மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - பாம்பு வழிபாடும் புற்று வழிபாடும்
மஹா மாரியம்மன்
ஆடி மாத சிறப்புகள்
பாம்பு வழிபாடும் புற்று வழிபாடும்
கறையான்கள் அற்புதமாக கட்டுவது புற்று. ஆனால் அதில் குடியிருப்பது யார்? பாம்பு ! வயல் வரப்புகளில், மணற்பாங்கான இடங்களில் தானாகவே தோன்றிப் பெருகுவது போல் காட்சி தருகிறது. மாதங்கள் பல கடந்து மண் இறுகிய புற்று, மழையில் விரைவில் கரைவதில்லை. கறையான்களின் உழைப்பால் மெதுவாக வளர்வதுண்டு.
புற்றுகள் கவசமாக விளங்க அவற்றில் மறைந்திருந்த சுயம்பு லிங்கங்கள் வெளிப்பட்டன என்று பல தலபுராணங்கள் கூறுகின்றன. திருவலம் என்ற திருத்தலத்தில் வில்வ வனத்தின் ஒரு பகுதியில் பசு ஒரு புற்றின் மீது பாலைச் சொறிந்தது. புற்று மண் கரைய அங்கே சுயம்புலிங்கம் தோன்றியது. திருவாரூர் இறைவன் புற்றிலிருந்து வெளிப்பட்டார். இவருக்கு வன்மீக நாதர் (வன்மீகம் என்றால் புற்று), புற்றிடங்கொண்ட நாதர் என்றொரு திருநாமமும் உண்டு.
புராணங்களில் தவசிகள் பல ஆண்டுகள் தவம் மேற்கொண்டனர் எனவும், அவர்களைச் சுற்றி புற்றுகள் சூழ்ந்தன என்றும் கூறப் பட்டுள்ளது. தவம் செய்ய பல ஆண்டுகள் கடத்தல், தவசிகளின் அசையாத நிலை, சகிப்புத்தன்மை, கடுமையான முயற்சி, மன உறுதி, தவ வலிமை முதலிய அருமையான குணங்களை எடுத்துக்காட்ட அவர்களின் மீது புற்றுகள் படர்ந்தன என குறிப்பிட்டுள்ளனர்.
பாம்பு, புற்று வழிபாடுகளில் அச்சம் பக்தியாக மலர்ந்தது. பாம்பின் தலைவன் நாகராஜனை தெய்வமாக வழிபட்டனர். புற்று இருக்கும் இடங்களிலெல்லாம் இந்த புற்று வழிபாடு சிறப்பு பெறுகிறது.
வாரத்தில் செவ்வாய், வெள்ளி இரு நாட்களும் புற்று வழிபாட்டிற்கு உகந்தது. ஆண்டில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி நாக பஞ்சமி; ஐப்பசி மாத வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தி. புற்றுக்கு இருவேளையும் பால் வைத்து, விளக்கேற்றி சூடம் ஏற்றி மிகுந்த பயபக்தியுடன் விழாவாகவே மக்கள் கொண்டாடுகின்றனர்.
புற்றை யாரும் சிதைப்பதில்லை. குடும்ப நலனுக்காகவும் உடல் நலனுக்காகவும் புற்று வழிபாடு செய்கின்றனர். குறைப்பிரசவம் உண்டாகாமல் தவிர்க்கவும், நோயின் தாக்குதல் தணியவும், சர்ப்ப தோஶம் நீங்கவும் புற்று வழிபாடு துணை புரிகிறது. பொங்கல் வைப்பது கிராம மக்களின் சிறந்த வழிபாட்டு முறை. நினைத்தது நிறைவேற மஞ்சள் நூலால் புற்றைச் சுற்றி கட்டி வழிபடுகின்றனர். எலுமிச்சம் பழம் வைத்து மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
புற்றுக்கு நைவேத்தியம் பால், பழம் மற்றும் பொங்கல். புற்றில் காணிக்கைப் பொருட்களுக்கு பூச்சூட்டி கருப்புத் துணியுடனும், சந்தனத்துடனும் அந்தி நேரத்தில் செலுத்த நாகராஜன் நிறைவடை வான். இவன் மக்களை துன்புறுத்துவதில்லை. புற்று மண் பிரசாதம் தெய்வத் தன்மையும், மருத்துவ குணமும் கொண்டது. நாக வழிபாடு சிறப்பாக நடைபெறும் கோயில்களில் புற்று மண்ணே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
புற்று மாரியம்மன்
பாம்பு வழிபாடு முருகனுடன் தொடர்புடையது. புற்று வழிபாடு மாரியம்மனுடன் தொடர்புடையது. மாரியம்மன் சிவபெருமானைக் குறித்து தவம் செய்த போது அவளைச் சுற்றி புற்று மூடிக் கொண்டதாகவும், அவள் இடுப்பிலிருந்து வேப்ப மரம் தோன்றி அவள் உடலைத் துளைத்து வளர்ந்ததாகவும் ்மாரியம்மன் கதைப் பாடல்சு கூறுகிறது. அவளுக்கு கோட்டை அமைப்பது போல் முப்புரமும் அது படர்ந்து வளர்ந்ததாக அது கூறுகிறது.
பெரும்பாலும் மாரியம்மன் ஆலயங்களில் புற்றுகள் இருப்பது வழக்கம். மாரியம்மன் பாம்பு வடிவத்தில் புற்றில் உறைகிறாள். மாரியம்மன் கோவில் கருவறையையும், புற்றையும் இணைக்கும் ரகசிய வளை ஒன்று உண்டு என்று நம்புகின்றனர். மாரியம்மன் கோயிலுக்கு உள்ளே அல்லது வெளியே அமைந்த புற்றினை புற்று மாரியம்மன் என்று வழிபடுகின்றனர். புற்றின் துவாரத்தின் வழியே படமெடுத்து நிற்கும் பாம்பை தரிசிப்பது என்பது தெய்வ தரிசனம் கிடைத்தது என்றே கருதுகின்றனர்.
நாகபூஜை
வழிபாடு மூடத்தனமான வழிபாடாக பலரால் கருதப்பட்டாலும் இத்தகைய வழிபாட்டினை ஒதுக்கித்தள்ள முடியாது. பாம்பென்றால் படையும் நடுங்கும். படமெடுத்து வரும் பாம்பிலும் பரம்பொருளைக் காணும் பாரம்பர்யம் நம்முடையது. பாம்பிற்கு பால் வார்க்கிறோம். புற்றைக் கோயிலாகக் கும்பிடுகிறோம். பாம்போடு சம்பந்தமே இல்லாத தெய்வமில்லை எனலாம்.
கிராமங்களில் மரத்தடிகளில் பாம்பைக் கல்லில் செதுக்கி வைத்து மஞ்சள் பூசி மக்கள் வழிபடும் காட்சியைக் காணலாம். புற்றுக்கு மஞ்சள் பூசி மக்கள் வழிபடும் காட்சியைக் காணலாம். சிவபெருமானின் கழுத்தில் பாம்பு சுற்றிக்கொண்டிருக்கிறது. மிகவும் துணிச்சலானது. ஏனென்றால் இருக்கும் இடம் அப்படி. மஹாகணபதியின் திரு வயிற்றை பாம்பு அலங்கரிக்கிறது.
மஹாவிஶ்ணுவிற்கு பாம்பே படுக்கையாக இருக்கிறது. ஸுப்ரமண்யருக்கு நாகராஜா என்று பெயர். பல இடங்களில் அவருக்கு நாகரூபமாகவே வடிவமைத்துக் கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள்.
விஶப்பாம்பு நல்ல பாம்பாக மாறிவிட்டால் அது ஸுப்ரஹ் மண்யரின் காலடியில் மயிலுக்குப் பக்கத்திலேயே இடம் பிடித்துவிடுகிறது. அது போலவே கருடவாஹனரான விஶ்ணுவுக்கு நின்றால் குடையாகவும் அமர்ந்தால் ஸிம்ஹாஸனமாகவும், படுத்தால் அரவணையாகவும் உயர்நிலையை அடைகிறது.
அம்பிகையிடமோ பாம்பு நிரந்தர இடத்தைப் பெறுகிறது. மாரியம்மனே பாம்பாக வந்து அருள் புரிவதாகவும், புற்றில் உறைவதாகவும் மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை உண்மையானது. பல கோயில்களில் பாம்பு மாரியம்மனுக்குக் குடையாக இருக்கிறது.
சூரியனை ராகுவும், கேதுவும் பிடிப்பதே கிரகணபுண்ய காலமாகும்.
சக்தியின் வடிவாக நாகங்கள் போற்றப்படுகின்றன. இதனால் எல்லா தெய்வங்களுமே நாகத்துடன் ஏதோ ஒரு விதத்தில் இணைக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நம் உடலிலும் குண்டலினி சக்தி நாக வடிவாகவே இருப்பதாக யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
சர்ப்ப வழிபாடு வேதகாலம் தொட்டே உள்ளது. ராகு, கேது நாக வடிவுடையன. குழந்தை பாக்கியம் இல்லாமை, பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாக இருப்பது. நோயில் வீழ்ந்துவிடுதல், குழந்தைகளைப் பிரிந்து வாடுதல் இவையெல்லாம் நாக தோஶத்தினால் ஏற்படும். நாக தேவதையை மனதார வழிபட இந்த தோஶம் நிவர்த்தி பெற்று அனைத்து நலமும் ஏற்படும். நாக தோஶம் நீங்க ராகு, கேது கோள்களை முறையாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு விளக்கேற்றி ராகு, கேது நாமாவளியால் மலரிட்டு அர்ச்சித்து பூஜை செய்ய தோஶங்கள் விலகும். விருப்பம் பூர்த்தியாகும். ராகு கேது தோஶங்களினால் பாதிக்கப்பட்டு கல்யாணமாகாதவர்கள் பிரதி ஞாயிறு இராகு காலத்தில் துர்க்கையை தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. தொடர்ந்து 11 வாரம் செய்து 12வது வாரம் குங்கும அர்ச்சனை செய்தல் நல்லது.
திருமணமானவர்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபட பிரதி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி 108 எலுமிச்சை மாலை அம்மனுக்கு சாற்றி வழிபட தோஶ நிவர்த்தி ஏற்படும்.
பலவிதமான இன்னல்களால் பரிதவிப்பது கேது தோஶத்தினால். பிரதி செவ்வாய்க்கிழமை பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வீழ்ந்து வணங்கி வலம் வந்தால் நலம் பெறலாம். ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்குப் பால் தெளித்தல் நலம் பயக்கும்.
அரச மரத்தினடியிலோ அல்லது வேப்ப மரத்தின் அடியில் வைத்து வணங்கப்படும் நாகர்களுக்கு எண்ணெய் தடவி, பால் அபிேஶகம் செய்து மஞ்சள் பூசி, குங்கும, சந்தனம் இட்டு, பாக்கு, வெற்றிலை, சர்க்கரை பொங்கலுடன், கற்பூர ஆரத்தி செய்ய அனைத்து நாக தோஶமும் நீங்கிவிடும். தீய பழக்க வழக்கங்கள் நீங்க, நல்ல படிப்பறிவு பெற அம்மனுக்கு பால் காவடி எடுத்தும், வாழ்வில் ஏற்படும் அவமானங்கள் நீங்க பிரதோஶம் அன்று மவுனவிரதமிருந்து உமா மகேஸ்வரியையும், நாகவல்லி அம்மனையும் பிரார்த்தனை செய்தல் நலமளிக்கும். ராகு, கேது தலங்களான காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று வழிபடுதல் நலம். சர்ப்பதோஶ நிவர்த்தி கருடபகவானை வழிபடுவதால் கிடைக்கும்.
நாகசதுர்த்தி விரதம்
ஆடி மாதம் வளர் பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாகதெய்வத்தை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும். நாக சதுர்த்தியன்று நாகத்தின் உருவச் சிலையை பிரதிஶ்டை செய்தால் சந்தான பாக்யம் உண்டாகும். நாக தோஶங்கள் அகலும். பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்களுக்காக நாக சதுர்த்தி விரதம் அனுஶ்டிக் கின்றனர். புற்று இருக்குமிடம் சென்று பால் வார்த்து, பூமாலை சூட்டி, தீபம் காட்டி புற்று மண்ணையே நெற்றியில் இட்டுக்கொண்டு வழிபாடு செய்கின்றனர்.
புற்று மண்ணையே ரக்ஷையாக எடுத்து வந்து அதனை சகோதர சகோதரி களிடம் கொடுப்பார்கள். அதனை அவர்கள் கை கால்களில் தடவி ஸ்நானம் செய்வார்கள்.
பாம்புகளை வழிபடுவது வேதகாலத்திலேயே இருந்துள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ இப்பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ நாகத்திற்குத் தீங்கு விளைவித்திருந்தால் அது நாகதோஶமாக நம் பரம்பரையையே ஆட்டிப்படைக்கும்.
குடும்ப ஒற்றுமை, குழந்தை இல்லாமை, ஊனமான குழந்தை, அடிக்கடி நோயின் தாக்கம், குடும்பத்தில் பிரிவு போன்ற பலவும் நாகதோஶத்தினால் ஏற்படும்.
இவை நீங்க நாக பூஜை செய்வதும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் புற்றுக்கு பால் வார்ப்பது, நாகம் பிரதிஶ்டை செய்யப்பட்ட இடங்களில் நாக சிலைகளுக்கு அபிேஶக ஆராதனைகள் செய்வதும் தோஶத்தை குறைக்க உதவும்.
வீட்டில் பாம்பு வந்தால் கருடனை நினைத்து
அபஸர்ப்ப ஸர்ப: பத்ரம் தேதூரம் கச்ச மஹாயசா’:
என்று இரு கைகளாலும் தட்டினால் பாம்பு மறைந்துவிடும். குழந்தைகளின் நலனுக்காகவும் தாய் நாகசதுர்த்தி விரதம் இருப்பாள். இந்த நாளில் பெண்கள் உபவாசம் இருப்பது நலம்.
முன்னொரு காலத்தில் ஒரு ஏழைக்கு இரு மகள்கள் இருந்தனர். முதல் பெண்ணை ஒரு பலசாலிக்கும் இரண்டாவது பெண்ணை ஒரு முடவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இரண்டாவது பெண் மனமுருகி, தனக்கும் நல்வாழ்வு வேண்டும். குழந்தை செல்வங்கள் நன்றாக அமைய வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினாள்.
அவளுடைய வேண்டுதலுக்கு மன மிரங்கி சிவபெருமான் பார்வதி தேவியுடன் அவள் முன் தோன்றி, நாகபூஜை செய்து வருமாறு கூறினார். சிவபெருமானின் கூற்றுப் படி அப்பெண்ணும் தினமும் நாகபூஜை செய்து வழிபட்டு வந்தாள். விரளி மஞ்சளை இழைத்து அதில் கஜபத்ர இழை (திரி) தோய்த்து நாகரை வைத்து வழிபாடியற்றி பூஜை செய்யச் செய்ய, கணவர் உடல் நலம் பெற்று முடம் நீங்கி பலசாலியானார். அவளும் கருவுற்று குழந்தைகள் பெற்று சந்தோஶமாக வாழ்ந்தாள்.
ஆடி வெள்ளி முழுவதும் நாகபூஜை செய்வது மிகவும் விசேஶம்.
தேவி பாகவதம் போற்றும் நாக தேவதை
நாகங்கள் எப்படித் தோன்றின என்பதை தேவி பாகவதம் விவரிக்கிறது. பிரம்மாவின் மானஸ புத்திரரான காஶ்யப மகரிஶிக்கு ஏற்பட்ட ஆசையின் விளைவுதான் அன்னை சக்தியின் அம்சமான அரவங்கள் தோன்றக் காரணம். காஶ்யப மகரிஶி தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி தற்போது மானஸரோவர் என்றழைக்கப்படும் சுந்தரவதனம் பகுதிக்குச் சென்று சிவபெருமானை வேண்டித் தவம் இருந்தார். அவரது மனதிலிருந்து ஒரு பெண் தோன்றினாள், காஶ்யபரின் மனதிலிருந்து பிறந்ததால் இவள் மானஸா தேவி எனப்பட்டாள். இவளே நாகங்களின் தலைவி எனப்பட்டாள். இவள் மிகுந்த அழகும், சந்திரகாந்த பிரகாசமும் உடையவள். அவள் உரிய பருவம் அடைந்ததும் ஜரத்காரு என்பவரை மணம் முடித்து வைத்தனர். காலப்போக்கில் அவர்கள் இருவருக்கும் ஆயிரக் கணக்கில் ஸர்ப்ப குழந்தைகள் பிறந்தன. அதில் ஆஸ்திகன் என்ற ஸர்ப்பத்தை மட்டும் தங்கள் பாதுகாப்பிற்காக வைத்துக் கொண்டு மற்றவைகளை எல்லாம் பகலெல்லாம் பூமிக்கடியில் வாழவும், இரவுகளில் பூமியின் மேல் சஞ்சாரம் செய்து இரைதேடிக் கொள்ளவும் அனுமதி அளித்தனர். பிறகு சிவபெருமானின் அருளால் மானஸரோவர் பகுதியில் உயர்ந்த இடத்தில் நாகதேவியாக உருக்கொண்டு அமர்ந்தாள்.
இந்த நாகதேவி வழிபாடு கடுமையான பல தோஶங்களைப் போக்கவல்லது.
நாக பஞ்சமி நோன்பு
ஆடி அமாவாசை கழிந்து வரும் பஞ்சமி தினத்தில் இந்நோன்பை கடைபிடிக்க வேண்டும். கௌரி அம்மனை நாக வடிவில் ஆராதிக்க வேண்டும். நாகருக்கு பூஜைசெய்து தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு முதலியவற்றுடன் நிவேதனம் செய்ய வேண்டும். பசும்பாலில் தோய்த்த மஞ்சள், புற்று மண் தடவப்பட்ட 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடுகளில் 10 முடிச்சுகள் போட்டு அம்மனுக்கு வலது புறத்தில் முன்னரே வைத்துவிட்டு பூஜை முடிந்ததும் அதை தங்கள் வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் சகோதரர்களின் கைகளில் சகோதரிகள் கட்டுவார்கள். இதனால் சகோதர சகோதரிகள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
வீட்டிற்கு அருகில் உள்ள புற்றுக்குச் சென்று சிறிது பால் தெளித்து விட்டு பழம், வெற்றிலை, பாக்கு, கொழுக்கட்டை முதலிய வற்றை புற்றுக்கருகில் வைத்துவிட்டு வரலாம். வீட்டில் பூஜையில் நாகம் வைத்திருந்தால் அதற்கும் பாலாபிேஶகம் செய்யலாம்.
இந்நோன்பு உடன் பிறந்தவர்களின் நலனுக்காகவும் சில இடங்களில் அனுஶ்டிக்கப்படுவதால் அன்று உடன் பிறந்தவர்களை வீட்டிற்கு அழைத்து அறுசுவை உணவு படைத்து தாம்பூலம் கொடுத்து அவர்களுக்குத் தேவையான உடைகளைக் கொடுப்பார்கள்.
ஆடி மாதம் முழுவதும் எவ்வாறு அம்மன் கோயில் கொண்ட இடங்களிலெல்லாம் விசேஶமோ அதேபோல் நாக தெய்வத்திற்கும் விசேஶமான மாதம். நாக பூஜை செய்து நாகங்களை வழிபடுவதே சிறந்த முறையாகும். புற்றுக்கு மஞ்சள், சந்தனமிட்டு பால், முட்டை களைப் படைத்து வணங்குவதால் அனைத்து தோஶங்களும் விலகும்.
புற்றுக்கு வளைகாப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசிபாளையம் மாருதி நகரில் ராஜநாகலக்ஷ்மி அம்மன் குடிகொண்டிருக்கும் புற்றுக்குத்தான் ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
அதற்கு முன் ஆடி மாதத்தில் எந்த வெள்ளிக்கிழமையில் வளைகாப்பு நடத்துவதென்று குறி கேட்கப்படுகிறது. அம்மன் குறிப்பிடும் வெள்ளிக்கிழமையில் வளைகாப்பு வைபவம் கொண்டா டப்படுகிறது. எல்லா ஊர்களிலிருந்தும் அன்று குழந்தைகளும் பெண்டிரும் திருக்கோயிலில் கூடுகின்றனர். முதலில் ஐந்து வயது குழந்தைக்கு வளையல் அணிவிக்கப்பட்டு பின் ராஜநாகலக்ஷ்மி குடி கொண்டிருக்கும் புற்றுக்கு வளையல் சாற்றப் படுகிறது. அதன்பின் கோயிலுக்கு வந்திருக்கும் கர்ப்பிணி பெண்டிருக்கு வளையல்காப்பு நடத்தப்படுகிறது. பின்னர் எல்லா பெண்களுக்கும் வளையல் பிரசாதமாகத் தரப்படுகிறது.
நாகராஜா மற்றும் நாககன்னி என நாகங்களுக்கென தனி ஊரே அமைந்துள்ள இடம் நாகர் கோவில்’. இங்கு நாகர்களுக்கெனத் தனிக் கோயில் உள்ளது. கோயில் முழுவதும் நாகர்களின் சிலைதான். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் இவ்வூரில் உள்ள நாக தெய்வத்தை வணங்குவதன் மூலம் தோல் வியாதிகள் நீங்குவதுடன் நாக தோஶமும் விலகும். இத்திருக்கோயிலில் ஐந்து தலை நாகரே மூலவர். இவரைச் சுற்றி எப்பொழுதும் நீர் சூழ்ந்து கொண்டிருக்கும் இங்கு நாகலிங்க பூக்கள் பூக்கும் மரங்கள் நிறைய உண்டு. இப்பூவினாலே நாகதேவதை அர்ச்சிக்கப்படுகிறார்.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை