Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - பெண் தெய்வங்கள்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

பெண் தெய்வங்கள்


பாரதத்தில் பல நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் வழிபடப் படுகின்றனர். நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறாக விளங்குபவை வழிபாடுகளாகும். அவர்கள் வாழ்வின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் முதலில் தெய்வ வழிபாடே முன்நிற்கின்றன. 

மழையாகப் பொழிந்து மண்ணுயிர்களைக் காப்பவள் மாரியம்மா; நதியாக ஓடி நஞ்சை புஞ்சைகளைக் காப்பவள் கங்கையம்மா; தீமைகள் அண்டாதவாறு காப்பவள் எல்லையம்மாசு என்று, பெண் தெய்வங்கள் வளமையை மையமிட்டே வணங்கப்பட்டனர்; வழிபடப்பட்டும் வருகின்றனர். காவிரி, கங்கை, யமுனை, சரசுவதி போன்ற பெரு நதிகளைப் பெண் தெய்வங்களாகவும் தாய்த் தெய்வங்களாகவும் வழிபடுவது இந்திய மரபாகும். 

நாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத்  தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவர்களை வழிபாடுகள் செய்து தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங் களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங் கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றனர். இப்பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப் படுகின்றனர். இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப் பட்டு வருகின்றனர். 

நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும், ஊர் எல்லையில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாக நம்பினர். முறையான கோயில் அமைப்போ, சிலைவடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோகூட  அத்தெய்வத்தை வணங்குகின்றனர். 

இத்தெய்வங்களுக்கு விரதமிருந்தும், சில இடங்களில் உயிர்பலி கொடுத்தும் வழிபாடு செய்கின்றனர். இவை மட்டுமல்லாமல் வேண்டு தல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் வழிபாட்டு நிலையில் அடங்கும். பெருந்தெய்வங்களைப் போல ஆறுகால / நான்கு கால பூசைகளோ, நிவேதனங்களோ பெரும்பாலும்  இத்தெய்வங் களுக்குச் செய்வதில்லை. 

நாட்டுப்புற தெய்வங்களை பரவலாக எல்லோரும் வணங்கு கின்றனர். இந்த தெய்வங்களே பெரும்பாலானவர்களின் குலதெய்வ மாக விளங்குகின்றன. பொதுவாக இத்தெய்வங்கள் குறிப்பிட்ட இனம், சாதி, ஊர் என்றில்லாமல் அனைவராலும் வணங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஒரே தெய்வம் குலதெய்வமாகவும், இனத் தெய்வமாகவும், ஊர்த்தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகிறது. 

பெரும்பாலும் பூசாரிகள் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்வர். சில இடங்களில் சிவாச்சார்யார்களும் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்து வருகின்றனர். அருள்வாக்கு கேட்டு தெய்வத்தின் சம்மதத்துடனே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு வழிபாடுகளும், பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. அது தவிர பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெரு விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. 

நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள்  

காளியம்மன், மாரியம்மன், ராக்காச்சியம்மன், சக்கம்மாள், 

செல்லியம்மன், வீரசின்னம்மாள், திக்கம்மாள், காந்தாரியம்மன், கரடியம்மன், வெயிலுக்குகந்தம்மன், காட்சிக்காரம்மன், முப்பிடாரியம்மன், சீலைக்காரியம்மன், முத்தாலம்மன், சௌண்டம்மன், ராக்கம்மா, மந்தையம்மன், வீரகாத்தியம்மன், காமாட்சியம்மன், நீலவேணி யம்மன், திரௌபதியம்மன், இசக்கியம்மன், சோலையம்மன், நாகாத் தம்மன், வேம்புலியம்மன் என்று வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடப் படுகின்றனர். 

மாரியம்மன் 

அம்மை நோய் ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர், நாட்டில் மழை பொய்த்த போது  மாரியம்மனையே மழை வேண்டி வழிபடுகின்றனர். ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதாக நம்பப்பட்டு வழிபடப்படுகிறது. பொதுவாக எல்லா ஊர்களிலும் மாரியம்மன் வழிபாடு காணப்படுகின்றது. 

நாடியம்மன் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வருகின்றனர். (நாடி+அம்மன்=நாடியம்மன்) தன்னை நாடிவந்து வழிபடுபவர்களுக்கு நல்லதை செய்யும் அம்மன் நாடியம்மன் எனப்படுகிறாள். இந்நாடி யம்மன் பெரியநாடியம்மன், சின்ன நாடியம்மன் என்று இரு தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர். இத் தெய்வங்கள் இரண்டும் அக்கா தங்கைகளாக வாழ்ந்தவர்கள் என்று வாய்மொழிக்கதைகள் கூறுகின்றன. ஆடிமாதத்தில் இத்தெய்வங்களுக்கு விழா எடுக்கப் படுகிறது. பட்டுக்கோட்டையிலும் நாடியம்மன் சிறப்பாக வழிபடப் படுகிறாள். 

காத்தாயி அம்மன் 
காத்யாயன முனிவரின் மகளாக பார்வதிதேவி பிறந்தாள். அவளுக்கு காத்யாயனி என்று பெயர். அவளே காத்தாயி என்ற பெயரில் கிராமங்களில் கோயில் கொண்டுள்ளாள். முருகனை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் குகாம்பிகையே காத்தாயி என்று சிற்பநூல் வல்லுனர்கள் சொல்கின்றனர். அம்பிகையின் தொழில், உயிர்களைத் தன் குழந்தைபோல் காப்பது. காத்த ஆயி, அவளே காத்தாயி என தமிழறிஞர்கள் சொல்கின்றனர். காத்தாய்நீ என்பது காத்யாயினி என மருவியிருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு. 

இடது மடியில் குழந்தையுடன் இருக்கும் காத்யாயனி அம்மன் வடிவம் இருக்கும் கோயில்களே மிகுதி. சில கோயில்களில் மட்டும் குழந்தை யில்லாமல் கையில் கிளியுடன் இருக்கும். வலது கரத்தில் தாமரைமலர் இருக்கும். காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வோர் அடைமொழி இருக்கும். உதாரணமாக சில இடங்களில் நல்ல காத்தாயி என்றும், சில இடங்களில் ஊர் பெயர் சேர்த்து சித்தாடி காத்தாயி என்று அடைமொழியுடனும் அழைக்கின்றனர். ஒவ்வோர் இடத்திலும் கதைகள் மாறினாலும் அனைத்து உயிர்களையும் தன் குழந்தையைப் போல் காத்துவரும் காத்யாயனி அம்மனை வழிபடுவோர் பயம், பிணி, துன்பம், துயரம், கவலை ஆகியவற் றிலிருந்து விடுவிக்கப்பட்டு, காக்கப்படுவது மட்டும் எந்தத் தலத்திலும் மாறுபடுவதில்லை. 

தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் காசவளநாடுபுதூர் என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரில் உள்ள சமூகத்தினரின் குலதெய்வமாக காத்தாயி அம்மன் வழிபடப்படுகிறாள். அனைவரையும் காக்கும் தெய்வமாகையால் காத்தாயி அம்மன் என்றழைக்கப்படுகிறாள். இத்தெய்வம் மரமாக வைத்து வழிபடப் பட்டு பின்பு கோயில் கட்டி வழிபாடு நடைபெற்று வருகிறது. இத்தெய்வம் தினைப்புனம் காக்கத் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த அம்மனுக்கு ஆடிமாத நள்ளிரவு 12 மணிக்கு விழா எடுத்து வழிபடுகின்றனர். இத்தெய்வத்துக்கு ஆடு, கோழி, பன்றி ஆகியன பலியிடப்படுகின்றன. கும்பகோணம் குடவாசல் அருகில் உள்ள ஆவணத்தை அடுத்து சித்தாடி என்ற கிராமத்தில் குடிகொண்டு மக்களைக் காத்து வருகிறாள் காத்தாயி. சமீபத்தில் முற்றிலும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது இத்திருக்கோயில். 

காளியம்மன் 

இத்தெய்வம் எல்லா ஊர்களிலும் வழிபடப்பட்டு வருகிறது. சிவனிடமிருந்து மும்மூர்த்திகளாலோ, ஆண்தெய்வங்களாலோ தனக்கு என்றும் அழிவு ஏற்படக்கூடாது என்று வரம் வாங்கிய மகிஶாசுரன் என்பவன், சிவனையே அழிக்க எண்ணியபோது அவனை காளியானவள் அழித்தாள் என்று கூறப்படுகிறது. நாட்டுப்புற மக்கள் காளியை கிராம தெய்வமாக வழிபடுகின்றனர். 

மீனாட்சியம்மன் 

மீனவ மக்கள் இத்தெய்வத்தை வணங்குகின்றனர், இத்தெய்வத்தை வணங்கிச் சென்றால் அதிகமான அளவு மீன் கிடைக்கும் என்று மீனவர்கள் நம்புகின்றனர். 

பெத்தாலம்மன் 

ஜமீன்கோடாங்கிப்பட்டியில் தச்சு வேலை செய்து கொண்டிருந்த ஆசாரிப்பெண், நாயுடு வகுப்பைச் சார்ந்தவரோடு ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் காரணத்தால் அவள் கணவன் கொல்லப்பட்ட நிலையில் தீக்குழி பாய்ந்து தானும் இறந்து போனதாகவும் அப்பெண்ணே பெத்தாலம்மனாக வழிபடப் பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

முத்தாலம்மன் 

தொட்டிக்குலப் பெண்களில் குலப்பண்புகளோடும் பெண் மைக்கே உரிய இலக்கணத்தோடும் வளர்ந்து வந்த முத்தாலம்மா என்பவளின் நடத்தையில் சந்தேகித்து அவள் உடன் பிறந்தவர்கள் அவளைக் கொல்லத் துணிந்த போது, மனம் வெறுத்து இனி இந்த உலகில் வசிக்கக் கூடாது என்று முடிவு செய்து இறைவனைத் துதித்து மண்பாண்டங்கள் சுடும் சூளையில் இறங்கி அந்த அணலில் வெந்து நீராகிப் போனாள். கற்புக்கரசியான இவள் பின்னர் முத்தாலம்மனாக போற்றப்பட்டாள். ரேணுகாவின் வரலாற்றுக்கும் இதற்கும் தொடர் பிருப்பதை (தீப்புகுந்தது) உற்று நோக்கினால் இதுவும் மாரியம்மனின் வரலாற்றின் திரியாக இருப்பது கண்கூடு. 

முத்தாரம்மன் 

முன்னொரு காலத்தில் ஆதி முனி என்பவரின், மந்திரத்தின் வலிமையால் மூன்று அரக்கியர் பிறந்தனர். அவர்கள் சத்தி முனிவரின் வரத்தின் மூலம் நீலன், குமுதன், ஆதித்தன் என்ற மூன்று புதல்வர் களைப் பெற்றனர். ஆனால் அந்தக் குழந்தைகள் மிகவும் மூர்க்கமாக இருந்ததால் அவர்களைக் காட்டிலேயே விட்டுவிட்டு போய்விட்டனர். அக்குழந்தைகளை நந்திதேவர் எடுத்து வளர்த்தார். இவர்கள் திரிபுராதியர் என அழைக்கப்பட்டனர். சத்தி முனிவர் வேள்வி செய்யும் போது அதனை தடை செய்து கொண்டிருந்த அசுரர்களை அடக்க திரிபுராதியர்களுக்குத் துணையாக சிவபெருமான் பார்வதி தேவியை அனுப்பினார். பார்வதி தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத் துளிகளை வழித்து வெளியே வீச, மூன்று முகத்துடன் முத்தாரம்மன் தோன்றி னாள். முத்தாரம்மனை திரிபுராதியருக்குத் துணையாக அனுப்பி வைக்க சிவபெருமானிடம் வரம் வேண்டினாள் பார்வதி. அவரும் சம்மதிக்க முத்தாரம்மன் முப்புரத்தில் தங்கியிருந்து திரிபுராதியருக்குத் துணையாக இருந்தாள். முத்தாரம்மன் பார்வதியின் அம்சமாதலாலும், மாரியம் மனுக்கு முன் தோன்றியதாலும், முத்தாரம்மனை மாரியம்மனின் முன் அவதாரம் என்பர். 

இவ்வாறு பல பெயர்களில் பெண் தெய்வங்கள் நாட்டுப் புறங்களில் வணங்கப்பட்டாலும், மாரியம்மனின் வழிபாடு மிகவும் சிறப்புற்று விளங்குகிறது. 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை