Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன்

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள்

நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன்





அம்பாள் அவளுடைய பக்தர்களுக்காக என்ன உதவி வேண்டு மானாலும் செய்வாள். அவள் ஒருமுறை தன்னுடைய பக்தனான வளையல்காரரின் பக்திக்காக ஆகாய மார்க்கமாக சமயபுரத்திலிருந்து நாச்சியார் கோவிலுக்கு வந்து அங்கு பத்து தினங்கள் தங்கி அருள் பாலித்த மகிமை ஆகாச மாரியம்மனுடையது எனலாம். 

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருநரையூர் என்று அழைக்கப்படும்  நாச்சியார் கோயில் என்ற ஊரில் 600ஆண்டுகளுக்கு முன்பு கவுரவ குலத்தினர் என்ற கவரச் செட்டியார்கள் வாழ்ந்து வந்தனர். அந்தக் காலத்தில் குதிரை மீது வளையல்கள் எடுத்துச் சென்று அருகிலுள்ள ஊர்களில் வளையல் வியாபாரம் செய்தனர். 

அவர்கள் ஒரு சமயம் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு சமயபுரம் சென்று கோயிலில் தங்கியிருந்து அண்டை ஊர்களுக்குச் சென்று வளையல் வியாபாரம் செய்தனர். ஒரு நாள் இரவு வணிகர்களில் பெரியவர் ஒருவர் கனவில் இளம் பெண் தோன்றி தனக்கு வளையல் போடும்படி கூற பெரியவரும் மகிழ்ச்சியுடன் வளையல் போட்டு விட்டார். ஆனால் சோதனையாக எல்லா வளையல்களும் உடைந்து விட்டன. அவர் மிக வருந்தி அம்மா எங்கள் ஊருக்கு வாருங்கள் கை நிறைய வளையல்கள் அணிவிக்கிறேன் என்றார். அவள் சிரித்துக் கொண்டே உங்கள் ஊருக்கு வந்தால் நிறைய வளையல்கள் போட்டு விடுகிறாயா? இதோ இப்போது உன் ஊர்க்காரர்களுக்கு போட்டு விடுகிறேன் என்று சிரித்து மறைந்தாள். 

பெரியவர் விழித்து இந்த கனவை எண்ணிப் பார்க்க, அருகில் வளையல்கள் உடைந்து கிடந்தன. அவருடன் வந்தவர்களுக்கு அம்மை போட்டிருந்தது. அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. கோயில் குருக்கள் ஓடி வந்து பெரியவரிடம் பொற்காசுகளைக் கொடுத்தார். அவர் ஆச்சரியமாக பார்க்க   குருக்கள் சொன்னார், அம்பாள் கனவில் வந்து உடைந்த வளையல்களுக்கு உரிய பொற்காசுகளைத் தருமாறு பணித்தாள். இந்தாருங்கள் என்றார். பிறகு கனவில் வந்த அன்னை சமயபுரத்தாள், பெரியவரிடம் அம்மை போட்டியவர்களுக்கு திருநீற்றை  பூசுமாறு கூற உடனே அம்மை முத்துக்கள் மறைந்தோடியது. அனைவரும் மெய்சிலிர்த்தனர். அம்பிகையை வேண்டி கண்ணீர் மல்க நின்றனர். 

பெரியவர் கனவில் வந்தது சமயபுரம் அம்பிகைதான் என்றுரைத் தார். மற்றவர்களிடம் நடந்ததைக் கூறினார். அனைவரும் தாங்களும் அன்னை மாரியைக் காண ஆவலுற்றனர். மனமுருகி வேண்டி நின்றனர். 

அப்போது ஒரு அதிசயம் நிறைவேறியது. எல்லோரும் வியக்கும் வண்ணம் ஆகாயத்தில் அன்னை காட்சி கொடுத்தாள், ஆகாச மாரியாக. அனைவரும் பக்தி பரவசத்துடன் வணங்கி அன்னை தங்கள் ஊருக்கு வந்தருள வேண்டும் என்று வணங்கினர். 

உங்கள் ஊர் எது? என்றாள் அன்னை. அன்னைக்குத் தெரியாதா? வணிகர்கள் முல்லை முறுவலிக்கும் நரையூர் என்று கூற அவர்கள் பக்திக்கு மெச்சி நான் அவ்வூருக்கு முல்லைக்கும் மல்லிகைக்கும் முன் கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வந்தருள்வேன். வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை  சமயபுரத்தை விட்டு ஆகாச மார்க்கமாக திருநறையூருக்கு வந்து 10 தினங்கள் தங்கி விட்டு மீண்டும் சமயபுரம் திரும்பி விடுவேன் ீீ என்று திருவாய் மலர்ந்தருள வணிகர்கள் ஆனந்தமுடன் ஊர் திரும்பி அம்மன் கூறியபடி விழா எடுத்தனர். அம்பாள் அருளியபடி ஒவ்வொரு வருடமும் ஆகாச மார்க்கமாக சமயபுரத்தாள் எழுந்தருளி திருநரையூரில் தங்கி அலங்கார வல்லியாக அருள்கிறாள். 

திருநரையூர் என்ற நாச்சியார் கோயிலில் அம்மனுக்குத் தனிக் கோயில் கிடையாது. விழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் அம்மனுக்குத் திரு உருவம் கிடையாது. தீப ஒளியாகக் காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை துவங்கி 10 தினங்கள் நடைபெறும் விழாவில் ஆகாச மாரியம்மனைத் தர்ப்பையால் உருவாக்கிப் பக்தர்கள் விரதமிருந்து கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். 

ஆகாச மாரியம்மன் வரும் வைகாசி அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக் கிழமை பக்தர்கள் அரசலாற்றுக்குச் சென்று ஊற்று வெட்டி வைப்பார்கள். பின் செப்புக்குடத்தில் கோயில் தீர்த்தத்துடன் ஆற்றுக்குச் சென்று ஊற்றுத் தண்ணீரை குடத்தில் நிறைத்து, எலுமிச்சை பழங்கள் வைத்து தர்ப்பைகள் சொருகி எடுத்து வருவார்கள். ஊரின் எல்லையில் அமைந்துள்ள கோயிலில் வைத்து தர்ப்பை கொண்டும், சிவப்பு துணி  கொண்டும், வெள்ளியால் ஆன அன்னை திருஉருவம் அமைத்து கன்னிப்பெண் அமர்ந்த தோற்றத்தில் பூப்பல்லக்கில் அமர்த்தி சனிக்கிழமை காலை ஆங்காங்கே மண்டகப்படிகள் நடை பெற மலர் தூவி வரவேற்பளிப்பார். சமயபுரத்து அம்மன் ஆகாச மார்க்கமாக இங்கு வந்து ஆகாச மாரியாக காட்சி தருவதாக ஐதீகம். 

அம்பிகைக்கு நடைபெறும் இந்த திருவிழாவின் போது வேறு எந்த விசேஶமும் நடைபெறாது. பல நூறு ஆண்டுகளாக தொடரும் அதிசயம் இது. அம்பிகையை தினம் ஒரு அலங்காரத்தில் காண கண்கொள்ளாக் காட்சி. இவளின் லட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், மதன கோபால அலங்காரம், மகிஶாஸுரமர்த்தினி அலங்காரம், சேஶசயன அலங்காரம் ஆகியவை குறிப்பிடத்தக்கது. 

வெள்ளிக் கிழமை ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளிப்பது சிறப்பு. இந்த அலங்காரத்திற்காக பிரத்யேகமாக வெண்பட்டு சேலை தயாரிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் தண்ணீர் விளக்கெரித்தல் நிகழ்ச்சி இன்றளவும் நடைபெறுகிறது. இதற்கு அடுத்த புதன் கிழமை அம்பாள் நின்ற திருக்கோலத்தில் சமயபுரம் செல்வது மக்கள் பிரியா விடை கொடுப்பது, அம்பிகை ஜோதி ரூபமாக அடுத்த ஆண்டு வரை அருள்பாலிப்பது என அனைத்தும் மிக நேர்த் தியாக நடைபெறுகிறது. அம்பாள் ஊருக்கு வரும் பொழுது  இருக்கும் மகிழ்ச்சி விடைகொடுக் கும்போது இருப்பதில்லை. நெஞ்சம் கனக்க வழியனுப்புகிறார்கள் அன்பர்கள். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...






கருத்துகள் இல்லை