Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - மேல்மலையனூர் - அங்காள பரமேஸ்வரி

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி




அம்பாள் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசை தோறும் நடைபெறும் அர்த்தஜாம பூஜையைக் காண்பதால் வாழ்வில் அனைத்து துன்பங்களும் அகன்று விடும். ஆலயத்தில் அன்று தங்கி எல்லா தரிசனமும் கிடைக்கப் பெற்றால் அதுவே சிறந்த பாக்கியம். அம்பிகையின் சந்நதிக்கு நேரே மலைபோல் புற்று இருக்கிறது. புற்றில் நாக வடிவாக அம்மன் இருக்கிறாள். புற்று மண் இங்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது. 

ஓம் காளிகாயை ச வித்மஹே, மாதா ஸ்வரூபாயை தீமஹி தன்னோ அங்காளி ப்ரசோதயாத்- அங்காள காயத்ரியை ஜபிக்க பலன் கிடைக்க கேட்க வேண்டுமா? 

மாசி மாத அமாவாசையில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெறுகிறது. மாசி அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி அன்று தான் பிரம்மஹத்தி தோஶம் நீங்க சிவபெருமான் அங்காளம்மனை வழிபட்டதாகவும் மறுநாள் அமாவாசையன்று மக்களை கஶ்டப் படுத்தும் பைசாசங்கனை அடக்கி ருத்ர தாண்டவமாடுவதாகவும் ஐதீகம். மக்கள் காளி வேடமிட்டு மயானத்தில் குலவையிடுவார்கள். 

வல்லாள கண்டன் என்ற அரக்கன் பரமசிவனை நோக்கி கடும் தவம் இயற்றி பெண்ணைத் தவிர வேறு எவராலும், வேறு எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று வரம் கோரிப் பெற்றிருக்கிறான். நினைத்த வடிவமும் அவனால் எடுக்க முடியும். பகவான் அருளிய வரம் அப்படி! 

மேல்மலையனூர் சக்தி சிவனைப் பிரிந்து வாழ்வதாக அறிந்து அங்கு வந்தான். சிவனைப்போல் வேடமிட்டு காளியை நெருங்கினான். எத்துனை தைரியம்? அம்பாளை அப்படி நெருங்குவது என்பது? நினைத்தாலே உடம்பெல்லாம் பயத்தால் சிலிர்க்கிறது. தேவி சாமான்யமானவளா? கத்தி, கபாலம், பிரம்பு, அம்பு, வில், கதை, வீச்சரிவாள், சங்கு, சூலம், கேடயம் இவற்றுடன் அவனுடன் போரிட்டாள். முடிவில் ஆயுதங்களாக தன் நகத்தினை உபயோகித்து அவன் குடலை உருவி மாலையாக்கிக்கொண்டாள் குருதி பொங்க. அம்பாளுடன் விளையாடினால் எப்படி சும்மா இருப்பாள்? தேவர்களும், முனிவர்களும் தங்கள் துயர் தீர்த்த அன்னைக்கு பூமாரி பொழிந்தனர். 

சிவபெருமான் தேவியிடம் இதே சுடலையில் கோயில் கொண்டு எழுந்தருளி நாடி வரும் அன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும். எனது  பிரம்மஹத்தி தோஶம் தீர்ந்து சரஸ்வதியின் சாபத்தை பெற்றுக்கொண்ட உன் அங்கமெல்லாம் லிங்க சொரூபமாக நான் உறைவேன். இன்று முதல் நீ அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் பெறுவாய்சுஎன்று அருளினார். பெரிய ஆயியாய் திறந்த வெளியில் சயனித்திருக்கும் பராசக்திக்கு சேலை சாற்றுவது சிறந்த காணிக்கையாக கருதப்படுகிறது. 

நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண் ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சம அளவு கலந்து சிவப்பு நிற புதுத்துணியை திரியாக்கி வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் வடக்கு திசை நோக்கி விளக்கேற்றி அம்பிகையின் 108 போற்றியைச் சொல்லி வழிபட்டு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும். 

இதே எண்ணெய் அனைத்தையும் கலந்து எலுமிச்சை மூடியில் திரியிட்டு தீபமேற்றி (கிழக்கு  அல்லது வடக்குமுகம் பார்த்து) செம்பருத்தி மாலை அணிவித்து 48 நாட்கள் வணங்கினால் குழந்தை பாக்கியம் அருள்வாள் அன்னை. பூர்த்தி நாளன்று வெங்கலப் பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல் வைத்து மஞ்சள் ஆடை உடுத்தி விநியோகம் செய்ய வேண்டும்.  

அமாவாசை பூஜை மேற்கொண்டு கோயிலில் தங்கும் பாக்கியத்தால் பேய் பிடித்தவர்கள் குணமடைவர். 

ஒரு மண்டலம் கிழக்கு நோக்கி விளக்கேற்றி புற்றுக்கு பால் வார்க்க கால ஸர்ப்ப தோஶம் நீங்கும். 

அம்மா மனிதர்கள் செய்யும் பாவத்தால் ஏற்படும் அனைத்து கஶ்டங்களையும் நீ மனமுவந்து நிவர்த்திக்கிறாய். என்னே உன் கருணை. தெரியாமல் செய்யும் பிழை பொறுத்தருள்வாய் அம்மா!


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...





கருத்துகள் இல்லை