண் கொற்றக் குடையையே பிடித்தான்.
அதற்குள் பலவித ரத்தினங்களிழைக்கப்பட்ட விமானத்தை உச்சியில் தங்கக் குடத்துடன் விசுவகர்மா செய்து கொண்டு வந்தார். குரு ஏற்படுத்திக் கொடுத்த நல்ல நாழிகையில் விமானத்தை தேவேந்திரன் பிரதிஷ்டை செய்தான். அதன்பின் விசுவகர்மாவைக் கொண்டு ஐந்து பிரகாரங்கள், பலமண்டபங்கள், அம்மன் கோயில், கோபுரங்கள், சுற்றுப்புற தேவதைகளின் விக்கிரகங்கள், கோயில்கள், குளத்துக்குப் படிக்கட்டுகள் எல்லாம் கட்டுவித்தான்.
ஒரு வீடு கட்டவே எவ்வளவு நாட்களாகின்றன? இவ்வளவு இடங்களையும் கட்ட எத்தனை காலமாகும்? பூஜைக்குப் பூக்கொண்டு வரப்போன தேவர்கள் பூக்கிடைக் காமல் அல்லாடினர். திரும்பி வெறுங்கையுடன் வந்தனர்! இறைவன் சோதனை!
தேவேந்திரன் அவர்களை தேவலோகத்திற்கே போய் பூஜைக்கு வேண்டிய மலர்கள், சந்தனம், ஆபரணங்கள், ஆடைகள் எல்லாம் கொண்டு வரப் பணித்தான். தேவர்கள் சென்றனர்.
இந்திரன் படும் அவதியைக் கண்ட ஈசன் மனமிரங்கி, அந்தக் குளத்தில் பொன்னிறமான தாமரை மலர்களை ஏற்படுத்தினான். திடீரென மலர்களைப் பார்த்த இந்திரன் ஆச்சரியப்பட்டான். இறைவன் கருணையை நினைத்து மனமகிழ்ந்தான். பொற்றாமரை என அக்குளத்துக்குப் பெயர் சூட்டினான். அத்தாமரை மலர்களைப் பறித்து சிவனுக்கு அர்ச்சனை செய்ய அமர்ந்தான். இதற்குள் தேவலோகத்திலிருந்து பூஜை சாமான்களுடன் தேவர்களும் வந்துவிட்டனர்.
ஆடல் பாடல்களுடன், மந்திரங்களுடன், கும்பாபிஷேகம் செய்து, பெரிய ஹோமங்களெல்லாம் நடத்தி, வாத்தியங்கள் முழங்க பெரிய பெரிய அண்டாக்களில் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை போன்ற நைவேத்தியங்களெல்லாம் படைத்து, பலமுறை விழுந்து வணங்கி இந்திரன் செய்த பூஜை கண்டு இறைவன் மகிழ்ந்தார். இந்திரனுக்குக் காட்சி அளித்தார். இந்திரன் பலமுறை அவர் பாதங்களில் பணிந்து எழுந்தான்.
ஈசனார் மகிழ்ந்து உனக்கு வேண்டும் வரமொன்று கேள்" என்றார்.
என்னைத் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி நீங்கியதே பெரிய வரம்; உங்களை எப்பொழுதும் மறவாமலிருந்து பணிவிடை செய்ய வேண்டும். அதுபோதும்" என்றான் இந்திரன்.
ஆனாலும் சிவபெருமான் நீ கட்டிய கோயில் என்றும் அழியாது. அதோடு என் கோயிலுக்கு நீ வேய்ந்த விமானம் இனி இந்திர விமானம் என்று உன் பெயராலேயே அழைக்கப்படும்" என்றார்.
இன்றைக்கும் கூட அதற்கு இந்திர விமானம் என்றுதான் பெயர். மதுரைக்குப் போனால் மீனாக்ஷி அம்மன் கோயிலில் இதைப் பார்க்கலாம்.
அவன் பூஜித்த நாளான சித்ரா பௌர்ணமியன்று இன்றும் இந்திரன் பூஜிப்பதாக ஆகமப்படிவிழா நடக்கிறது. இந்திரனை அதன்பின் பிசாசுகள் துரத்தவில்லை. நிம்மதியாக தேவலோகத்தில் போய் சுகபோகங்களுடன் அரசாண்டான். ஆனால் மறக்காமல் ஆண்டுதோறும் தேவர்களுடன் வந்து, சித்ரா பௌர்ணமி அன்று சுந்தரலிங்கத்தை பூஜை செய்து வணங்கி வந்தான்.
இந்திரனின் பழிதீர்த்து, அவனைத் துரத்திவந்த பிசாசுகளை விரட்டி, அவனுக்குக் காட்சி கொடுத்ததே சிவபெருமானின் முதல் திருவிளையாடல்...!
இந்த முதலாம் திருவிளையாடலைப் படிப்பவருக்கும், கேட்ப வருக்கும் படிக்கச் சொல்லி தூண்டுபவருக்கும் எதிரிகளை ஜெயிக்கும் வல்லமை கிடைக்கும் மிகுந்த புண்ணியத்தைத் தரும். இந்தக் கதை செல்வத்தையும் தரும். பழியையும், பிணியையும் அழிக்கக்கூடியது.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை