Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - திருவேற்காடு கருமாரி அம்மன்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

திருவேற்காடு கருமாரி அம்மன்


வேற்காட்டுத் திருத்தலத்தைக் கேட்டாலும் பெருவினைகள் 
விரைந்தோடும் விதியும் மாறும் 
வேற்காட்டுத் திருத்தலத்தைக் கண்ணுற்றால் எழுபிறவித் 
துன்பமெல்லாம் விரைந்து வீழும் 
வேற்காட்டுத் திருத்தலத்தில் நீரருந்தப் பெரும் பிணிகள் 
உடனீங்கிப் புனிதமோங்கும் 
வேற்காட்டுத் திருத்தலத்தில் திருநீற்றை மெய்யணிந்தால் 
பேரின்ப மெய்தலாமே! 
- தேவி கருமாரி அம்மன் புராணம் 

ஓம்கார நாதத்தில் ஒளிவீசும் அன்னை மண்ணுலக மக்களின் துயரத்தைப் போக்கி நல்வாழ்வு அளிக்கிறாள். போகத்தையும், யோகத்தையும், அருள்கிறாள். ஆதிபராசக்தி வழிபாடே நாளடைவில் பல மாற்றங்கள் அடைந்து கிராம தேவதை வழிபாடானது. வங்காளத் தில் காளி வழிபாடாகவும், கேரளத்தில் பகவதி வழிபாடாகவும், கடைபிடிக்கப்படுகிறது. சக்தி வழிபாடு முதல்முதலாக அதிகமாகக் கவனத்தைக் கவர்ந்த இடம் நேபாளம். மும்மூர்த்திகளின் முச்சக்தி களும் திரண்ட வடிவமே மாரி! இப்பெருஞ்சக்தியே கருமாரி. 

கணபதி பூஜையைப்போல் மாரியம்மன் வழிபாடு இந்தியாவில் தோன்றி கிழக்கிந்திய தீவுகளிலும், மணிபல்லவத்திலும், (நயினாத்தீவு) மொரீஶியஸ் தீவிலும், தென்னாப்பிரிக்காவிலும் பரவியது. 

சிவம், சக்தி, விஶ்ணு, கலந்த தெய்வத் திருவுரு அவள். மூன்று சக்தியும் ஒன்றானவள். பக்தர்கள் மனதில் நிரந்தர இடம் பெற்றவள். கரிய நிறமுடையவள் கருமாரி. அண்டங்கள் அனைத்தையும் படைத்து காப்பவள்.அம்பிகையின் நிறம் பச்சை. அவள் காளி, துர்க்கை, கருமாரி, என்றெல்லாம் மாறும்போது கரிய நிறமுடையவளாக மாறுகிறாள். 

இராமாயணத்தில் ராமனும், பரதனும் கரியவர். பாரதம் இயற்றிய வியாசர் கருப்பு. கிருஶ்ணரும் கரிய நிறத்தவரே. திரௌபதி கரிய நிறத்தவள். அவளது அழகு சுயம்வரத்தில் பலபேரை போட்டியிட வைத்தது. 

சீதையின் கண்மணி போல் விளங்குபவள் ராமர். கருவிழியின் சிறப்பு வேறு உறுப்புகளுக்கு உண்டா? நிச்சயமாக கிடையாது. கருமை என்ற சொல்லுக்கு பெருமை என்று பெயர். 

தேவி கருமாரி அம்மன் எண்ணற்றவர்களை வளமடையச் செய்துள்ளார். இத்திருக்கோவிலில் ஒரு அசாதாரண தெய்வீகச் சூழ்நிலை. தீராத நோய் தீரவும், நீங்காத கவலைகள் அகலவும் இங்கு கொலுவீற்றிருக்கும் அம்பாள் அருள்புரிகிறாள். இத்திருக்கோவிலில் இரவு தங்குவதாகவும் சிலர் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். 

திருவேற்காடு ஸ்தலபுராணம் இந்த அம்பிகையைப் பற்றி விவரிக்கிறது. சிவபெருமான் கயிலைக்குத் திரும்பிப் போகும்போது தன் மேனியில் பூத்த சாம்பலை பாலாம்பிகையிடம் அளித்து ஐந்தொழில் இயற்றி வருமாறு கூறி சென்று விட்டார். கருமாரி ஈருருவில் ருத்ர பூமியைத் தன் இருப்பிடமாகக் கொண்டதாகவும் கூறப் பட்டுள்ளது. ஓர் உரு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கும் முழு உரு. மற்றொரு உரு தலை காட்டி உடல் மறைத்து நிற்பது. தலைகாட்டி உடல் மறைத்ததால் கரு எனவும், முழு உருத்தன்மையால் மாரி என்றும் அன்னைக்குப் பெயர் ஏற்பட்டது. வேறு எந்த அம்பிகைக்கும் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பது இல்லை. இந்த முழு உரு சிவசக்தி இணைந்த சிலையாக விளங்குகிறது. பிரதான பூஜை, முகம் மட்டும் உள்ள அம்பிகைக்கே செய்யப்படுகிறது. 

திரிசூலம், உடுக்கை, வாள், பொற்கிண்ணம் ஏந்தி எழிலுடன் அம்பிகை வீற்றிருக்கிறாள். திரிசூலம்: உலகில் உள்ள மும்மூன்றான சகலமும் அம்பிகையே. அவள் திரிபுரசுந்தரி என்பதை உணர்த்துகிறது. அத்துடன் சிருஶ்டித்து, காத்து, அழிப்பவளும் அவளே என்பதை உணர்த்துகிறது. 

உடுக்கை: இதன் மூலம் நாதம் முதன் முதலில் வெளிப்பட்டது. அம்பிகை நாத ரூபமாக விளங்குகிறாள் என்பதை உணர்த்துகிறது. 

வாள்: அஞ்ஞானம் என்ற கயிறை வெட்ட இது உதவுகிறது. அக்கிரமமான வழியில் போகிறவர்களையும் இது எச்சரிக்கிறது. 

பொற்கிண்ணம்: அதிலுள்ளது ஞானப்பால். தன்னிடம் பரிபூரண நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஞானம் கட்டாயம் சித்திக்கும் என்பதை இது குறிப்பிடுகிறது. ஞானம் வேண்டுவோர்க்கு ஞானத்தையும், அமைதி நாடுவோர்க்கு அமைதியையும், குடும்ப இடர் நீங்க வருவோர்க்கு மகிழ்வையும், பட்டகடன் நீங்க பணிவோர்க்கு செல்வத்தையும் பரிந்தளித்து உதவுபவள் அன்னை கருமாரி! 

நினைத்தாலும், சொன்னாலும், கருமாரி ஆலயத்தை வலம் வந்தாலும், எந்த முறையில் வழிபட்டாலும் அருள்பாலிக்கிறாள் கருமாரி. 

இத்திருக்கோவிலின் பரிவார தெய்வங்கள், வலம்புரி சங்கினால் நீர்முகந்து அம்பிகையை வழிபட்ட வலம்புரி விநாயகர், காவல் புரியும் வீரபத்திரர், தைப்பூசத்தினத்தன்று அன்னையிடம் திருநீறு பெற்ற பாலசுப்ரமணியர், காடுகளிடையே தவம் புரியும் ஞானிகளுக்கு ஞானியும், மண்ணுலக மாந்தர்க்கு நன்னெறி போதிக்கும் குருவுமான - காத்தவீரன், காசியில் தோன்றி, கானகத்தே நாகங்களால் காப்பாற்றப்பட்டு, மதுரை மீனாக்ஷி அருளுடன் வாழ்ந்து திருவேற்காட்டில் கருமாரி ஆசி பெற்று கோவில் கொண்ட முத்துவீரன், தன் தங்கையைக் காணவந்த சங்கு, சக்ர, தாரியாக ஸ்ரீநிவாஸரும் அருள்பாலிக்கிறார். 

தேவி கருமாரி முற்காலத்தில் கிராம தேவதையாக அருள் ஆட்சி புரிந்துள்ளாள். மூர்த்தி தீர்த்தம் பாடல் பெற்ற தலம் என முப்பெருமை களை பெற்று விளங்கும் ஆலயத்தில் இவள் புற்று வடிவில் தோன்றியவள். இந்த அம்பாள் அருள்பாலிக்கும் இடமான திருவேற் காட்டிற்கு அப்பெயர் வர காரணம் என்ன தெரியுமா? இப்பகுதி முழுவதும் முற் காலத்தில் வேலமரங்கள் அடர்ந்த காடாக இருந்த தாலும் வேல மரங்கள் வேதங்களாகி இறைவனை வழிபட்டதாலும் இந்த ஊருக்கு திருவேற்காடு என்று பெயர். "விஶம்  தீண்டாப்பதி” என்ற சிறப்பும் இத்திருத்தலத்திற்கு உண்டு. விஶக்கடி நோய்களைத் தீர்க்கும் திருவேற்காடு கருமாரி அம்மன் இவள். 

அகத்திய மாமுனி பெயருக்கேற்றபடி மாமுனிவர்தான். இறைவன் சிவபெருமான் பார்வதி தேவியாருடன் ரிஶப வாகனமேறி தேவர்கள், முனிவர்கள், புடைசூழ திருமணக் கோலத்தோடு திருவேற்காட்டில் அகத்தியருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அகத்தியர் இறைவனிடம் தங்களுடைய காட்சியை தினந்தோறும் காணவேண்டும் என வேண்டினார். அதற்கு இறைவன் கலியுகத்தில் காக்கும் கடவுளான தேவி கருமாரி அருள் காட்சி அளிப்பாள் என்றுரைத்தார். 

திருவேற்காடு திருத்தலம் சகல நோய்களையும் விரட்டி அடிக்கின்ற தலமாக குறிப்பாக விஶம் தீண்டாத திருத்தலமாக விளங்கி வருகிறது. வெம்மை நோய், விஶக்கடி, மற்றும் நச்சு கலந்த உபாதை களால் துன்பப்படுகிறவர்கள் தேவியை வழிபட்டு, அவளது திருச்சாம் பலை பூசி மனமுருகி வேண்டி வணங்க அனைத்து நோய்களும் தீரும். 

வடவேதாரண்யம் என புகழ் கொண்ட திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர், வேற்கண்ணி அம்மையப்பனை திருமணக் கோலத்தில் தரிசிக்கலாம். அகத்தியர் ஸ்வாமியை வேண்டிக்கொண்டதால் இத் திருக்காட்சி. ஆதியில் அம்பிகை இங்கு புற்று வடிவில் இருந்தாள். வேற்கண்ணியான அன்னை பராசக்தி இச்சா சக்தியில் அந்தரக்கண்ணி, ஆகாயக் கண்ணி, பிரமாணக் கண்ணி, மீன் கண்ணி, காமக் கண்ணி, விசாலக் கண்ணிகளாகவும் பின் கருமாரி யாகவும் ஏழு உருவாகி இங்கு எழுந்தருளி உள்ளாள். 

சக்தி பீடமான திருவேற்காடு தெய்வீக ஆகர்ஶன சக்தி கொண்ட தாய் அன்பர்கள் மன அழுக்கை போக்கி தூய்மைப் படுத்தும் புனித ஆலயமாகக் காட்சி தருகிறது. கலியுகத்தின் கலி நீக்கிக் கருமாரியாய் காட்சி தருகிறாள். வினையகற்ற வந்த வித்தகி இவள். 

அகத்தியர் திருமணக் கோலம் கண்டு மகிழ்ந்து இந்த ஆலயத்தில் நெடுநாள் தங்கியிருந்து தவமியற்றினார். உலக க்ஷேமத்திற்காக பூஜை செய்தார். ஆற்று மணலால் லிங்கம் பிடித்துச் சொம்பில் கலசம் அதில் ஆவாஹனம் செய்து வேத மந்திரம் சொல்லி, செந்தமிழ்ப்பாடல் களைப் பாடி மனமுருகி பிரார்த்தனை செய்தார். 

அகஸ்தியரின் பூஜைக்கு அன்னை மகிழ்ந்து நான்கு கரங்க ளோடும், கருநிற மேனியோடும் கருநீலியாகக் காட்சி கொடுத்தாள். வேற்கண்ணியான நான் கருநாகமாகிப் புற்றிலே உறைவதால் கருமாரி என வழங்கப் படுவேன் என்றாள். கலியுகத்தின் குறைகளை, துன்பங்களை, மக்கள் பிணிகளைப் போக்கி சாயுஜ்யம் அடைய வைக்கவே நான் உக்ரமான தேவியாகக் காட்சி தருகிறேன் என்றாள். பிறகு அகஸ்தியர் வேண்டும் வரம் யாதென கேட்டாள் அன்னை. 

அன்னையைக் கண்ட களிப்பில் மெய்மறந்து நின்றார் அகஸ்தியர் ்அன்னையே அம்பிகே! லலிதா ! கௌரி ! ரோகிணி ! திரிபுரீ ! பைரவி ! காளி ! கருமாரி ! சந்திராவதி ! சாமுண்டீஸ்வரி! காமாட்சி  ! மீனாட்சி ! விசாலாட்சி ! பத்ரகாளி ! துர்க்கை தேவி ! கருமாரியாய் நீ கோலம் கொண்டு எனக்கு அருள்வதைப் போல் உக்ரத்தைத் தணித்து அருள் கனிந்த முகத்தோடு சாந்தமாய் அருள்புரிவாய் தாயே! என்று வேண்டி நின்றார். இந்த ஜகத்து மாந்தர்களை உய்விக்க வந்த ஆதிபராசக்தியின் அம்சமான நீ ஐந்தொழில்களையும் புரியும் வேற்கண்ணி! இறைவன் உனக்களித்த மேனி சாம்பல் தானே இங்கே மக்களுக்குப் பிணி தீர்க்கும் பிரசாதம். எனக்கும் அதை அளித்து அருள் புரிவாய் தாயேசு என வேண்டி நின்றார். 

அகிலத்து உயிர்களை ஆட்டிப்படைப்பவளே 
ஆறுதல் கூறாமல் அங்குமிங்கும் அலைபவளே 
எங்கெங்கு போனாலும் என் அன்பு வட்டத்திலே 
ஏகாந்தமாகவே சுழன்றாடும் சிறைப்பறவை 
கண்ணைத் திறந்து விட்டாய் கருமாரி 
கவலையைப் போக்கிடும் கருமாரி  
                        -  வேண்டிய வரம் யாவும் தந்திடம்மா. 

அகஸ்தியர் பூஜை செய்த கலசத்தில் ஆவாஹனம் செய்த அன்னையே இன்று திருவேற்காட்டில் அருள்புரியும் கருமாரி.  நாரதர் பாதாள லோகத்தில் உள்ள நாகலோகத்தில் கருநாகமாய் உறையும் கருமாரி அன்னை திருவேற்காட்டில் உறைகிறாள் என்று கூற கேட்டு நாகலோகத்து நாகங்கள் அனைத்தும் திருவேற்காட்டுக்கு வருகை தந்து அன்னை கருமாரியை வணங்கினர்.  

பஞ்சபூதங்களே ஐந்து தலை நாகமாகி அன்னைக்குத் தலைக்கு மேலே குடைபிடிக்கும் காட்சியை கண்டு அதிசயமாகவும், பிரமிப்பாகவும் பார்த்தன நாகலோகத்து நாகங்கள்.  நாகங்களுக்கு தலைவன் நாகராஜன். செங்கன் என்கிற கருநாகன் மகேசுவரனுக்குக் குடையாக இருக்கிறது. பத்மன் மகாபத்மன் இரண்டும் சிவனின் காதணிகளாகத் தொங்குகின்றன. வாசுகி என்ற பாம்பு பரம்பொருளின் மீது தவழும் பூணூல்.  

குளிகனும், அனந்தனும் இறை வனின் புஜத்தில் அணியும் கடகம். தக்ஷன் என்ற பாம்பு இறைவனின் அரைஞாண்கயிறு. காளிங்கனின் தலைமீதுதான் கண்ணன் நடனமாடி அதன் சீற்றத்தை அடக்கினான். ஆதிசேஶன் பூமியைத் தாங்குபவன். ராகு, கேது நவக்கிரகங்களில் இருவர். கார்க்கோடகன் என்ற கொடிய பாம்பு இறைவனுக்கு மாலை, கொடிய பாம்புகளானாலும் இறைவனுக்கு அணிகலனாகும் புண்ணியம் செய்தவை. 

சக்தி தேவி எல்லாம் வல்லவள். எங்கும், எதிலும் நிறைந்தவள். சக்தி தேவியே ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல தேவதையாக விளங்குகிறாள். மிகுந்த பராக்ரமசாலியான வரமளிக்கும் மகாமாரி, மகாமாயி, மகாசக்தி, மாரி சக்தி, மந்திரசக்தி, அருள்மாரி, கருமாரி எல்லாம் அவளே. இவள் சூரனை வதம் செய்ய முருகப்பெருமானுக்கு வேலாயுதம் கொடுத்த இடம் வேற்காடு. 

திருவேற்காடு அருகில் ஒரு மைல் தூரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவசக்திக் கடவுளர்கள் வேதபுரீஸ்வரர் வேற்கண்ணி அம்மை. வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ஒரு கிணறு இருக்கிறது. வேலாயுத தீர்த்தம். தண்ணீர் வெண்ணிறமாய் பாலின் வெண்மை கலந்திருக்கும். அதை பிணி உள்ளவர்களுக்கு கொடுத்தால் உடனே வியாதி குணமடையும். 

கலியுகத்தில் கலியின் கொடுமையை நீக்கிக் கருணை நெறியை வளர்க்க அன்னை கருமாரி எடுத்த பல்வேறு உக்ர வடிவங்களே சமயபுரத்து மகாமாயி, பாளையத்து பெருந்தேவி, படவேட்டு அம்மை. கருமாரி அம்மன் உக்ர தேவதை. இவள் உக்ரவடிவங்கொண்டு சூலத்தைக் கையில் ஏந்தி உடுக்கையை அடித்து முத்துக்களை வீசி எறிவாள். அது அகிலத்து மாந்தர்களை நடுங்க வைக்கும். இந்த அன்னை வெள்வேல மரத்தின் கீழே அமர்ந்திருக்கிறாள். 

அருட்பெருஞ்சோதியே! அன்ன பூரணியே! அகிலாண்டேஸ் வரியே! ஆதியே! அபூர்வ சிந்தாமணியே! கருணைக் கடலே! இப்பிறவி எடுத்தது உன் பாதம் பணியவே என்று அருளாசி கூறுமம்மா! 

திருவேற்காடு திருநீற்று மகிமை  

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு 
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு 
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு 
செந்துவர்  வாயுவை பங்கன் ஆலவாயன் திருநீறே. 
- திருஞானசம்பந்தர் 
திருவேற்காட்டு கோவிலிலே சாம்பலைத்தான் முக்கிய பிரசாதமாக அளிக்கின்றனர். மாட்டுச் சாணத்தை காயவைத்து தீயிலிட்டு வெந்து வெண்ணிறமாய்ப் பூத்து நிற்கின்ற சாம்பலே திருநீறு. 

வேற்காடாயிற்றே அதனால் தான் சாம்பலோ! உள்ளத்தில் உள்ள கருமையைப் போக்கி வெள்ளை மனமாக்க வேண்டும் என்ற தத்துவமே நெற்றியில் சாம்பல் பூச அடிப்படைக் காரணம். சக்தி பீடங்களில் குங்குமம்தான் முக்கியத்துவம் பெறும். ஆனால் திருவேற்காடு சக்தி பீடத்தில் சாம்பல்தான் முக்கிய பிரசாதம். இவள் வினை தீர்க்கும் வித்தகி. மூல சக்தியே கருமாரி! அந்த ஆதிசக்திதான் திருவேற்காட்டில் கருமாரியாக வருகின்ற அடியவர்க்கு அபயமளிக்கின்றாள். 

பூத்தவளே ! புவனம் 
பதினான்கையும் பூத்தவண்ணம் 
காத்தவளே ! பின் கரந்தவளே ! 
கறை கண்டனுக்கு 
மூத்தவளே ! என்றும் மூவா 
முகுந்தர்க்கு இளையவளே! 
மாத்தவளே ! உன்னையன்றி 
மற்றோர் தெய்வம் வந்திப்பதே. 
                                                   - அபிராமி அந்தாதி 
பார்த்தால் பசிதீரும் பாவமெல்லாம் தீர்ந்துவிடும் 
பரிதவிக்கும் மானிடரைப் பல்லாண்டு வாழவைப்பாள் 
செக்கச் சிவந்தவளே செங்காந்தள் மாதரசே 
சீமாட்டி கொலுவிருப்பாய் சேர்விழியே உமையவளே ! 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை