Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - புட்லூர் அங்காளபரமேஸ்வரி

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள்

புட்லூர் அங்காளபரமேஸ்வரி 




குழந்தை வரமருளும் தேவிக்கு திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் ஆலயம் அமைந்துள்ளது. புதுமணத் தம்பதிகளும், குழந்தை வரம் வேண்டுபவரும் இக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வளையல் மற்றும் எலுமிச்சை பழ மாலை வாங்கி அம்பாளை வேண்டுகின்றனர். ஒரு சமயம் நிறை மாத கர்ப்பிணியான அம்பாள் அங்காள பரமேஸ்வரி தனது கணவர் சிவபிரானிடம் தண்ணீர் தாகம் எடுப்பதாக கூற எதிரே இருந்த குளத்தில் அவர் தண்ணீர் எடுத்து வரச் சென்ற போது வலி தாங்காமல் தாயார் ஓரிடத்தில் அமர்ந்து அங்கேயே புற்றாக மாறினார். இக்கோயிலில் அங்காள பரமேஸ்வரி தாயார் புற்று வடிவத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் படுத்திருப்பது போன்ற தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார். அம்பாள் பாத கமலத்தில் வைத்து எடுக்கப்படும் எலுமிச்சை மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் நல்ல பலனை கொடுக்கும். 

அன்னை சக்தி, அணு முதல் அண்டம் வரை அனைத்திலும் அங்கம் வகிப்பவள். இவளின் திருவிளையாடல்கள் மனிதமனதுக்கு எட்டா தவை.  

மலைகள் வானளாவி நிற்பதும், அவற்றினின்று அருவிகள் ஆர்ப்பரித்து வீழ்வதும், கருமேகம் மின்னி ஒளிவீசி இடிப்பதும், மழை பெய்வதும், பெருங்காற்று இரைச்சலோடு வீசுவதும் சக்தியின் திருவிளையாடலே. 

மனித குலத்து மைந்தன் ஒருவனுக்கு அவன் வேண்டியவண்ணம் போகத்தையும், மற்றொருவனுக்கு  மோட்சத்தையும் அளிக்க ஈசன் சகிதம் அன்னை சக்தி மானிடப் பிறவி எடுத்து அற்புதமான திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்ற, அவள் பூலோகம் வந்து அருள்பாலிக்கும் இடம்தான் புட்லூர். 

ராமாபுரம் ஒரு அழகிய கிராமம். தாழம்புதர்களும், முல்லைப் புதர்களும் அடர்ந்த காட்டுப் பகுதிகள் நிறைந்த இடம். அந்த ஊருக்கென ஒரு ஆறு. இரு கரைகளிலும் பாங்காக வளர்ந்திருந்தன, பனைமரங்களும், தென்னை மரங்களும். இந்த சூழலை நினைத்துப் பார்க்கும் போதே மனதிற்கு ரம்மியமாக இருக்கிறது. ஆற்றுக்கு அப்பால் ஒரு காடு. பூப்பூக்கும் நந்தவனமாக இருந்த காலத்தில் அந்தக் காடு பூங்காவனம் என்று அழைக்கப்பட்டது. 

ஊருக்குள் மகேந்திரன் என்று ஒருவன் இருந்தான். இவன் தன் பெயரை மகேஸ்வரன் என்று மாற்றிக் கொண்டான். ஆனால் மக்களுக்கு இப்பெயர் வாயில் நுழையாததால் மகிசுரன் என்று அழைத்தனர். அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பது அவனது வேலை. அவனை அண்டி வந்தவர்களிடம் நிலத்தை அடமானமாக வாங்கிக் கொண்டு அவர்கள் கேட்டதைக் கொடுப்பான். 

பொன்மேனி என்பவன் மகிசுரனுடைய தோழன். நிலங்களை எழுதிக் கொடுத்தவன் கூட்டத்தில் இவனும் ஒருவன். பாவம் எப்பொழுதும் அவன் வீட்டில் இல்லை பாட்டுதான். மனைவி, மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை இல்லை. சோதனையும், வேதனையும் கலந்த வாழ்க்கை. நல்லதொரு வாழ்க்கை வாழ மனம் ஏங்கியது. மனைவி சொன்னாள் என்பதற்காக மாரியன்னையிடம் வேண்டினான். அன்னை சொன்னாள் என்பதற்காக அங்காள பரமேஸ்வரியை வேண்டினான். கனவில் காளியை துதித்தான். 

எவ்வளவு தொழுதும் அவன் வாழ்வில் ஏற்றமில்லை. அடமானத்திற்கு எழுதிக் கொடுத்த நிலம் கடன் அடைபடாமலே மூழ்கிப் போனது. அவன் வீட்டிலுள்ள அனைவரும் அடிமைகளாகி வேலை செய்யும் நிலை. கடன் வட்டி மேல் வட்டி என ஏறிக்கொண்டே போனது. ஒரு நாள் மகிசுரன் பொன்மேனியை புளிய மரத்தில் கட்டி அடித்தான். இதைக் கண்ணுற்ற மனைவி மயங்கினாள். ஊர் மக்கள் திகைத்தனர். எல்லோரும் மகிசுரனை திட்டித் தீர்த்தனர். கடைசியில் மகிசுரன் ஒரு அறிக்கை விட்டான். என்ன தெரியுமா? ஊருக்கு  வெளியே இருக்கும் பூங்காவனத்தை சிவராத்திரி அன்று தனி ஒருவனாக ஒரே நாளில் உழுது முடித்து நெல்லையும் விதைத்து நீர் பாய்ச்ச வேண்டும். அப்படி செய்தால் அந்த நிலம் அவனுக்கே சொந்தம். எல்லோருக்கும் தெரியும் இது சாத்தியமில்லாத செயல் என்று. மகிசுரன் நடக்காத ஒரு செயலை தன் வஞ்சகத்தை தீர்த்துக் கொள்ளவே கூறினான் என்று நினைத்த ஊர் மக்கள் பொன்மேனிக்காக வருந்தினர். ஆனால் மாற்று வழி எதுவும் கிடைக்காத காரணத்தால் பொன்மேனி செய்வதாக ஒத்துக்கொண்டான். அணு அணுவாக சாவதைவிட அடியோடு சாவதே மேல் என்று நினைத்து எட்டி மரமும், இலுப்பை மரமும், வேப்ப மரமும் அடர்ந்து இருந்த பூங்காவனத்தை ஒரே இரவில் உழுவதற்கு சம்மதித்ததை, ஊர் மக்கள் வாயடைத்து நின்று பார்த்தனர். அவர்களால் மகிசுரனை எதுவும் செய்ய முடியவில்லை. 

சிவராத்திரி நாளுக்காக ராமாபுரம் மக்கள் துடிக்கும் இதயத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அம்பிகை செய்த நாடகம் என்ன? ஆதி சக்தி ஒரு அழகான நாடகமேடையை உருவாக்கினாள். அந்தக் கிழவனுக்கு சுமார் எழுபது வயதிருக்கும். முகத்தில் சுருக்கங்கள். ஆனால் நடையில் தள்ளாமை இல்லை. அவருடன் அவர் மனைவி. அவள் அடர்த்தியாக இருந்த முடியை கோடரி  முடிச்சு போல அள்ளி முடித்திருந்தாள். இடுப்பில் ஒரு கூடை, கையில் ஒரு தடியுடன் பூங்காவனத்தில் நுழைந்தனர். இளைப்பாற நினைத்த கிழவி தன்னால் ஒரு அடி கூட நடக்க முடியாது தாகமாக இருக்கிறது, குடிக்க நீர் எடுத்து வருமாறு கூறினாள். கிழவன் நீரைத் தேடிச் சென்று ஆற்றங்கரையை அடைந்தான். ஆற்றில் துளி கூட நீர் இல்லாததால் அருகிலிருந்த கிராமத்தில் நுழைந்தார். குவளையை கையில் ஏந்தி ஒவ்வொரு வீடாக நீர் கேட்டுச் சென்றார். யாருக்கும் கிழவரின் குரல் காதில் விழவில்லை. 

பொன்மேனி, புளிய விளாரால் அடி வாங்கிய வலி தாளாமல் பூங்காவனத்துள் புக இருக்கும் நாளை நினைத்து தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தான். கிழவர் பொன்மேனியின் அருகில் நெருங்கி கிழவி நீர்  கேட்கும் விஶயத்தைக் கூற அவன் உள்ளம் உருகி கண்களை மூடி காளியை அழைத்தான். ஆத்தா, இதென்ன அக்கிரமம். தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தரமுடியவில்லையே உன்னால் என்று அவளை கோபித்துக் கொண்டு அருகில் மயங்கிய நிலையில் இருந்த மனைவியை எழுப்பி கிழவரின் குவளையில் நீர் நிரப்பித் தருமாறு கூறினான். கிழவர் நீருடன் சென்றபின் அவனுடைய மேனி பொன்மய மாகத் திகழ்ந்தது. வலி இருந்த இடமே தெரியவில்லை. 

சிவராத்திரி நாள் பூங்காவனம் நோக்கி பொன்மேனி புதுகலப் பையுடன், மக்கள் கூட்டம் தன்னுடன் திரண்டு வர, மகிசுரனின் கட்டளையை நிறைவேற்ற வந்தான். மகிசுரனும் வந்து சேர்ந்தான். பூங்காவனத்தை அடைந்த போது அந்த கிழவர் பொன்மேனியிடம் தன் கிழவி காணாமல் போய்விட்டாள் என்று வருத்தத்துடன் உரைத்தார். 

பொன்மேனியிடம் மகிசுரன் வந்த வேலையைக் கவனி என உக்கிரக் குரலில் கூறினான். பொன்மேனி கண்மூடி கருமாரியைத் தொழுது காலால் கலப்பையை அழுத்தி நிலத்தில் ஊன்றினான். ஆச்சர்யம்! பாறையாக இருந்த நிலம் பனித்துகள்போல் பொடிப் பொடியானது. ஏர்முனை ஊரே நேர்கோட்டில் வழுக்கிச் சென்றது. அனைவரும் வியந்தனர். தவத்தில் இருப்பது போல் இருந்த கிழவர் புதிராக புன்னகைத்தார். நேராகச் சென்ற ஏர்க் கலப்பை எதன் மீதோ மோதியது போல தோன்ற அந்த இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டது. ஐயோ என்ற அலறலுடன் சரிந்தான் பொன்மேனி. 

அப்போது அங்காள பரமேஸ்வரி தோன்றி, அஞ்சாதே பொன்மேனி. என் கணவர் நீர் கொண்டு வரச் சென்ற நேரத்தில் இளைப்பாற படுத்த நான் மண் புற்றாக மாறி விட்டேன். ஏர்முனை என்னைக் குத்தியதால் குருதி பீறிட்டது. என்னை வேண்டி இறைஞ்சிய தால் ஈசனுடன் இங்கு வந்து அமர்ந்தேன். என்னை உழுது நான் இங்கு இருப்பதை உலகிற்கு உணர்த்திய நீ எந்நாளும் என்னையும், என் ஈசனையும் பூஜிக்கும் பேறு பெறுவாய் என்று அசரீரி ஒலித்தது. 

மண் விலகி மண்புற்று ஒன்று தெரிந்தது. அந்தப் புற்றில் மாதா மல்லாந்து படுத்த வாக்கில் இருந்து அருள் புரிந்தாள். தாண்டவராயக் கிழவன் தன் தலைவியை நாடிவந்து அமர்ந்தான். அமர்ந்த கோலத்தில் உறைந்தான். 

மகிசுரன் மனம் வருந்தினான். எப்பேர்பட்ட பாவியானேன் நான். உறங்கும் உன்னை கலப்பை கொண்டு கலைத்து எழுப்பவைத்த பாவியானேன். எனக்கு மன்னிப்பே கிடையாது. நானே என்னை எரித்துக் கொள்ளப் போகிறேன் என்றதும் ஊர் மக்கள் அவன் மேலுள்ள கோபத்தால் அவனை எரிக்க அவனுக்கு மோட்சம் அளித்தாள் கருணைவடிவான அம்பிகை. புட்லூர் பூங்காவனத்தம்மன் வந்த கதை இதுவே. தனது பக்தர்களுக்காக எத்துணை கஶ்டங்களை ஏற்கிறார்கள் இறைவனும், இறைவியும். 

இந்த அம்மனின் சந்நதியில் ஒரு முறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும். தடைகள் விலகும். பில்லி, சூன்யம், ஏவல், பேய், பிசாசுகள் போன்றவை இருந்த இடம் தெரியாமல் விலகிப் போகும். இத்திருக்கோவிலில் அம்மை அங்காளபரமேஸ்வரி, அப்பன் தாண்டவராயன், நந்தி வாகனம். கோவிலின் உள்ளே கர்ப்பக்கிரத்திற்கு நேர் எதிரே மல்லாந்தவாக்கில் மண்புற்றாக பூங்காவனத்தம்மன் மஞ்சளும், குங்குமமும் துலங்க விளங்குகிறாள். தலவிருட்சம் வேம்பு, மகளிர் தங்கள் புடவை முந்தானையைக் கிழித்து மரத்தில் கட்டி வேண்டுகின்றனர். நாகதேவதையின் தரிசனம் பிராகாரத்தில். மஞ்சள், குங்குமம் நிறைந்த மங்கல நாயகி. இத்திருக்கோவிலில் சிவராத்திரி உற்சவம் அதி அற்புதம். சிவராத்திரிக்கு அடுத்த நாள் மயானக் கொள்ளை வைபவம். ஊரை அடுத்துள்ள மயானத்தில் மண்ணாலும், மரத்தாலும் ஆன ஒரு மனித வடிவம் உற்சவ மூர்த்தியின் முன் எரியூட்டப்படுகிறது.  எரிந்து முடிந்த பின் மீதமுள்ள மண்ணை மக்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று வீட்டுவாசலில் காற்று, கறுப்பு அண்டாமல் இருக்க கட்டுகின்றனர். 

அம்பிகையை நம்பியவர்களை அவள் கருணை கொண்டு காப்பாற்றுகிறாள். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...







கருத்துகள் இல்லை