திருவிளையாடல் புராணம் - வெள்ளையானை சாபம் தீர்த்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
வெள்ளையானை சாபம் தீர்த்தல்
ஒரு சமயம் தேவேந்திரன் அசுரர்களை போரில் வென்று மகிழ்ச்சியுடன் ஐராவதம் என்ற வெள்ளையானையில் பவனி வந்தான். அதற்கு நான்கு கொம்புகள். வெள்ளை வெளெரென்றி ருக்கும். வெற்றி பெற்ற தம் அரசனுக்கு வழியில் பல தேவர்கள் பல பொருள்களைப் பரிசாக அளித்தனர்.
துர்வாச மகரிஷி. அவருக்கு கோபம் சட்டென்று வந்து விடும். ’பிடிசாபம் என்று சொல்லிவிட்டாரோ, அவ்வளவு தான்! ஆனால் தவத்திலும், பக்தியிலும் சிறந்த ஞானி. அவர் காசியில் சிவபூஜை செய்து கொண்டிருந்த சமயம் லிங்கத்தின் தலையிலிருந்து ஒரு பெரிய நீலோத்பல மலர் விழுந்தது. அது அபூர்வமான பூ. அதை எடுத்துக்கொண்டு வந்தவர் இந்திரன் பவனி வருவதைக் கண்டு அவனை ஆசீர்வதித்து அவனிடம் அந்த மலரைக் கொடுத்தார்.
பெரியவர்கள் எதைக் கொடுத்தாலும் இரண்டு கைகளாலும் வாங்க வேண்டும். அதுவும் சுவாமி பிரசாதம் என்றால் கண்களில் ஒற்றிக் கொள்ளவேண்டும். இந்திரன் என்ன செய்தான்? வெற்றிச் செருக்கில் ஒரு கையால் வாங்கியதோடல்லாமல், தன் தலையில் வைத்துக் கொள்ளாமல், யானையின் தலையில் வைத்தான். அது தலையை அசைத்ததும் பூ கீழே விழுந்தது. யானை அதைக் காலால் மிதித்துத் தேய்த்துக் கசக்கிவிட்டது.
யாருக்குத்தான் கோபம் வராது. இப்படிச் செய்தால்? கேட்க வேண்டுமா? துர்வாசர் கொதித்து எழுந்து சாபம் கொடுத்தார்.
சிவப்பிரசாத மலரை காலால் துகைத்ததனால் ஐராவதம் எல்லா யானையையும் போல் மாறி பூமியில் திரியக் கடவது!" என சபித்தார் முனிவர். இதற்குள் தேவேந்திரன் யானை மீதிருந்து கீழே இறங்கி முனிவர் காலில் விழுந்தான். தெரியாமல் தவறு செய்துவிட்டேன், மன்னியுங்கள்" என வேண்டினான்.
துர்வாசரும் நீயும், உன் யானையும் மதுரை சென்று பொற்றாமரையில் மூழ்கி சுந்தரேசுவரரை வணங்கினால் சாபம் நீங்கும்" எனக் கூறிவிட்டுப் போய்விட்டார். வெள்ளையானை கறுப்பு யானையாகி விட்டது. பூலோகத்தில் மற்ற யானைகளோடு பலகாலம் அலைந்து திரிந்தது. அதன் பெருமைகள் எல்லாம் அதற்கு மறந்து விட்டது. கடைசியில் இப்போது மதுரை இருக்குமிடம் வந்து சேர்ந்தது.
புழுக்கம் தாங்காமல் குளிக்க பொற்றாமரையில் இறங்கியதும் வெள்ளைவௌர் என்று பழையபடி ஆகிவிட்டது. தன் பூர்வீகம் நினைவுக்கு வந்தது. தான் செய்த தவறை உணர்ந்து நன்கு குளித்தபின் சுந்தர லிங்கத்தை தும்பிக்கையால் நீர்முகர்ந்து அபிஷேகம் செய்து, புத்தம் புது மலரால் பூஜை செய்து மண்டியிட்டு வணங்கியது.
பின் லிங்கத்துக்கு மேற்கு திசையில் கால்களால் மண்பறித்து குளமொன்று தோண்டியது. அதன் கரையில் சிவலிங்கமொன்றை யும், விநாயகர் உருவத்தையும் கொண்டு வந்து வைத்து தினந் தோறும் முன்சொன்ன முறையில் பூஜித்தது. இறைவன் பிரசன்ன மானார். அதை முன்போல் இந்திரனுக்கு வாகனமாகப் போய் இருக்கப்பணித்தார். தேவராஜாவும் அமராவதி நகருக்கு வரும்படி கட்டளை யிட்டான். ஐராவதம் ஆண்டவனை வணங்கி சுவர்க்கம் அடைந்து தன் கடமையைச் செய்து கொண்டு கர்வமில்லாமல் வாழ்ந்து வந்தது.
தேவராஜனும் செருக்கின்றி ஆலவாய்ப் பெருமானை வணங்கி வழிபட்டு வந்தான். இன்றைக்கும் யானையால் ஏற்படுத்தப்பட்ட குளம் ’கஜ புஷ்கரிணி என்ற பெயரோடு இருப்பதையும், குளக்கரை மீதுள்ள பிள்ளையாருக்கு ஐராவத விநாயகர் என்றும், சிவலிங்கத்திற்கு ஐராவதேசுவர லிங்கம் என்றும் பெயரிட்டு அழைத்து மக்கள் வழிபடுகிறார்கள்.
மீனாக்ஷி கோவிலின் கிழக்கு திசையில் சுவர்க்கம் செல்லுமுன் இந்திரேசுவர லிங்கம் என்ற பெயரில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை பண்ணி வணங்கி விட்டுச் சென்றது ஐராவதம். இந்திரனின் நலம் வேண்டி இவ்வாறு செய்தது. மதுரைக்குப் போனால் மறக்காமல் இந்த லிங்கங்களையெல்லாம் தரிசனம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம். வெள்ளையானையை சாபத்தி லிருந்து விடுவிக்க இறைவன் பிரத்யட்சமான கதையே அவரது இரண்டாம் திருவிளையாடல்.
ஐராவதத்தின் சாபம் தீர்த்த இந்த 2-ஆம் திருவிளையாடலை படிப்பவரும், கேட்பவரும், படிப்பதற்குக் காரணமாக இருந்தவரும் முற்பிறவி பாவம் சாபங்களினின்றும் விடுபட்டு புண்ணியத்தை அடைவார்கள்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை