Recent Posts

மஹா மாரியம்மன் - கொன்னையூர் ஸ்ரீமுத்துமாரியம்மன்

மஹா மாரியம்மன் 
கொன்னையூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் 




புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் பொன்னமவராதியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொன்னையூரில் பிரசித்திபெற்ற முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கொன்றை மரங்கள் அடர்ந்த வனம் கொன்றையூர். பிறகு பேச்சு வழக்கில் கொன்னையூராயிற்று. 

இங்கு திருவிழா நடைபெறும் காலங்களில் 15 நாட்கள் நடை பெறும் மண்டகப்படியில் இரவில் தினசரி அம்பாள் வீதியுலா வருவார். அப்போது ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் வரிசையாக அணிவகுத்து நின்று அம்மனுக்கு தீவட்டி பிடிப்பார்கள். 

இந்த தீவட்டி பிடிக்கும் வேண்டுதல் இந்தியாவில் எந்த திருக்கோவிலிலும் நடைபெறுவதாக தகவல் இல்லை. இரு புறமும் வரிசையாக ஆண்களும், பெண்களும் நின்று அமைதியாக தீவட்டி பிடித்து வர அம்பாள் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 

இந்த கோவில் தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் இந்த வழிபாட்டு முறை தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்னையே கதியென முழுமையாகச் சரணடைந்து சக்தியின் பேரருளால் சந்ததி சிறக்க வாழ்ந்து வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்கள். எல்லாத்தையும் மகமாயி பார்த்துக்குவா” என்று அந்த கிராம மக்கள் சொல்வது கொன்னையூர் ஸ்ரீமாரியம்மனைத் தான். ஊரின் மையப்பகுதியில் வீற்றிருந்து நாலாத்திசைகளிலும் உள்ள மக்களையும், மாடு கன்றுகளையும் காடுகரைகளையும் வாழ வைத்தருள்கிறாள் மாரியம்மன். 

இந்தப் பகுதி பன்னெடுங்காலத்திற்கு முன் வனமாகத் திகழ்ந்தது. கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் நிறைந்த வனம். யாதவ குல பெரியவர் இந்த வழி சென்று பால் விற்பனை செய்வது வழக்கம். அந்தக் கிராமத்தில் திடீர் திடீரென மக்களை நோய் பாதிக்கும். தோல் நோயால் அவதிப்படுவர். வாந்தி பேதி இன்னும் பல நோய்கள். செய்வதறியாமல் திணறினர் மக்கள் யாவரும். நீர் இல்லை. நிலத்தில் வேலை செய்ய முடியவில்லை. 

கல்யாணம், குழந்தை பிறப்பு எல்லாம் அரிதானது. இப்படியே போனால் நம்ம பூமியும் வம்சமும் அழிந்து விடும் என்று எண்ணினர் மக்கள். மக்களின் ஓலக்குரல் உலகாளும் உமையம்மையின் காதுகளில் விழ நிலத்தின் அடியில் புகுந்து கொண்டாள். யாதவ குல பெரியவர் பால்  எடுத்துச் செல்லும் போது அந்த கொன்றை மரத்தடியில் கால் இடரி பால் எல்லாம் கொட்டிவிடும். தொடர்ந்து பல நாட்கள் இதுவே தொடரே, அவர் ஊர் மக்கள் துணை கொண்டு அவ்விடம் தோண்டிப் பார்க்க குருதியும், பாலுமாக பொங்கியது. அனைவரும் பயந்தனர். இன்னும் ஆழமாக தோண்ட அழகிய தேவி வெளிப்பட்டாள்.

எடுத்து வெளியில் வைத்ததுதான் தாமதம். உடம்பை ஊடுருவும் வண்ணம் மழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பியது. மக்களின் மனதும்தான். மக்களின் நோய் மாயமாக மறைந்தது. ஓலைக் குடிசையில் அம்பிகை வழிபாடு தொடர்ந்தது. ஊரிலிருந்து காட்டுப் பகுதிக்கு அம்மனை வணங்க வந்த மக்கள் பின்னர் காட்டிற்குள்ளேயே குடிபுகுந்தனர். 

ஒலைக்குடிசையில் அருள்பாலித்தவள் பின்னர் பிரம்மாண்ட கோவிலுக்குள் குடிகொண்டு ஆட்சி புரியத் தொடங்கினாள். இந்தப் பகுதி மக்களின் கண்கண்ட தெய்வம். இஶ்ட தெய்வம். குல தெய்வம். எல்லாமே இவள்தான். எந்த ஒரு பிரச்சனைக்கும் அன்னையின் சந்நதியில் தீர்வு உண்டு. இங்குள்ள நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி னால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. மக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு, கண் மலர், உருவ பொம்மை, உப்பு, மிளகு காணிக்கை அளித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 

பங்குனி மாத முதல் ஞாயிறு பூச்சொரிதல் விழா, அக்னிக் காவடி, அம்பிகை வெள்ளி ரத ஊர்வலம் என சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பொன்னமராவதி செவனூர் ஆல வயல் மற்றும் செம்பூதி ஆகிய பகுதி மக்கள் ஒன்று திரண்டு அம்பிகையின் உற்சவ விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். 

எங்க குடும்பத்தை நல்ல விதமாக கரை சேர்த்துடு தாயே” என வேண்டி அப்பகுதி மக்கள் வெள்ளி ரதம் இழுக்கின்றனர். அம்பிகை அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிடுகிறாள். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை