Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - சமயபுரம் மாரியம்மன்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

சமயபுரம் மாரியம்மன் 




கொள்ளிடத்திலிருந்து பிரிந்து செல்லும் பெருவிளை வாய்க்கால் கரையோரத்தில் அமைந்துள்ளது இத்தலம். மாரியம்மன் என்று நினைத்த மாத்திரமே நினைவில் வருவது சமயபுரம்தான். திருச்சிக்கு வடக்கே 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற  திருத்தலம். அம்பாள் கொலுவிருக்கும் இடம் கண்ணனூர். மாரியம்மன் வடிவங்களில் ிஆதிபீடம்’ சமயபுரமாகும். மூலவர் சந்நிதியில் அம்மன் அஶ்டபுஜங்களுடன் மிகப்பெரிய சுதை சுயம்புத் திருவுருவமாக சிம்மாசனத்தில் மஞ்சள் உடை உடுத்தி வாசனை மலர்களை திருமேனி முழுவதும் தரித்து அருள்பாலிக்கிறாள். ஸ்தல விருட்சம் வேம்பு. இக்கோயில் மூன்று உற்சவ திருமேனிகளைக் கொண்டது. மூலவர் சந்நதிக்கு முன்புறம் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் திருமேனி ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமேனி. வேம்பிலிருந்து எடுக்கப் பட்டது. மிகவும் விசேஶமானது. சுயம்புவான செப்புத் திருமேனி. காலத்தை கணக்கிட முடியாத அளவிற்குப் பழமை வாய்ந்தது. இந்த பஞ்சலோகத்தில் பல்வேறு வடுக்கள் படிந்துள்ளன. இவள் ஆயிரம் கண்ணுடையாள். கிழக்கு பார்த்த நிலையில் மூலவரைப் போல காட்சி அளிக்கும் அம்மன் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் உற்சவராக வெள்ளிக் குதிரை வாகனத்தில் வலம் வருவாள். 

தாயெனப் பரிந்தூட்டும் அன்னை சமயபுரம் மாரியம்மன், தன்னிடம் அன்பு கொண்டவர்களுக்கு அளவிலா ஆனந்தமளிக்கும் ஆனந்தவல்லி அவள். கேட்டதைக் கொடுப்பதால் கண்ணீர் மல்க நினைந்துருகும் அன்னை சமயபுரம் மாரியம்மன் கண்ணனூர் என்ற ழைக்கப்படும் இத்திருத்தலத்தில் வந்தமர்ந்ததே ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  

ஆதியில் வைஶ்ணவியாக, தன் அண்ணன் அரங்கநாதருடன் ஸ்ரீரங்கத்தில் சேர்ந்திருந்தாள் அன்னை. பின் தன் அருளாடல்களை நிகழ்த்த இது தகுந்த இடமல்லவென்றுணர்ந்த அன்னை, வேறிடம் கொள்ள நிச்சயித்தாள். 

ஸ்ரீரங்கநாதர் பணியில் ஈடுபட்டிருந்த பட்டர்கள் மனதில் அன்னை கோபமாக இருப்பதாக காட்சி கொடுத்தாள். பட்டர்கள் பயந்தனர். ஜீயர் ஸ்வாமிகளிடம் தெரிவித்தனர். கோபமாக இருக்கும் சிலையை இக்கோயிலிலேயே வைத்துக்கொள்ள விரும்பாமல், குடம் குடமாக பால் அபி‌ேஶகம் செய்து-குளிர்வித்து-பல்லக்கில் வைத்து தென்புறம் அனுப்பினர். ஒளி ஒன்று அவர்கள் முன்னே வழிகாட்டி வந்தது. கொஞ்ச தூரம் வந்ததும் பல்லக்கு தூக்கிகள் களைப்படைய, பல்லக்கை ஓரிடத்தில்  வைத்துக் களைப்பாறினர். அவ்வாறு இளைப்பாறிய இடம் தான் இப்பொழுது 'இனாம் சமயபுரம்’ என்ற பெயரில் வழங்குகிறது. (இதன் நினைவைப் போற்றும் வகையில் மாரியம்மன் திருக்கோயிலின் பெருவிழாவின் 8-ம் நாளன்று அவ்விடத்திற்குச் சென்று ஓர் இரவு தங்கி வருவதை சம்ப்ரதாயமாக இன்றும் கடைபிடிக்கின்றனர்.) 

பின்னர் மீண்டும் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்த அவர்களால் மீண்டும் எடுக்க முடியவில்லை. ஆமாம், வேம்புகள் சூழ்ந்த அந்த இடத்தை விட்டு அசைய மறுத்துவிட்டாள் அன்னையவள்! அதனால் அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அன்னை மாரியம்மன் அந்த இடத் திலேயே கோயில் கொண்டாள். அதுவே இன்றிருக்கும் இடமாகும். அந்த இடத்திலே கோயில் கொண்டுவிட இசைந்து விட்டதை அறிந்து அதற்காகச் சிறிய அளவில் கோயில் அமைக்கப்பட்டது. அதே இடத்தில் பல காலம் சிறு கொட்டகையில் கொலுவிருந்தாள் அன்னை. அப்பொழுது முகலாயர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக விஜய நகரத்தை தோற்றுவித்தனர் ஹரிஹரர் புக்கர் சகோதரர்கள். அவர்களுக்கு குருவாயிருந்து வழிகாட்டினார் வித்யாரண்யர். இவர் சிருங்கேரி சங்கர மடாதிபதியாக இருந்தவர். 

இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் முகலாயர் ஆதிக்கத்திலிருந்த பல இடங்களையும் வென்று வந்தனர். முகலாய மன்னர்களுடன் நட்பாக இருப்பவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அதன் பொருட்டு தெற்கு நோக்கி வந்த அவர்கள் கண்ணனூர் காட்டில் படைகளுடன் தங்கினர். அப்பொழுது கண்ணனூர் அரண்மனை மேட்டில் கொலுவிருந்த மாரியம்மனைத் தரிசித்து தங்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றும், அன்னைக்கு அழகிய ஆலயம் எடுப்பதாகவும்  வேண்டிக்கொண்டார்  மன்னர். தேவியின் திருவருளால் தென்னாட்டில் அரசு அமைத்தனர். தங்களுக்கு அருள்புரிந்த, மாரியம் மனுக்கு தான்   செய்த வேண்டுதல்படி பெரிய கோயில் கட்டி அதில் விநாயகரையும், கருப்பண்ண ஸ்வாமியையும் பரிவார தேவதைகளாகப் பிரதிஶ்டை செய்து வழிபட்டனர். மேலும் கோயிலுக்குக் கும்பாபி‌ேஶகம் செய்து, நித்ய ஆராதனைக்காக நிலங்கள் அளித்ததாக வரலாறு கூறுகிறது. 

அன்னையிடம் பக்தி கொண்ட சூரப்ப நாயக்கர் என்பவர் பின்னாளில் அன்னைக்கு பழைய திருவுருவத்திற்குப் பதிலாக புதிதாக வேறு திருவுருவைச் செய்து வைத்தார். ஆனால் அன்னை இதனை அங்கீகரிக்கவில்லை. அதனால் மனம் சோர்ந்த நாயக்கர், அன்னையிடம் மனமுருக வேண்ட, அதன் பலனால் அன்னைக்கு நடக்கும் பெருவிழாவில் 9-ம் நாளன்று இத்திருவுருவே வீதியுலாவில் இடம் பெறும் பாக்யம் பெற்றது. 

தற்போது கோயிலில் சுற்றுப் பிரகாரங்களுடன் காட்சியளிக்கும் அன்னை, உயரிய பீடத்தில் அமர்ந்து ஐந்து தலை நாகம் குடைபிடிக்க எட்டு திருக்கரங்களுடன் அருளாட்சி செய்து வருகிறாள். மாரியம்மன் தன் திருக்கரங்களில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஏந்தி இடது திருவடியை மடித்துக்கொண்டு வலது திருவடியை ஐந்து அசுரர்களின் தலைகளின் மீது வைத்து கொண்டிருக் கிறாள். நெற்றியில் திரு நீறு, குங்குமம், ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அலங்காரங்களுடன் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கத்தையும் தன்னுள் அடக்கி 27யந்திரங்களைத் திருமேனியில் கொண்ட பிரதிஶ்டையில் அருள்புரிகிறாள் சமயபுரத்தாள். 

கண்ணபுரம் என்ற பெயரும் இத்திருத்தலத்திற்கு உண்டு. சிறந்த பிரார்த்தனை தலம். அம்மை நோய் கண்டவர்கள் இங்கு  வந்து தங்கி வேப்பிலையின் மகிமையால் குணம் பெறுகின்றனர்.  

இவளை முறைப்படி வழிபட்டால் மழை வளம் கொழிக்கும்.  தீராத வினைகள் தீரும், பக்தர்களின் தேவைகளனைத்தும் நிறைவேறும். அம்மை, காலரா, போன்ற கொடிய நோய்களும் தோல் சம்பந்தமான நோய்களும் அம்பாள் அனுக்கிரஹத்தால் தீர்ந்து விடும். பில்லி, சூன்யம், பிசாசுத் தொல்லைகளும் அம்பாள் வழிபாட்டால் மறைந்து விடும். இத்திருக்கோயிலுக்கு அருகில் பெருவளை வாய்க்கால் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு மேற்கே மாரீ தீர்த்தம் என்ற குளம் விசேஶ தீர்த்த குளமாக விளங்குகிறது. 

இதனாலேயே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் இருந்துவருகிறது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் தலங்களில் தலைமைத்தலமாக, அதிக வருமானம் தரும் தலமாக விளங்குவது சமயபுரம். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை