Recent Posts

மஹா மாரியம்மன் - கோபிச்செட்டிப்பாளையம் - சாரதா மாரியம்மன்

மஹா மாரியம்மன் 

கோபிச்செட்டிப்பாளையம் - சாரதா மாரியம்மன்   




ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சாரதா மாரியம்மன் கோவில் மிகச் சிறப்பு வாய்ந்தது. நிச்சயதார்த்த தலம். இங்கு நிச்சய தார்த்தம் செய்தால் மணமக்கள் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ்வர். 

வீரபாண்டி கிராமம், பவானி நதிக்கரையில் அமைந்துள்ளது. நீர்வளமும், நிலவளமும் அமைந்த பகுதி. கால் நடைகளை மேய்க்க இப்பகுதிக்கு வருவர் கிராம மக்கள். ஒரு முறை கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த வேப்ப மரங்களின் இடையே தெரிந்த ஒளியைப் பார்த்து சிறுவர்கள் பயந்தோடினர் அப்போது அசரீரி ஒலித்தது. குழந்தைகளே! நானும் தினமும் உங்களுடன் வந்து விளைாயடுகிறேன் என்றதும் பெருங்காற்று வீசியது. இலைகள் சில உதிர்ந்து அருகில் இருந்த கல்லைச் சுற்றி வீழ்ந்தது. அந்தக் கல்லை சிறுவர்கள் எடுக்க முயன்றார்கள். முடியவில்லை. அப்போது அந்த அசரீரி ஒலி, குழந்தைகளே! நான் இவ்விடத்தில் குழந்தையாக இருக்கப் போகிறேன். கல் இருக்கும் இடத்தில் எனக்கு கோவில் கட்டி வழிபட்டால் இவ்வூரை மட்டுமன்றி என்னை வழிபட யார் வந்தாலும் காப்பாற்றுவேன்,” என்று சொன்னதை கேட்ட சிறுவர்கள் ஊரில் சென்று தகவல் கொடுக்க அதே நாளில் குறிப்பிட்ட இடத்தில் கோவில் எழுப்புமாறு கனவு கண்டதாக சொன்ன பெரியவர்கள் 1917ல் ஒரு சிறிய கோவிலைக் கட்ட எத்தனித்தனர். 

சுயம்புவாகத் தோன்றிய கல் வடிவ அம்மன் மூலஸ்தானத்தில் உள்ளது. குழந்தை வடிவில் அம்பிகைக்கு சிலை வடித்து கல்லின் அருகில் பிரதிஶ்டை செய்ததன் காரணம், குழந்தைகளுடன் அவள் முதல் முதலில்  பேசியதால். குழந்தைகளுக்கான பிரச்சனை என்றால் இவளை வணங்கி வழிபடுகின்றனர். தற்கால கோபிசெட்டி பாளையம் தான் முன்காலத்து வீரபாண்டி கிராமம். 40 ஆண்டுகளுக்கு முன் கனவில் சிருங்கேரி பீடாதிபதி அபிநய வித்யா தீர்த்த சுவாமிகள் கனவில் இந்த அம்மன் தோன்றியதால் இவ்வூர் வந்து அம்பிகையை வழிபட்டாராம். அதனால் தான் இவள் சாரதா மாரியம்மன் எனப்படுகிறாள். 
இன்னொரு அதிசயம் என்னவென்றால் சுவாமிகள் பூஜை செய்யும் போது வைத்திருந்த இரு தேங்காய்களை அங்கேயே விட்டுச் செல்லு மாறு சொன்னதாம் அசரீரி வாக்கு. அத்தேங்காய்கள் இன்றும் சிறிதளவு கூட நிறம் மாறாமல் இருக்கின்றன. செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை நாளன்று சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. 

நிச்சயதார்த்த வைபவம் இத்தலத்தில் செய்தால் அத்தம்பதியர் நீண்ட காலம் மக்கட்செல்வங்களுடன் நிறைவான வாழ்வு வாழ்வர் என்பது உறுதி. நிச்சயதார்த்த வைபவத்தின் போது உப்பு, வெற்றிலை, பாக்கு வைத்து அம்மனை வேண்டி மூன்று முறை மாற்றிக் கொண்டு உறுதி செய்ய வேண்டும். திருமாங்கல்யம் செய்வதற்கான தங்கத் தையோ அல்லது திருமாங்கல்யத்தையோ அம்பாள் திருவடியில் சமர்ப் பிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அம்பிகையின் அனுக்கிரகம் அத்தம்பதியினருக்கு நிச்சயம் உண்டு. 

இந்த அம்பாளுக்கு சாரதா என்ற பெயர் இருப்பதால் குழந்தைகள் கல்வி நலனுக்காக இவளை வழிபட்டு நன்மையடையலாம். அம்மை நோய் தீர வேப்பிலை வைத்து நீர் ஊற்றி வழிபட குணமடைவர் அன்பர்கள். 

சித்திரை மாதம் சித்திரை விழா இத்திருக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவின் ஏழாம் நாள் பால்மரம் என்று கூறப்படும் ஆலமரத்தின் இரு கிளை கொண்ட ஒரு பாகத்தை வெட்டி அதில் துளையிட்டு அம்மன் திருவுருவம் செதுக்கு கின்றனர். அருகில் உள்ள தெப்பக்குளத்திற்கு அக்கம்பத்தை எடுத்துச் சென்று நீர் ஊற்றி பின் கோவிலில் வந்து நடுகின்றனர். அக்கம்பம் மகாமாரியின் கணவராக கருதப்படுகிறது. தினமும் காலை, மாலை அக்கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பூசி, மாலை சாற்றி பெண்கள் வழிபடுவதால் திருமணத் தடை நீங்குகிறது. அம்பாள் மனது வைத்தால் நமக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்கிறாள். பூச்சாட்டு திருவிழாவின் போது குழந்தை வரம் வேண்டுவோர்க்கு அம்பாள் அருள்பாலிக்கிறாள். அக்னி நட்சத்திர காலத்தில் பூச்சாட்டு திருவிழா 17 நாட்கள் நடைபெறுகிறது. கசப்பான வேம்பினை ஏற்று இனிப்பான வாழ்வினை அருளும் அன்னை பராசக்தி தன் கருணையின் வெளிப்பாட்டினை பல இடங்களில் அருள்கிறாள். அதில் இத்திருக் கோயிலும் ஒன்று. 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை