திருவிளையாடல் புராணம் - மதுரை நகர் அமைத்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
மதுரை நகர் அமைத்தல்
இந்திரன் விமானத்தையும், கோயிலையும் நிறுவியபின் திங்கட்கிழமை தோறும் மதுரை வந்து நான்கு சாமத்திலும் சிவலிங்கத்தை அபிஷேக ஆராதனைகளோடு பூஜித்து வந்தான்.
ஆனால், மதுரை இன்று போல் ’ஜே ஜே என்று வீடுகளும் கடைகளுமாகவா இருந்தது! ஒரே கடம்ப மரங்கள், வில்வ மரங்கள் நிறைந்து காடாக காட்சி அளித்தது.
அதனால் அதற்குக் கடம்பவனம் என்றொரு பெயர் உண்டு.
மனிதர் போக்குவரத்தே கிடையாது.
மணவூர் என்ற ஊரில் தனஞ்சயன் என்று ஒரு வியாபாரி. பெரும் பணக்காரன். சிவபக்தி கொண்டவன். சோமவாரம் பட்டினி கிடந்து நாலுகாலமும் சிவபூஜை செய்வான். சிவனடி யார்களுக்கு உண்டி, உடை கொடுத்து அறத் தொண்டு புரிந்தான்.
தனஞ்சயன் ஒருமுறை வியாபார நிமித்தம் வெளியூர் சென்றவன் திரும்புகையில் வழியில் கடம்பவனக் காடு குறுக்கிட்டது. அந்த லிங்கத்தின் அருகாமைக்கு வரும்போது நன்கு இருட்டிவிட்டது. ஆந்தையின் அலறல். நரி ஊளையிடு கிறது. வௌவால்கள் பறக்கின்றன. சிங்கம், புலி, கரடிகளெல்லாம் விருப்பம்போல் உலாவுகின்றன. யானைகள் மரத்தை முறிக்கும் சப்தம். தனஞ்ச யனுக்கு நடந்து வந்த களைப்பு. அன்று சோமவாரம் ஆனபடியால் பட்டினி வேறு. காட்டுபயமும் பிடித்துக் கொள்ள இந்திர விமானத்தருகில் வந்து நின்றான்.
அதே சமயம் இந்திரனும் தேவர்கள் புடைசூழ வாத்திய கோஷங் களுடன் பொற்றாமரையில் குளித்துவிட்டு பூஜை செய்யவந்தான்.
தனஞ்சயன் பெரும் சிவபக்தனல்லவா... இதைக் கண்டதும் மகிழ்ந்து பயம் நீங்கி அவனும் நீராடிப் பூஜை செய்யப் புறப்பட்டான். தன்னுடைய மூட்டையிலிருந்து கஸ்தூரி, குங்குமப்பூ எடுத்து அரைத்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, பாமாலைகள் பாடி வணங்கினான். இரவு இப்படியே ஆனந்தமாக ஒரு நொடியில் கழிந்தது.
விடிந்ததும் இது கனவோ என்று திகைத்தான். இந்திரன், தேவர்கள் இவர்களை அவனுக்கு எப்படித் தெரியும்? ஆயினும் அவன் மணவூரை அடைந்ததும் அரசன் குலசேகர பாண்டியனிடம் இந்நிகழ்ச்சிகளைத் தெரிவித்தான். மன்னன் பெரும் குழப்ப மடைந்து இதை நினைத்துக் கொண்டே தூங்கச் சென்றான்.
கனவில் சிவபெருமான் சித்தர் வடிவில் தோன்றி குலசேகரா, மணவூருக்கு மேற்கில் ஒருபெரிய கடம்பவனக் காடு இருக்கிறது. அங்கு இந்திரனால் கட்டுவிக்கப்பட்ட விமானத்தடியில் நான் இருக்கிறேன். அந்தக் காட்டைத் திருத்தி நாடாக்கி உன் தலைநகராக ஆண்டு வந்தால் சீரும் சிறப்பும் பெறுவாய்" எனக்கூறி மறைந்தார்.
கனவு கலைந்து மன்னன் எழுந்தான். மன்னன் பெரும் சிவபக்தன். நீதிநெறி தவறாதவன். தன் கனவை அமைச்சர் களிடம் தெரிவித்தான். எல்லோருமாக வணிகன் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் தன் கனவில் கண்டபடியே இந்த இடம் இருப்பதை அறிந்து அரசன் மகிழ்ந்தான். பொய்கையில் நீராடி சிவலிங்கத்தை வணங்கினான். இறைவன் கட்டளைப்படி நடப்பதென்று தீர்மானித்தான்.
ஆனால் எப்படி நகரத்தை அமைப்பது, நகரத்தின் எல்லைகள் எவை எவை என அமைச்சர்களுடன் குழம்பிக் கொண்டிருக்கையில் ஒரு சித்தர் வந்தார். அவர் எப்படி இருந்தார் தெரியுமா?
உடம்பு பூராவும் திருநீறு. புலித்தோல் ஆடை. கால்களில் தண்டை. உடலில் எலும்பு மாலைகள். இடுப்பில் இதற்குப் பொருந்தாத ஒட்டியாணம், நெற்றியிலே யோகத் தகடு, வலது கையில் பிரம்பு, இடக்கையில் யோகதண்டம்; காதுகளில் ஸ்படிகத்தாலான குண்டலங்கள், முத்துப் போன்ற பற்கள் தெரிய புன்னகை பூத்த முகம், தூக்கிக் கட்டப்பட்ட வளைந்த சடாமுடி மிக உயரம்.
வந்தவர் நேராக அரசனிடம் போய் ’என்ன எல்லோரும் கவலையாய் இருக்கின்றீர்களே! எதைப் பற்றிக் குழப்பம் என்று கேட்டார். மன்னன் பணிவுடன் தன் கவலைக்கான காரணத்தைச் சொன்னான்.
சித்தர் தன் சிரிப்புடன் இவ்வளவு தானா" என்று கூறியவாறு நகர எல்லைகளையும், அமைப்பையும் விளக்கி னார். மதுரையின் அமைப்பு சாதாரணமானதல்ல... இறை வனே வகுத்தது. நான்கு ஆடி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு மாசி வீதிகள், நான்கு மாரட்டு வீதிகள், நான்கு வெளிவீதி எல்லாமே நான்குதான். கோயில் நடுநாயகம். சுற்றிச் சுற்றி வீதிகள்.
இடையில் உள்ள தெருக்களெல்லாம் மனிதனாக ஏற்படுத்தியது. இந்தமாதிரி அழகு வீதிகளின் அமைப்பைக் கொண்ட ஊரை எங்காவது பார்த்ததுண்டா? முக்கியமான வணிகப்பொருள்கள் எல்லாம் இதற்குள் வாங்கி விடலாம். வந்தகாரியம் ஆனதும் சித்தர் மறைந்துவிட்டார்.
அரசன் அமைச்சரிடம் என் கனவில் வந்த சித்தரும் இவரைப் போலவே இருந்தார்" எனக் கூறினார்.
அமைச்சர் ஆச்சரியத்துடன் அப்படியானால் அவர் சிவ பெருமானே... அவர் கட்டளைப்படியே நாம் நடப்போம்" எனக் கூறினார்.
மேடு பள்ளங்கள் சமப்படுத்தப்பட்டன. பல குளங்கள் கட்டுவிக் கப்பட்டன. பல தோட்டங்கள், பூச்செடிகள், பழ மரங்கள் இவை களோடு சொல்வதற்கே ஆச்சரியமாயிருக்கும் நகரம் உருவாகி விட்டது. கோயில் பூஜைக்கு அந்தணர்கள், அவர்கள் குழந்தைகள் படிக்கப் பள்ளிகள், அங்கு வேலை செய்வோருக்காக துணிக் கடைகள், இப்படி ஒன்றை ஒன்று பின்னியபடி பல தொழில் துறையினரும் அங்கு குடியேறினர். பின்னர் அவர்களுக்குப் பொழுது போக்கு, கோயில் திருவிழா என்றெல்லாம் வேண்டிய ஏற்பாடுகள் செய்தான் அரசன். தேர் முதலியன செய்ய தச்சு வேலையாட்கள், சிற்பிகள், நகைகள் செய்ய தட்டார்கள் முதலிய வருணத்தவர் தங்க வசதிகள் செய்து தந்தான். வடகிழக்குப் பகுதியில் தனக்கொரு அரண்மனை கட்டிக் கொண்டான்.
பின்னர் இறைவனின் ஆணைப்படி ஊருக்குக் காவலாக கிழக்கே ஐயனார் கோவிலையும், தெற்கே ஏழு தாய்மார் கோயிலையும், மேற்கில் விஷ்ணுவையும், வடக்கே பத்திர காளியை யும் பிரதிஷ்டை செய்தான். அதற்கு பூஜை செய்ய ஆட்களையும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்தான்.
நான்கு, நான்கு வீதிகளாக திட்டமிட்டு அழகாய் அமைந்தி ருப்பதால் மதுரைக்கு நான்மாடக்கூடல், நான்காலய நகரம் என்றெல்லாம் காரணப் பெயர்கள் உண்டு. எல்லா வீதிகளும் கடைசியில் கோயிலில் வந்து கூடுவதால் இதற்குக் கூடல் நகர் என்றொரு பெயர் உண்டு.
பாண்டிய மன்னன் தினம் மூன்று வேளையும் ஆலவாய் பெருமானை வணங்கி வந்தான்.
இறைவன் அருளால் போரில் இவனை எதிர்த்த எதிரிகளை வெற்றி கொண்டான். குணத்திலும், அழகிலும், ஆற்றலிலும் ஒப்பற்ற மலையத்வஜன் என்ற மகன் பிறந்தான். நீண்டகாலம் அரசாண்ட பின் ராஜ்ஜியத்தை மகனிடம் ஒப்படைத்து விட்டு, எல்லோரும் பார்க்க சுந்தரலிங்கத்தின் கர்ப்பக் கிரகத்துள் சென்று, லிங்கத்தைப் பணிந்து வலம் வந்து லிங்கத்துடனேயே கலந்து விட்டான்.
சிவபெருமான் சித்தாக வந்து நகரெல்லையும், நகர அமைப்பும் செய்து கொடுத்தது அவரது மூன்றாம் திருவிளையாடலாகும்.
இந்த 3-ஆம் திருவிளையாடலைப் பக்தி சிரத்தையுடன் படிப்பவருக்கும், கேட்பவருக்கும் சொந்த வீடு, நிலம் வாங்கும் பாக்கியம் ஏற்படும். நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள் ஜெயமடையும். கடன் தொல்லை நீங்கும்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை