மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - தமிழகத்தில் மாரியம்மன்
மஹா மாரியம்மன்
ஆடி மாத சிறப்புகள்
தமிழகத்தில் மாரியம்மன்
மாரியம்மன் த்யானம்
அக்னி ஜ்வாலா சி’காமக்நி நேத்ராமக்நி ஸ்வரூபிணீம் !
கரண்ட மகுடோ பேதாம் கதாடக்கா கராம்புஜாம் !!
வீராஸநாம் கபாலாஸி பாச’ஹஸ்தாம் ரவிப்ரபாம் !
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரண பூஶிதாம் !!
அக்னி ஜ்வாலையை சிகையாகக் கொண்டவளும், அக்னியைக் கண்களாகவும் உடலாகவும் கொண்டவளும் (நெருப்பு போன்ற கண்கள் மற்றும் சிவந்த மேனி) கரண்ட மகுடத்தைத் தரித்திருப் பவளும், கதை, உடுக்கை, கபாலம், பாசம் இவைகளைக் கைகளில் வைத்திருப்பவளும், வீராசனத்தில் அமர்ந்திருப்பவளும், சூரியனுக்கு ஒப்பான காந்தியுடையவளும், பாம்பை மாலையாக அணிந்திருப் பவளுமான மகா மாரியை வணங்குகின்றேன்.
மாரியம்மன் வரலாற்றை விளக்கும் நாட்டுப்புற பாடல்கள் பல உண்டு. மாரியம்மன் தாலாட்டு, மகேஸ்வரியே மாரி என்பதைக் குறிப்பிடுகிறது. மாரி முழு முதற் கடவுள். அவள் வழிபாடு சிலப் பதிகார காலம் முதல் தமிழகத்தில் பரவலாக இருக்கிறது.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கண்ணகி வழிபாடு, மாரி வழிபாடாக மலர்ந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கண்ணகி வெம்மை நோய் அழித்தாள்; மழை பொழிய வைத்தாள்; இத்தன்மை களால் இவளே மாரியாக வழிபடப்பட்டாள் என்பது ஆய்வாளர் கருத்து. தீ மிதிப்பதையும் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புபடுத் தியிருக் கிறார்கள்.
மாரியம்மன் தாலாட்டில் எல்லா நாளும் மாரிக்கோயிலில் திருநாள் தான் என்கிறது. எல்லோரும் போகும் பாதை கல்லும், கரடும். எங்கள் மாரியாத்தா போற வழி தேரும், திருநாளும் என்கிறது.
மாரியம்மனைக் குறிக்கும் வடசொல் சீதளாதேவி. சீதளம் என்றால் குளிர்ச்சி. பக்தர்களின் வெம்மை நோயை நீக்குகிறாள்.
பசுக்களிடம் தோன்றும் கோமாரியை அகற்றுகிறாள். மழை பொழிந்து நிலத்தைக் குளிர்விக்கிறாள். பாதுகாப்பு அரனாக இருந்து பக்தர்களைக் காப்பாற்றுகிறாள். தாயாக, உலகின் தந்தையாக, உலக இயக்கத்தின் அடிப்படையாக இருப்பவள் சீதளா தேவி.
மாரியம்மன் என்றாலே நம் நினைவிற்கு வருவது சமயபுரம் மாரியம்மன். அன்பில் கண்ணணூர், நார்த்தாமலை, தென்னூர், புன்னை நல்லூர், வீரசிங்கம் பேட்டை முதலான இடங்களில் உள்ள மாரியம்மன் சமயபுரத்தாளின் சகோதரிகள் என்று கூறப்படுகின்றனர். சமயபுரம் தான் தலைமைப்பீடம்; மிகவும் தொன்மையான கோயில்.
மாரியைச் சரணடைந்தால் எல்லா வளங்களையும் பெறலாம் என்கிறார் பாட்டுக்கு ஒரு பாரதி. நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு. அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம். தேசமுத்து மாரியைப் புகழ்ந்து பாரதி பாடிய பாடலின் தொடர் இதுவே.
பாரதி பாடிய உரைநடை வடிவில் அமைந்த பாட்டு ஒன்றில் வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது இடைவெளியில் கள்வர்கள் நெருங்கி மிரட்டும் போது கருமாரியம்மன் பெயரைச் சொன்னால் போதும் கள்வரும் அஞ்சுவர் என்கிறார்.
மாரி என்றால் மாரியம்மனைக் குறிக்கும். மழையைக் குறிக்கும். மழை நல்லவர் தீயவர் என்று பேதமின்றிப் பொழியும். மழை போல கருணையை பொழிபவள் அன்னை. ஆகவே மாரி எனப்படுகிறாள். ஆவணி மாதம் மழைக் காலத்தில் பிறந்ததால் மாரி என்பர். மாயையின் அவதார காரணத்தால் மகமாயி. மாரி என்ற சொல் தேவி மகாத்மியத்தில் அம்பிகையைக் குறித்து கையாளப்பட்டுள்ளது. கருமை நிறம் கொண்டு கருணையை மழை போலப் பொழிகிறாள். மாரியம்மன் என்றாலே பாம்பாகிப் புற்றிலே உறையும் தெய்வம் என்பது ஒரு நம்பிக்கை.
அவளே கௌரி, பிராம்மி, ரௌத்ரி, வாராஹி, வைஶ்ணவி, சிவா, வாருணி, கௌமாரி, நாரசிம்ஹி, இந்திராணி என்று பல்வேறு பெயர்களுடன் சக்தி சொரூபமாய் அந்தந்த சக்திக்குரிய ஆற்றலுடன் அருள் புரிகிறாள். கன்னி வடிவத்தில் கௌமாரி, திரிபுரா, கல்யாணி, ரோஹிணி, காமினி, சண்டிகா, சாங்கரீ, துர்கா, சாந்தி துர்கா, ஜாதவேத துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, ஆசூரி துர்கா எனவும் வழிபடப்படுகிறாள்.
தண்ணீரின் குளிர்ச்சி அவள்; நெருப்பின் உஶ்ணம் அவள்; சூரியனின் ஒளி அவள்; சந்திரனின் குளுமை அவள். சக்தியை, அன்னையை, முன் செய்த புண்ணியமில்லாதவர் வணங்க இயலாது என்கிறார் ஆதிசங்கரர்.
இந்து தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது? பிறவி எடுத்ததன் பிரயோஜனமே யாரிடமாவது ஒருத்தரிடம் மாறாத பிரியம் வைப்பது தான். ஆனால் நாம் பிரியம் வைக்கும் பொருள் எந்த காலத்திலும் சண்டைக்கு வராததாக, எந்த காலத்திலும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். பிரியம் இல்லாத ஜன்மம் இருந்தும் வீணே! பிரியம் வைக்க வேண்டியது யாரிடம்? இறைவனிடம் தான். என்றுமே நமக்காக, நம்முடன், நம் நலனுக்காக உதவிடும் அன்னையைத் தவிர வேறு யாரிடமாவது அன்பு வைத்தால் அதுவும் வீணே! அவளது பாத கமலங்களைப் பற்றுவதைத் தவிர வேறு எதிலும் பற்று வைத்தல் அவசியமில்லை.
ஆயி என்றால் அம்மா. மாரி ஆயி என்ற பெயரால் அசாமில் வழிபடப்படுகிறாள். குழந்தைகளுக்கு அம்மையோ, நீர்க்குளுவானோ வந்தால் அங்கு அதனை அம்பாளின் விளையாட் டாகக் கருதுகிறார்கள். மாரியின் திருநாமப் புகழ்பாடி பெண்கள் வட்டமாகக் குழுமி கும்மியடித்து வழிபடுகிறார்கள். சப்தமாதர்கள் நம் வழிபாட்டில் உள்ளது போல அசாமிலும் உண்டு. அவர்கள் சப்தமாதர்களை மாரியின் உடன் பிறந்த தங்கைகளாகக் கருதுகின்றனர்.
மாரியம்மனை நினைத்தவுடனேயே மழை பொழியும். தேன் எப்படி இனிமையானதோ அதேபோல் மக்கள் வாழ்வு இனிமை பெற மழை அவசியமானது. வெம்மைக்குப்பின் குளிர்ச்சி வருவது போல கோடை காலத்திற்குபின் மழை பொழியும். வெப்பமான அம்மை நோய் உடலிலிருந்த வெப்பத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு மறைந்தபின் உடல் குளிர்ச்சி பெற்று சுகம் அடையும்.
கோடை காலங்களில் வெப்ப நோய்கள் தாக்க வாய்ப்புகள் அதிகம். இந்நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி தர வேண்டி மாரி (மழை) அம்மனை வேண்டினர். அதனால் தானோ இவள் மாரியம்மன் என்றழைக்கப்பட்டாள்? இவளது தலவிருட்சம் வேப்ப மரம். நோய்களை குணமாக்கும் கசப்பு சுவை உடையது.
இவள் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறாள். தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஆகாசமாரி, புற்றுமாரி, சீதளமாரி, அனல்மாரி, வாயுமாரி என்று பஞ்சபூதங்களின் வடிவினளாக வணங்கப்பெற்று வரும் மாரிக்கு ஆயிரமாயிரம் நாமங்கள். வேதங்களுக்கும் எட்டாது ஒளிக்கும் நிலையான ஜோதி நீ, உன் கருணையை என் மீது வைத்து அருள் புரிந்தால் சூரியனைக் கண்ட பனிபோல் இந்தத் திக்கற்றவனாகிய எனது வினையும் மறைந்து விடுமே அம்மா. உன் நாமமாயிரம் சொல்ல எத்துணை பெயர் கொண்டு அழைத்தாலும் அம்மா நீ துன்பம் வரும் வேளையில் ஓடி வந்து அருள்வாயே !
ஆத்தா என் கூடவே இருந்து எவ்வித இடர்களிலும் என்னைக் காப்பாற்றுகிறாள்சு என்ற நம்பிக்கையே பலருக்குள்ளும் காலகாலமாக இருந்து வருகிறது. பெண் இந்த உலகுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக அவளின் அன்பும் ஆசீர்வாதமும் அருளப் பெறுவதாலேயே பன்மடங்கு உயர்ந்தவள் என்ற எண்ணத்தோடு காளியம்மா, மாரியம்மா, கன்னியம்மா, பவானியம்மா என்று பல பெயர்களில் வணங்கப்படுகிறாள். சமயபுரம், புன்னைநல்லூர், இருக்கன்குடி, பெரியபாளையம், மண்டைக்காடு... இதுபோல எத்தனை எத்தனையோ தலங்கள், வழிபாடுகள். ஆயிரம் நாமம் கொண்டவள் போல ஆயிரமாயிரம் திருத்தலங்கள்....... எண்ணிலடங்கா. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமான அற்புதத்தை நிகழ்த்தி அன்பர்கள் மனதில் இடம் பெற்றுள்ளாள். அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு தான் இது புரியும்.......மெய் சிலிர்க்கும் அனுபவங்களல்லவா அவை...!
தமிழகம் முழுவதும் ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் கோயில் கொண்டிருக்கும் தெய்வங்கள் விநாயகரும், மாரியம்மனும்தான். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாசு ்மாரி இல்லா ஊர் மண் மேடுசு என்ற பழமொழிக்கேற்ப எல்லா ஊர்களிலும், சில ஊர்களில் பல இடங்களிலும் மாரியம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. கிராம தேவதையாகப் போற்றப்படும் மாரியம்மன் பல குலத்தாருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறாள்.
மாரியம்மன் கோயில்கள் அமைப்பு ரீதியாக ஒரே வகையில் கட்டப்படவில்லையானாலும், பல சிறிய கோயில்கள் அங்குள்ள தெய்வீக சக்தியின் பலனால் மிகவும் சிறப்புற்று விளங்குகின்றன. தற்காலத்தில் பல பெரிய மாரியம்மன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்டும் வருகின்றன. பெரிய அளவில் அம்மன் சிலைகளை நிறுவுவதும் பல இடங்களில் நடைபெறுகிறது. தங்கள் இஶ்ட தெய்வத்தின் விஸ்வரூப தரிசனத்தைக் காண விரும்பும் பக்தர்களின் விருப்பத்தால் இத்தகைய சிலைகள் நிறுவப்படுகின்றன.
பெரும்பாலும் மாரியம்மன் கோயில்கள் மூன்று விதங்களில் காணப்படுகின்றன. முதலாவது உருவமில்லாத அமைப்பு. இதில் பீடம் மட்டும் இடம் பெறும். அல்லது அதன் மீது கல் நடப்பட்டிருக்கும். அந்த கல்லுக்கு கண், காது, மூக்கு, வாய் போன்றவை சந்தனத்தாலோ, மஞ்சளினாலோ அவ்வப்போது அலங்கரிக்கப்பட்டு மாரியம்மனாக வழிபடப்பெறும்.
இரண்டாவது கழுத்து வரை உள்ள மாரியம்மன். இந்த வகை மாரியம்மனின் பெயர் பெரும்பாலும் ரேணுகா என்றிருக்கும். தண்டு மாரியம்மனுக்கும் சிரசு மட்டுமே காணப்படும். இத்திருக்கோயில்களின் வரலாறுகளில் ரேணுகா தேவியின் சரித்திரமே பிரதான இடம் பெறுகிறது.
மூன்றாவது வகை திருக்கோயில்களில் அம்மன் சிலை முழு உருவத்துடன் இருக்கும். நான்கு கரங்களோ அல்லது எட்டு கரங்களோ கொண்டு தேவி விளங்குவாள். நான்கு கரங்கள் உள்ள தேவி வடிவத்தில் வலது மேற்கரத்தில் உடுக்கையும் இடது மேற்கரத்தில் சூலமும், வலது கீழ் கரத்தில் கத்தியும் இடது கீழ்க்கரத்தில் குங்குமச் சிமிழும் கொண்டு காட்சி தருவாள். எட்டு கரங்கள் உள்ள அம்மன் சிலைகளில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவை அமைந்திருக்கும். பெரும்பாலும் தலையில் ஜ்வாலா கிரீடத் துடன் காட்சி அளிப்பாள் தேவி.
மாரியம்மன் சிலைகள் பல ஊர்களில் சுதையாலான சிற்பமாக அமைந்திருக்கும். அதன் கீழ் கல் விக்கிரகமோ அல்லது உத்ஸவ விக்கிரகமோ இடம் பெற்றிருக்கும். சுதையால் ஆன அம்மனின் உருவம் மண், மெழுகு, சாந்து முதலியவற்றுடன் சில மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்படும். இவை நீரில் கரையுமாதலால் இந்த உருவங்களுக்கு அபிேஶகம் கிடையாது. புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி தைலம் போன்றவை மட்டுமே சாற்றப்படும். உத்சவ விக்கிரகத்திற்கே எல்லா அபிேஶகங்களும் நடக்கும். பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் இதனைக் காணலாம்.
சில இடங்களில் திருஉருவங்கள் மரம், தந்தம், சிமெண்ட் போன்றவை கொண்டும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வேப்பமரமே அம்மனாக வழிபடப்படுவதும் உண்டு.
கழுத்து வரை உள்ள ரேணுகா தேவி, சக்தியின் அம்சமாக குறிப்பிடப்படுவதால் நெற்றியில் திருநீரும் அதன் மத்தியில் குங்குமமும் இடப்பெற்றிருக்கும். கழுத்து முழுவதும் அணிகலன்கள் நிறைந் திருக்கும். காது, மூக்கை ஆபரணங்கள் அழகு செய்யும்.
முழு உருவில் உள்ள மாரியம்மன் சிலைகள் பலவிதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பீடத்தில் அமர்ந்து கொண்டு இடது காலை மடக்கி, வலது காலை அசுரன் தலைமேல் வைத்திருப்பது போல் பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும். மாரியம்மன் திரு வுருவங்களில் நாகம் குடைபிடிப்பது போல் காணப்படும். ஐந்து தலை நாகங்களோ அல்லது அதற்கு மேற்பட்ட தலைகளோ உடைய நாகங்கள் இவ்வாறு தேவிக்குக் குடை பிடிக்கும் என்பது குறிப் பிடத்தக்கது.
தமிழகத்தில் பெண் தெய்வங்களைப் பொருத்தவரையில் மாரியம்மன் திருக்கோவில்கள் இடம்பெற்ற அளவில் வேறு எந்த தெய்வத்திற்கும் இடம் பெறவில்லை. பெண் தெய்வ வழிபாட்டில் தனியாகக் கோயில் கொண்டு சிறப்புற்று விளங்குவது மாரியம்மன் வழிபாடே.
மாரியம்மன் கோயில்கள் தோற்றம் குறித்து பல்வேறு வரலாறுகள் வழங்குகின்றன.
சிலர் மீது அன்னை இறங்கி வந்து அருள்வாக்கு கூறுவதன் மூலம் சில இடங்களில் அம்மன் ஆலயங்கள் அமையும். சில இடங்களில் பசுக் கூட்டங்கள் பாலைச் சொரிவதன் மூலம் அங்குள்ள தெய்வீக சக்தி வெளிப்பட்டு சுயம்புவாக அன்னை எழுந்தருளியுள்ளாள். சில சமயங்களில் கனவினில் வந்து தான் இருக்குமிடத்தைத் தெரிவித்து அதன்மூலம் கோயில் கட்டப்பட்ட வரலாறுகள் ஏராளம்.
பசுவோ அல்லது பசுக் கூட்டமோ சேர்ந்து பால் பொழிந்து அதன் மூலம் இறைவன் வெளிப்பட்ட வரலாறுகள் பலவற்றைப் படித்திருப் போம். இதன் காரணமென்ன? பசுவின் உடலில் 64 கோடி தேவர்களும் உறைவதாக ஐதீகம். பால் சொரிவதென்பது இந்த 64 கோடி தேவர்களின் பூஜையாகும். கண்ணுக்குத் தெரியாமல் பூமியில் மறைந்திருக்கும் இறைவனை இந்த தேவர்களே அறிவர். அதனால்தான் பசு பால் பொழிந்து இறைவன் வெளிப்படுவதாக பல இடங்களில் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
மன்னர்கள் போரிடச் செல்கையில் அம்மனிடம் இந்தப் போரில் வெற்றிபெற்றால் பெரிய ஆலயம் கட்டுவதாக வேண்டிக் கொள்வர். அதேபோல் அன்னையின் அருளால் வெற்றிபெற்றுவந்தவுடன், அன்னைக்கு கோயில்கட்டி குடமுழுக்கு நடத்திவைப்பர். அவ்வாறு எழுந்த கோயில்களுக்கு விளைநிலங்களையும் கொடுத்து தினசரி வழிபாடு நடைபெற ஆவன செய்வர்.
பொதுவாக பழமையான மாரியம்மன் கோயில்களில் பரிவார தெய்வமாக பேச்சாயி, சுடலைமாடன், பைரவர், கருப்பண்ணசாமி போன்ற தெய்வங்கள் இடம் பெறும். பின்னர் எழுந்த மாரியம்மன் திருக்கோயில்களில் பிள்ளையார், முருகன் போன்றவர்களும் இடம் பெற்றிருப்பர். தற்போது கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் ஆலயங் களில் ஏறக்குறைய எல்லா தெய்வங்களும் சிவன், பார்வதி, திருமால், ஐயப்பன் போன்ற பல திருவுருவங்களும் இடம் பெறுகின்றன. கோயிலுக்கு வந்தால் எல்லா தெய்வங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க பக்தர் விரும்புவதால் இவ்வாறு கோயில்கள் கட்டப் படுகின்றன.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் மாரியம்மன் வழிபாடு நடைபெறுகிறது. எல்லம்மா, கங்கம்மா, ரேணுகா உள்ளிட்ட பல பெயர்களில் அன்னை திகழ்கிறாள். பல வெளிநாடுகளிலும் மாரியம்மன் கோயில்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெறு கின்றன. அந்த இடங்களில் தமிழர்கள் மட்டுமல்லாமல் அவ்வூரில் வாழும் இதர சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வழிபாடுகளில் பக்தியுடன் கலந்து கொள்வது உலகம் முழுவதற்கும் அவளே தாய் என்பதை உணர்த்துகிறது.
சிறப்பாக விளங்கும் மாரியம்மன் திருத்தலங்களில் சமயபுரம், புன்னைநல்லூர், இருக்கன்குடி, புதுக்கோட்டை, படவேடு, சிவ கங்கை, கண்ணபுரம், கொல்லங்குடி, கடம்பூர், தேனீ, வீரபாண்டி, சோழவந்தான், மதுரை வண்டியூர், திண்டுக்கல், சேலம், செவ்வாய் பேட்டை, கோவை உப்பிலிபாளையம், ஈரோடு கொளாநல்லி, ஈரோடு பெரிய மாரியம்மன், பண்ணாரி, திருவேற்காடு, திண்டிவனம், விழுப்புரம், கோலியனூர், தாயமங்கலம், கீழ்மாந்தூர், ஒழுகை மங்கலம், திருவம்பட்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மாரியம்மன் தன் சக்தியை புரிந்துகொள்ளாத பிற மதத்தினருக்கும் அருள் புரிந்திருக்கிறாள். அண்மைக் காலம் வரை நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் பல மாரியம்மன் திருத்தலங்களுக்கு பொருளுதவியும் காணிக்கையும் செலுத்தியுள்ளனர். அதே போல் முகமதியர்களும் பல இடங்களில் மாரியம்மனை தெய்வமாகப் போற்றி வணங்கி வருகின்றனர்.
மாரியம்மன் எல்லா ஊர்களிலும் எல்லா சமூகத்தினராலும் வழிபடப்படும் தெய்வம். அவளுக்கு பலப் பலப் பெயர்கள். பல பெயர்கள் அவ்வூரின் பெயரிலோ அல்லது அமைப்பிடத்தின் பெயரிலோ வழங்கப்படும். சமயபுரம் மாரியம்மன், கோட்டை மாரியம்மன், சாலை மாரியம்மன், சோலை மாரியம்மன் போன்ற பெயர்கள் இவ்வாறு எழுந்தவையே. பல இடங்களில் புகழ் பெற்ற கோயில்கள் போல் தங்கள் பகுதியிலும் அமைய வேண்டுமென்ற நோக்கில் திருக்கோயில் கட்டுகின்றனர். அவ்வாறு கட்டும்போது, புகழ்பெற்ற அவ்வூருக்குச் சென்று அங்குள்ள திருக்கோயிலிலிருந்து மண்ணெடுத்து வந்து புதிதாகக் கட்டும் கோயிலில் வைத்து கட்டுவர். பல இடங்களில் சமயபுரம் மாரியம்மனும், திருவேற்காடு மாரியம் மனும், அங்காள பரமேச்வரியும், பெரிய பாளையத்தம்மனும் மட்டு மல்லாமல் எல்லா தெய்வங்களுமே அதே பெயரில் பல இடங்களில் கோயில் கொள்வது இந்த வகையில்தான்.
தமிழ்நாட்டில் மாரியம்மன் வழிபாடு நெடுங்காலமாக இருந்து வந்தாலும் பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் அவை திருக்கோயில்களாக உருப்பெற்றது என்பது தெரிகிறது.
நாதமும் அவளே! வேதமும் அவளே !
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை