Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - மாரியம்மனின் வரலாறுகள்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

மாரியம்மனின் வரலாறுகள்



ரேணுகா தேவியின் உடல் வேறு, தலை வேறாக மாறியதால் மாரியம்மன் என்றும், உடம்பில் முத்துக்களை விதைப்பதால் முத்துமாரி அம்மன் என்றும் போற்றுகின்றனர். முத்துமாரியம்மனே முத்தலையம்மன் என்றும் முத்தாலம்மன் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள். 

சிவபெருமானிடம் வரம் பெற்ற ரேணுகா தேவி, அந்த வரத்தைச் சோதித்துப் பார்ப்பதற்காக சிவபெருமானுக்கே முத்தை விதைத்தாள். இதனை சற்றும் எதிர்பாராத பரமன் அந்த முத்துக்களால் கடுமையாகப் பாதிக்கப்பட அதனை உடனே நீக்குமாறு ரேணுகா தேவியிடம் வேண்டினார். 

அதனை நீக்குவதற்கு வழியை அவளும் அறியாததால் அவரையே அதற்கான வழியைக் கூறுமாறு வேண்டினாள். சிவபெருமான் ரேணுகா தேவி துன்பப்பட்ட போது உண்ட துளிமாவும், கூழும் குடித்து வேப்பிலையைக் கைக் கொள்ள முத்துக்கள் இறங்கி விடுமெனக் கூறினார். ரேணுகா தேவியும் அவ்வாறே செய்ய முத்துக்கள் இறங்கி பூரண குணமடைந்தார். 
மேலும் சிவபெருமான் ரேணுகா தேவியிடம், தனக்கு அளித்தது போல் உலக மக்களுக்கு முத்தை அளித்தால் அவர்களால் அதனை தாங்க முடியாதென்றும், அதனால் இதில் பத்தாயிரத்தில் ஒரு பகுதியை மட்டுமே மனிதர்களுக்கு போடலாமென்றும் அதுவும் இப்பொழுது செய்தது போல் வேப்பிலையைக் கைக் கொண்டு, துளிமாவும், கூழ் கஞ்சியும் படைத்தால் இறங்கி விடுமென்றும் கூறி  ரேணுகா தேவியை ஆசீர்வதித்து இதனை தவறுகள் செய்யும் மக்களுக்கு ஒரு படிப் பினையாக மட்டுமே போட வேண்டும் என்று கூறி மறைந்தார். அதன்படியே ரேணுகா தேவியும் மாரியம்மனாக, முத்தாலம்மனாக, முத்துமாரியாக இன்னும் பல்வேறு பெயர்களில் எல்லா ஊர்களிலும் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள். இனி மாரியம்மன் பற்றி வழங்கும் பல்வேறு கதைகளைக் காண்போம். 

1. ஸ்ரீ ரேணுகா தேவி 

ரைவதன் என்ற மன்னனுக்கு பார்வதி தேவி, குழந்தையாகப் பிறந்தாள். அவருக்கு ரேணுகா  என்று பெயரிட்டு சீராட்டி வளர்த்தனர். அவள் வளர்ந்து பருவம் எய்தியவுடன் தனக்கு வேண்டிய கணவரை தானே தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறி மூவுலகங்களையும் சுற்றி வர படையுடன் புறப்பட்டாள். இடையில் ஜமதக்னி முனிவரே தன் கணவர் என்ற அசரீரி வாக்குக் கிணங்க நேராக ஜமதக்னி முனிவரைக் காண வந்து தற்போது சந்தவாசல் என்றழைக் கப்படும் சந்த துவாரம் என்ற இடத்தில் தன் படைகளுடன் தங்கினாள். படையுடன் ஒரு பெண் வந்திருப்பதை கேள்விப்பட்ட ஜமதக்னி முனிவர் கோபமுற்று ரேணுகாவின் படைகளுடன் சண்டையிட தன் சீடர்களை ஏவினார்.ஆனால்ரேணுகாவின் படையில் இருந்த சாமுண்டா தேவி தன் நெற்றிக்கண் ஜ்வாலையால் அவர்களை சிதறி ஓடச் செய்தாள். 

இதைக் கண்ட ஜமதக்னி முனிவர் தன் கமண்டலத்தில் அடங்கி யிருந்த ஏழு நதிகளை ஓடச் செய்ய, அவை சாமுண்டா தேவியின் தீஜ்வாலையை அணைத்தன. பின்னர் சாமுண்டியை செங்குவளை மலர் மாலையால் கட்டி கமண்டல நதிக் கரையில் வைத்துவிட்டார்கள். இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரேணுகா தேவி, ஜமதக்னி முனிவர் மற்றும் அவருடைய சீடர்களின் மந்திர வலிமை எண்ணி வியந்து போரை நிறுத்திவிட்டு, உத்தமி என்ற தன் தோழியுடன் முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தாள். ஆனால் இவள் வருகையை விரும்பாத சீடர்கள் அவள் வர முடியாதவாறு தடைகளை ஏற்படுத்த, அவற்றைத் தாண்டி ஆஸ்ரமத்தில் பிரவேசித்தாள் ரேணுகா. 

ரேணுகாவை விரட்டிய ஜமதக்னி முனிவர் அவளுடைய தோழியான உத்தமியை அங்கேயே சிலையாக்கி ஸ்தாபித்துவிட்டார். விரட்டப்பட்ட ரேணுகா அருகில் இருந்த ஒரு புற்றுக்குள் நுழைந்து தன் உடல் முழுவதையும் கல்லாக்கிக் கொண்டு கழுத்துக்கு மேற்பட்ட பகுதியை மட்டும் வெளியில் வைத்துக்கொண்டிருந்தாள். 

அங்கு வந்த முனிவர் ரேணுகா தேவியிடம் அவள் வந்த நோக்கத்தை வினவ, அவளோ முனிவரை மணக்கவே வந்ததாகத் தெரிவித்தாள். 

தன் ஞானதிருஶ்டியால் ரேணுகையின் பிறப்பறிந்த ஜமதக்னி முனிவர் அவளைத் திருமணம் செய்துகொண்டார். அது முதல் முனிவரின் ஹோமத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து, கணவரை நினைத்து, இறைவனை துதித்து ஆற்று மணலால் ஒரு குடம் செய்வாள். அவளுடைய கற்பின் வலிமையால் இது அவளுக்கு சாத்தியமாயிற்று. அக்குடத்தில் ஆற்று நீரை நிரப்பியபின் தியானிக்க, அங்கு ஒரு நாகம் தோன்றும். 

அந்நாகத்தை சுருட்டி சும்மாடாக தலையில் வைத்துக்கொண்டு, அதன் மீது நீர் நிரம்பிய மண் குடத்தை எடுத்து வந்து கணவரின் பூஜைக்கு வைப்பாள். 

இதற்கிடையில் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் நான்கு குழந்தைகள் பிறந்தன. நான்காவதாகப் பிறந்தவரே பரசுராமர். இவர் விஶ்ணுவின் அம்சமானவர். (சில புராணங்கள் இவர்கள் ஐந்து குழந்தைகள் எனக் குறிப்பிடும்) ஒரு நாள் வழக்கம் போல் ரேணுகா தேவி விடியற் காலையில் ஆற்றுக்கு சென்று நீராடு கையில் விண்ணில் பாடிக் கொண்டே பறந்து செல்லும் கந்தர்வனின் பிம்பத்தை நீரில் கண்டாள். அபூர்வமான அந்த கானம் அவள் மனதை மயக்கியது. நீரில் கண்ட அந்த கந்தர்வனின் ரூப லாவண்யம் அவள் மனதை சஞ்சலப்படுத்தியது. பின்னர் சுதாரித்துக் கொண்டு மண்பானை செய்ய முயல, முடியாமற் போனது. வேறு வழியின்றி தனது ஸ்நானத்தை முடித்துக்கொண்டு ஆஸ்ரமம் திரும்பி தன் கணவரிடம் நடந்ததைக் கூறினாள். 

நடந்ததை தன் ஞானதிருஶ்டியால் அறிந்த ஜமதக்னி முனிவர் தன் மனைவி மன கற்பு தவறிவிட்டாள் என்று தன் பிள்ளைகளிடம் ரேணுகாவின் சிரத்தை அறுக்குமாறு ஆணையிட்டார். முதல் மூன்று பிள்ளைகளும் ஒத்துழைக்காததால், அவர்களை சபித்துவிட்டு, பரசுராமரிடம் அப்பணியை ஒப்படைத்தார். 

தன் மகனுக்கு பழிச்சொல் ஏற்படுவதை விரும்பாத ரேணுகா, அவ்விடத்திலிருந்து ஓடி, ஒரு மலையடிவாரத்தை அடைந்தார். அதற்கு மேல் அவளால் ஓட முடியவில்லை. அவளைத் தொடர்ந்த பரசுராமர், தந்தை சொல் மிக்க மந்திரமில்லைீ என்றபடி உடனே தன் கோடாலியால் அன்னையின் சிரத்தை வெட்டினான். பின் தந்தையிடம் சோகமே வடிவாக வந்து நிற்க, மகனின் வேதனையின் காரணமறிந்த முனிவர் அவரை சமாதானப்படுத்தி, அவருக்கு வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூற, உடனே பரசுராமர் தன் தாய்க்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டு மென்றும்,தன் சகோதரர்களின் சாபத்தைப் போக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 

அவ்வாறே ஆகுக என்று வரமருளிய முனிவர், தன் மகன்களின் சாபத்தை மாற்றி முன்னிருந்த நிலையை அடைய வைத்தார். பின்னர் பரசுராமரிடம் தன் கமண்டல நீரைத் தந்து, ரேணுகா தேவி வெட்டுப் பட்டு கிடக்கும் இடம் சென்று தலையுடன் உடலை பொருத்தி நீரைத் தெளிக்க அன்னை உயிர் பெறுவாள் என்று கூறினார். 

ஜபம் செய்த கமண்டல ஜலத்துடன் தன் தாய் வெட்டுண்டு கிடந்த இடத்தை அடைந்த பரசுராமர், தன் தாய் சீக்கிரம் உயிர் பிழைக்க வேண்டுமென்ற பதட்டத்திலும் அவசரத்திலும் தன் தாயின் தலையுடன் அங்கு வெட்டுண்டு கிடந்த வேறொரு பெண்ணின் உடலைப் பொருத்தி நீரைத் தெளிக்க அந்த உடலும் தலையும் சேர்ந்து உயிர் பெற்றது. தன் தவறை உணர்ந்த பரசுராமர், மீண்டும் யோசித்து தன் தாய் உடலுடன் மற்ற பெண்ணின் தலையைப் பொருத்தி நீர் தெளிக்க அவளும் உயிர் பெற்று எழுந்தாள். புது உடலுடன் எழுந்த ரேணுகா தேவி பரசுராமருடன் ஜமதக்னி முனிவரிடம் தன் குறையை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுவதற்காக கிளம்பினார். 

இதற்கிடையில் சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருத வீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்த வீர்யார்ஜுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்த வீர்யார்ஜுனன் தத்தாத்ரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்ரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனிவர் பரந்தா மனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்ரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்ரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான்.  

ஒரு முறை கார்த்தவீர்யாஜுனன் ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு தன் பரிவாரங்களுடன் வந்திருந்தான். முனிவர்  அனைவரும் தன் கிருஹத்தில் வயிறார உணவருந்திவிட்டு செல்ல வேண்டுமென்று விண்ணப்பித்தார். மன்னனுக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இந்த முனிவர் தனக்கும் தன் பரிவாரங்களுக்கும் உணவு பரிமாறுவார் என்று எண்ணிய மன்னவனின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட முனிவர், தன்னிடமுள்ள தெய்வீக பசுவான காமதேனுவின் பெருமைகளைச் சொன்னது மட்டுமல்லாமல் அதன் ஆற்றலால் எல்லோருக்கும் அறுசுவை விருந்து படைத்தார். அதனால் மிகவும் மகிழ்ந்த மன்னனின் மனத்தில் சபலம் உண்டாயிற்று. 

குடிசையில் அமர்ந்து கொண்டு தினந்தோறும் ஹோமங்களை செய்து கொண்டு காலம் தள்ளும் முனிவருக்கு காமதேனுவினால் அதிக பயன் இல்லை. ஆனால் இந்த பசு தன்னிடம் இருந்தால் தன் குடிமக்களின் பஞ்சம் பட்டினிப் போக்க உதவுமேசு என்று நினைத்த மன்னன், அப்பசுவை தன்னிடம் தரும்படி கேட்டான். 

ஆனால் தான் தினமும் செய்யும் ஹோமங்களுக்கும், யாகங்களுக்கும் இப்பசு பெரிதும் உதவி செய்வதால் தன்னால் தரமுடியாதென்று மறுத்துவிட்டார். இறுதியில் வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட, காமதேனுவின் துணையுடன் எல்லோரையும் விரட்டியடித்துவிட்டார் முனிவர். தோற்றோடிய கார்த்தவீர்யாஜுனன் எப்படியாவது காமதேனுவைக் கைப்பற்ற நேரம் பார்த்துக் கொண்டிருந் தான். கார்த்தவீர்யாஜுனன் ஆயிரம் கைகளை உடையவன். தத்தாத்ரேயரிடம் வரங்களைப் பெற்று வல்லமையுடன் திகழ்பவன். அஶ்டமா சித்திகள் கைவரப்பெற்றவன். 

ரேணுகா தேவி வெட்டுண்டதையும், அவளை மீண்டெழ செய்ய பரசுராமர் சென்றுவிட்டதையும், ஜமதக்னி முனிவர் நிஶ்டையில் இருப் பதையும் அறிந்த கார்த்தவீர்யாஜுனன் வேகமாக ஆஸ்ரமத்திற்கு வந்து காமதேனுவைக் கவர்ந்து சென்றான். 

தன் தாய் ரேணுகா தேவியுடன் ஆஸ்ரமம் திரும்பிய பரசுராமர், நடந்ததை அறிந்து வெகுண்டு கார்த்தவீர்யாஜுனன் இருக்குமிடம் சென்று அவனது ஆயிரம் கரங்களையும் ஒவ்வொன்றாக வெட்டி வீழ்த்தி அவனைக் கொன்று காமதேனுவை மீட்டு வந்தார் பழிவாங்க சமயம் பார்த்திருந்த கார்த்தவீர்யார்ஜுனனின் புதல்வர்கள், பரசுராமர் அன்னையைக் கொன்ற பாபம் நீங்க தவம் செய்ய காட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் ஜமதக்னியை கொன்றனர். இதைக் கண்ட ரேணுகாதேவி 21 முறை மார்பில் அடித்துக் கொண்டு அமுத சப்தத்தைக் கேட்டு அங்கு வந்த பரசுராமர் தந்தைக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு வெகுண்டெழுந்தார். சிவபெருமானால் தனக்களிக்கப்பட்ட கோடாலியுடன் சென்று கார்த்தவீர்யாஜுனனின் வாரிசுகள் அனைவரையும் கொன்று குவித்து 21 தலைமுறை அரசர்களை கொல்லப் போவதாக சபதம் செய்து காமதேனுவைக் கைப்பற்றி மீண்டும் ஆஸ்ரமம் வந்தார். 

இவ்வாறு 21 தலைமுறைகள் க்ஷத்திரிய வம்சத்தை அழித்த பரசுராமர் பின்னர் அவரது பித்ருவான ரிசீகரும் மற்ற ரிஶிகளும் கேட்டுக் கொண்டதற் கிணங்க க்ஷத்திரியர்களை வதைப்பதை நிறுத்தினார். தான் செய்த யுத்தத்தில் பலரைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் தீர பல க்ஷேத்திரங்களுக்கும் யாத்திரை செய்தார். பின்னர் குருக்ஷேத்திரத்திலுள்ள சமந்த பஞ்சகம் என்ற இடத்தில் நிரப்பப்பட்ட க்ஷத்திரியர்களின் குருதியைக் கொண்டு தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்து பின்னர் மாபெரும் வேள்வி நடத்தினார். தான் அரசர்களை வென்றதன் மூலம் கிடைத்த எல்லா நாடுகளையும் காச்யபருக்கு அளித்தார். காசியபர்க்கு உடைமையான இந்த உலகம் அன்றிலிருந்து காசினி என வழங்கப்படலாயிற்று. பிறகு திரண்ட செல்வத்தை அந்தணர்களுக்கு தானம் செய்தார். 

எல்லா நிலங்களையும் தானம் செய்தபின் அந்த இடத்தில் வாழ விரும்பாத பரசுராமர் மேற்கு தொடர் மலையுச்சியில் நின்று தனக் கென்று சிறிது நிலத்தை தரும்படி வருண பகவானை வேண்டினார்.   

வருணன் அவர் முன் தோன்றி அவருடைய கோடாரியை சமுத்திரத்தில் எறியுமாறு கூற பரசுராமரும் அவ்வாறே செய்தார். அவர் கோடரி விழுந்த இடம் வரை கடல் உள்வாங்கியது. புதிய நிலப்பரப்பு நீருக்குமேல் எழுந்தது. அந்த இடத்தை வளப்படுத்தி பல திருக்கோயில் களை கட்டினார் பரசுராமர். அவர் உருவாக்கிய இந்த புண்ணிய பூமி பரசுராம க்ஷேத்திரம் என்றழைக்கப்படும் தற்போதைய கேரளா கொங்கணப் பகுதிகளாகும். 

சீதா திருக்கல்யாணம் முடிந்து திரும்பி வரும்போது எதிரில் வந்த இராமரிடம் அவர் சிவ தனுசை முறித்தது பெரிதல்லவென்றும், தன்னிடமுள்ள விஶ்ணுதனுசை நாணேற்றுமாறும் கூற, இராமரும் அவ்வாறே செய்தார். பரசுராமர் தன் அவதார நோக்கம் நிறை வேறியதைத் தெரிந்துகொண்டு, இனி இராமபிரானின் அவதார நோக்கம் நிறைவேற வசதியாக தன்னுடைய விஶ்ணு தனுசை இராமருக்குத் தந்து ஆசீர்வதித்து தீர்த்த யாத்திரை கிளம்பினார். இன்றும் சிரஞ்சீவிகளில் ஒருவராக வாழ்ந்து வருகிறார் பரசுராமர். 

இது இவ்வாறிருக்க தன் கணவர் கொல்லப் பட்டதைப் பார்த்த ரேணுகா தவி அக்னி பிரவேசம் செய்தாள். ரேணுகா தேவியின் கற்பின் பெருமையை உணர்ந்த இந்திரன் மேகங்களை ஏவி மழை பொழியச் செய்து தீக்குண்டத்தில் இருந்த தீயை அணைத்தார். ஆனால் அதற்குள் ரேணுகாவின் மேலாடை தீப்பற்றி எரிந்துவிட்டது. உஶ்ணத்தால் தீக்காயங்களுடன் வெளிப்பட்ட ரேணுகா தேவி தன் உடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளினால் தன்னை மறைத்துக் கொண்டு அருகில் இருந்த சேரிக்குச் சென்றாள். 

சேரி வாழ் மக்கள் தீக்காயங்களுடனும் வேப்பிலை ஆடையுடனும் வரும் ரேணுகாவைப் பார்த்து, இவள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள் போல் தெரிகிறாளேசு என்று மனதுக்குள் எண்ணியவர்களாய், தங்களது வழக்கமான உணவைக் கொடுக்காமல், பச்சரிசியை இடித்து அந்த மாவுடன் வெல்லம் கலந்து கொடுத்து அவளுடைய பசியைப் போக்கினர். தாகத்துக்கு இளநீர் மற்றும் பானகம் கரைத்துக் கொடுத்து தாகம் தீர்த்தனர். வேப்பிலையை பரப்பி அதில் அவளை படுக்க வைத்தனர். மஞ்சளையும் வேப்பிலை யையும் அரைத்து காயங் களுக்கு மருந்திட்டனர். சில தினங்களில் அவள் உடல் தேறியது. 

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சலவைத் தொழி லாளர்கள் வாழும் இடம் நோக்கிச் சென்றாள். வேப்பிலை ஆடையுடன் வரும் ரேணுகாவிற்கு நன்கு துவைத்து உலர்த்தப்பட்ட வெள்ளை யாடை கொடுத்து அணிந்துகொள்ளச் செய்தனர். 

தன் நிலையைக் கண்டு வருந்திய ரேணுகா தேவி சிவ பெருமானைக் குறித்து தவம் செய்தார். சிவபெருமான் அவள் முன் தோன்றி, நடந்ததெல்லாம் விதிப்பயனேயன்றி வேறில்லை. கவலைப்படாதே. உன் கணவர் மீண்டும் உயிர்பெற்றெழுவார்.  உன்னுடன் உயிர் பெற்ற மற்றொரு பெண் உயிர்த்தெழுந்த முனிவரோடுசொர்க்கம் செல்வாள். நீ இவ்வுலகில் விரும்பும் இடத்தில் எழுந்தருளி மக்களைக் காத்தருள்வாய். உன் மீது ஏற்பட்ட கொப்புளங்களை மக்களுக்கு அளித்து அவர்களை நல்வழிப் படுத்துவாய். நீ உண்ட பச்சரிசி மாவும், வெல்லமும், இளநீரும், பானகமும் உன் நிவேதனப் பொருள்களாகட்டும். உன் மானம் காத்த வேப்பிலையை ஆடைகட்டி உன்னை வணங்குவோர் குறை தீர்ந்து நல்வாழ்வு பெறுவர். அந்த வேப்பிலை புனிதமாகி உன் வழிபாட்டிற் குரியதாகும். 

உன்னுடன் உயிர்த்தெழுந்து மேலுலகம் செல்லும் மற்றொரு பெண் அங்கிருந்தபடியே மகா சக்தியுடன் துர்மாரி என்ற பெயருடன் விளங்கி சூதுவாது செய்பவர்களை பிடித்து நோய்களைக் கொடுத்து அவர்களை தண்டிப்பாள். தன் தவறுணர்ந்து திருந்துபவர்களை மன்னிப்பாள்சு என்று கூறி ரேணுகாவை ஆசீர்வதித்து மறைந்தார். 

இறைவனின் வரத்தால் உயிர்த்தெழுந்த ஜமதக்னி முனிவர் விண்ணுலகம் சென்றார். அவர் செய்த தவப் பயனால் சப்தரிஶி மண்டலத்தில் அவர்களுள் இன்றும் ஒளி விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். 

ரேணுகாவுடன் உயிர்த்தெழுந்த மற்றொரு பெண்ணும் ரேணுகா வின் உடல் சம்பந்தத்தால் தன் வினை நீங்கப்பெற்று சிவபெருமான் கொடுத்த வரத்தால் மேலுலகம் சென்றாள். 

சிவபெருமானிடம் வரம் பெற்ற ரேணுகா தேவி தான் தங்கும் இடத்தைத் தேடி வருகையில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அழகிய இடத்தைக் கண்டார். பறவைகளும் புள்ளினங்களும் வேற்றுமை இன்றி ஆடிப்பாடி இன்பமாக வாழ்ந்திருக்கும் அழகை ரசித்தாள். பல முனிவர்கள் அம்மலையில் அமர்ந்து அமைதியாக தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். அவர்களின் வேத கோஶம் அந்த இடத்தை மேலும் ரம்யமாக்கிக் கொண்டிருந்தது. ரேணுகாவின் மன சஞ்சலத்தைத் தீர்க்கும் இடமாக விளங்கியதால் அங்கேயே தங்க திருவுளம் கொண்டாள் ரேணுகா. 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை