Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - பண்ணாரி மாரியம்மன்

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள்

பண்ணாரி மாரியம்மன் 



ஈரோடு அருகில் இருக்கும் சத்திய மங்கலத்திற்கு மேற்கே 14 கி.மீ. தூரத்தில் கர்நாடக எல்லையில் உள்ள ஊர் பண்ணாரி. மிகப் பழங்காலத்தில் இப்பகுதி மிகுந்த அடர்ந்த காடாக இருந்தது. புலிகளும், மாடுகளும் பகைமை இல்லாமல் உலாவின. என்ன அதிசயம்! தற்கால நிலைமையே வேறு. எங்கும் எதிலும் பொறாமை, பகைமை, வஞ்சம்....... இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.  

பொங்கல் படைப்பது, மாவிளக்குப் போடுவது ஆகியவை இந்த அம்மன் வழிபாட்டில் குறிப்பிடத்தக்கது. இங்கு உயிர்பலி கிடையாது. கண், நரம்பு நோய்கள் தேவியின் தீர்த்தத்தால் நீங்குகின்றன. சுழல் வழிபாடு, அக்னிக் குண்டத்தில் இறங்குவது போன்றவையும் நடைபெறுகிறது. 

வனப்பகுதியில் இந்த அம்மன் ஆலயம் இருப்பதால் யானைகள் அடிக்கடி இரவில் இந்த ஆலயத்திற்கு வருமென கூறப்படுகிறது. 

ஒரு சமயம் ஆங்கிலேய அதிகாரி விழாவைத் தடை செய்ய, பின் மாரியின் அருளால் பாம்புக் கன்னியர் அவன் முன் தோன்றி நடனமாடிய போது, அவன் பயந்து தன் தவறை உணர்ந்து திருந்தி, நின்று போன வழிபாட்டை தானே நேரில் சென்று நடத்தியதாகவும் செய்திகள் வழங்கப்படுகின்றன. 

ஒரு சமயம் மாடு மேய்க்கும்போது ஒரு காராம்பசு  தன்  கன்றுக்குக் கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது. மடிநிறைய பாலுடன் செல்லும் பசு, திரும்பும் போது காலியான மடியுடன் வரும். அதன் காரணத்தை அறிய மாடு மேய்ப்பவர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனிக்க, அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில்உள்ள புற்றில், பாலைப் பொழிவதைப் பார்த்தார். மறுநாள் கிராம மக்களிடம்  விபரத்தைக் கூற மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதைக் கண்டனர். ஒருவருக்கு அருள் வந்து, தான் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு -இவ்வூர் கேரளாவில் உள்ளது) என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்ததாகவும், எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில் தான் தங்க விரும்புவதாகவும் தன்னை பண்ணாரி மாரியம்மன் எனப் பெயரிட்டு வணங்கி வருமாறும் கூறவே, அந்த அருள்வாக்கின்படி அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஶ்டை செய்தனர். பின்னர் விமானத்துடன் கூடிய கோயில் கட்டப்பட்டது.  

தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள பண்ணாரி மாரியம்மன் தன் கைகளில் கத்தி, கபாலம், டமருகம், கலசம் ஆகியவைகளைத் தரித்து, சாந்த நிலையில் அமர்ந்துள்ளாள். பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.  

இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லை. திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், நல்லதே நடக்கும் என்பதும், கால்நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை.  

இங்கு பங்குனி மாதம் நடைபெறும் தீகுண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. பழங்காலத்திலிருந்தே இந்த திருவிழா சிறப்புடன் நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்களை காடுகளில் வெட்டி வருவர். மரம் வெட்டும் இந்த சடங்கிற்கு கரும்பு வெட்டுதல் என்று பெயர். இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத் தேங்காய்களை போடுகின்றனர். இந்த குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்குவது சிறப்பு. 

பங்குனி மாதம் அம்மனுக்கு அபி‌ேஶக அலங்காரம் செய்யப்பட்டு பூச்சாற்று நடக்கிறது. மறுநாள் அம்மன் சப்பரத்தில் தாரை, தப்பட்டை வாத்தியங்களும் முழங்க வீதி உலா வருகிறாள். பூச்சாற்று விழாவின் ஒன்பதாம் நாள் இரவில் அக்கினி கம்பம் அமைக்கப்பட்டு கம்பத்தருகில் மேளதாளத்துடன் அம்மனுக்கு அபி‌ேஶக ஆராதனைகள் நடக்கிறது. அம்மனை வழிபட்டு முதலில் பூசாரி அக்னி குண்டத்தில் இறங்க பின் பக்தர்கள் இறங்குவார்கள். மறுநாள் அம்மனுக்குப் பொங்கலிட்டு, மாவிளக்கு போடுவர். இரவில்  அக்கினிக் கம்பத்தை எடுத்து கிணற்றில் இடுவர். 15ம் நாள் திருவிழாவில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளி லிருந்து பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அக்கினிக் கரகம் ஏந்தியும், வேல், சூலம் தாங்கியும் மேளதாளங்கள் முழங்க அம்மனை வழிபடுகின்றனர். இத்திருக்கோயிலில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசைகளில் சிறப்பு பூஜைகள்  நடக்கின்றன.  

ஒரு முறை காட்டு இலாகா அதிகாரியாக பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர் அன்னையின் சக்தியை அறியாமல், துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோயில் சுவற்றில் சுட, கண் பார்வையை இழந்தார். பின் தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப் பட்ட தீர்த்தத்தை தன் கண்களில் ஒற்றிக்கொள்ள, மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தற்போதும் கண்வியாதி உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக  பக்தர்கள் நம்புகிறார்கள்.


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை