Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - மகமாயி தீர்த்தத்தின் மகிமை

மஹா மாரியம்மன் 
ஆடி மாத சிறப்புகள்

மகமாயி தீர்த்தத்தின் மகிமை 



அருள்மிகு சமயபுரம் மாரியம்மனின் திருக்கோயிலின் வடமேற்கே, திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரத்திற்கு இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜயநகர நாயக்கர் கால கோயில் திருப்பணிகளில் இக்குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப் பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பல கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்றிருப்பதையும் காண முடிகிறது. இத்திருக்குளத்திற்கு பெருவளை வாய்க்கால் வழியாக நீர் கொண்டு வரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர்வழிப் போக்கும் நிலத்தடி நீர்வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். பிற காலங்களில் மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்போற்சவப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு முதல் நாளும், சித்திரைத் தெப்பமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நாட்களில் அருள்மிகு மாரியம்மன் மேற்குக் கரையிலுள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி வழங்கு கிறாள். முற்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த இக்குளம் தற்போது திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்திலிருந்து தான் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுப்பது, அலகு குத்தி வருவது இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக் குளத்தில் பலவகையான தீபங்களை மிதக்க விட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகிற ஐதீகமும் உள்ளது. 

இப்படி இந்தத் தலம்பற்றி வரலாறுகள் சுவையாகச் சொல்லப் பட்டாலும் ஈசன் அரங்கனின் ஆலயத்திலிருந்து எழுந்து இந்த அகிலம் காக்கத் திருவுள்ளம் கொண்டு-வெப்ப நோயால் வெந்து வெதும்பும் தம் மக்களின் துயர் தீர்க்க என்றே அவதரித்த அன்னை, தனது கருணையை மாரியாக மக்கள் மீது பொழிந்து வரும் ஆயி-மகமாயி- மகாமாயி- சமயத்தில் ஓடோடி வந்து உதவிடும் மனம் கொண்ட மாரியம்மா இந்தச் சமயபுரம் மாரியம்மன்!  

கி.பி.13ஆம் நூற்றாண்டில் வீர சோமேஸ்வரன் என்ற ஹொய்சாள மன்னன் இந்தக் கண்ணனூரை தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தான். 

இவளைச் சரணடைய பக்தர்கள் முடி காணிக்கை அளிப்பதும், அக்னி சட்டி எடுப்பதும், தொட்டில் கட்டி வணங்குவதும் சரிதானே?  

தன் கண் பார்வையாலேயே பல கோடி பக்தர்களை தன் பால் ஈர்த்து அருள் பாலிக்கிறாள் சமயபுரத்தாள். 

பூச்சொரிதல் ஒவ்வொரு வருடமும் மாசி மாத கடை ஞாயிறன்று தொடங்கும். அது முதல் பங்குனி மாத இறுதி வரை ஒவ்வொரு ஞாயிறன்றும் நடைபெறும். மாசிமாதக் கடை ஞாயிறு பூச்சொரிதல் விழாவுடன் இந்த விரதம் தொடங்கும். பூச்சொரிதலின் போது அம்மனுக்குப் பூக்கள் வந்து குவியும். 

சித்திரை, வைகாசி கத்திரி வெயிலின் தாக்கத்தைத் தாயாய் இருந்து தான் ஏற்றுக்கொண்டு, மக்களைக் குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே பூமாரி பொழிந்தும், இளநீர், மோர், பானகம்,வெள்ளரிப்பிஞ்சு, துள்ளுமாவு நிவேதித்தும் அவளைக் குளிரச் செய்கிறார்கள். அப்போது வெளிநாடுகளிலிருந்தும் கூடை கூடையாகப் பூக்களைப் பக்தர்கள் அனுப்பிவைக்கும் அன்பு நெகிழச் செய்யும். 

மானிடர்களாகிய நாம் அம்பிகைக்கு நேர்ந்து கொண்டு விரத மிருப்பது வழக்கம். ஆனால் கருணையே உருவான மாரியம்மன் மக்களுக்காக விரதமிருக்கிறாள். எப்படி தெரியுமா? பச்சை பட்டினி விரதம்” அதுவும் ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. பூச்சொரிதல் நாளிலிருந்து 28 நாட்கள் விரதமிருக்கிறாள். துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, பானகம் இதுதான் நிவேதனம். 

பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணு காது சகல சௌபாக்கியங்களுடன் நலமுடன் வாழ அம்மனே பக்தர்களுக்காக இவ்விரதம் மேற்கொள்கிறாள். 

பக்தர்கள் நலனுக்காக அம்பாள் விரதம் மேற்கொள்வது என்பது! அம்மம்மா! சொல்லவோ நா எழவில்லை! தன்  குழந்தைகளுக்காக எத்துணை கருணை புரிகிறாள் இவள்! 

பூச்சொரிதலில் முதல் பூ அவளுடைய அண்ணனான திருவரங்கத் தானிடமிருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே மற்ற பூக்கள் சொரியப்படுகின்றன. இந்த உத்ஸவம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது. அவளுடைய சிரசிலிருந்து போடப்படும் பூக்கள் அவள் கழுத்துவரை நிறைந்திருக்கும். 

பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் மாரியம்மனுடன் உடன் பிறந்த சகோதரிகள் 6 பேரில் முதலில் சமயபுரம் மாரியம்மனுக்கே சொரியப்படும். ஏனெனில் பெரியம்மை போடும் மூத்தவளுக்கு அதை எடுக்கத் தெரியாதாம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனே அந்த முத்துக்களை உதிர்த்து விடுவதால் முதல் மரியாதை இவளுக்குத்தான். இரண்டாவது பூ அன்பிலூர் மாரியம்மனுக்கும், மூன்றாவது பூ நார்த்தமலை மாரியம்மனுக்கும், கடைசி பூ பெரியம்மை போடும் பெரியவளான பாலக்காடு மாரியம்மனுக்கும் என்று கூறப்படுகிறது. 

இப்பூச்சொரிதல் விழாவிற்குப் பின்னர்தான் ஊரில் உள்ள வேப்ப மரங்கள் பூக்கத் துவங்குகின்றன. சமயபுரத்தாளுக்கு எல்லா மாதங்களிலும் விழாக்கள் நடைபெறுகிறது. 

தைப்பூசம் 10 நாள் திருவிழா, 9-ம் நாள் மாரியம்மனுக்கு தெப்பம், மாசி மாதத்து ஞாயிறுகள் மிக விசேஶம்,மாசி மாத கடைசி ஞாயிறு பூச்சொரிதல் விழா.பங்குனி கடை ஞாயிறு கொடியேற்றம், சித்திரை மாதம் முதல் செவ்வாயில் தேரோட்டம் நடைபெறுகிறது. அத்தினத் தில் அண்ணன் ரங்கனிடமிருந்தும் அக்காள் அகிலாண்டேச்வரி யிடமிருந்தும் சீர் வரிசைகள் அனுப்பப்படுகிறது. கூடப்பிறந்தவர்கள் இளையவர்களுக்கு விழா-பண்டிகை நாளின் போது, சீர்வரிசை செய்து சிறப்பிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தி வருகிறார்! வைகாசியில் வசந்த உற்சவம்   ஒரு காலத்தில் திருவானைக்கா கோயில் வழிவந்த அர்ச்சகர்கள் பூஜை செய்ததாலும் நிர்வாகமும் சேர்ந்து செயல்பட்டதாலும் இந்த வழக்கம் கையாளப் படுகிறது. தங்கரத ஆட்டத்தின் போது அம்பாள் தங்கக் கவசமணிந்து அனுக் கிரகிப்பது கண்கொள்ளா காட்சி. தல மரம் பூக்களால் பூத்து குலுங்கு கிறது. மக்கள் தங்களது கோரிக்கைகளை மஞ்சள் காகிதத்தில் எழுதி வேம்பு மரத்தில் கட்டுகிறார்கள். அனை வருக்கும் நல்லதே நடக்கிறது. அன்னை தான் கருணை உள்ளம் கொண்டவராயிற்றே! பஞ்சப் பிரகார உற்சவமும் முக்கிய விழாக்களாகும் நடக்கும். ஆடியில் பூரத்திருவிழா நடை பெறும். ஆவணியில் அனைத்து ஞாயிறு களிலும் அம்பாள் புறப்பாடு- யானை தங்க சிம்மாசனம், காமதேனு மற்றும் ரிஶப வாகனங்களில். 

புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசையின் போது வசந்த மண்டபம் எழுந்தருளும் அம்மனுக்கு புதிய மூங்கில் தட்டில் பச்சரிசி, தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு காய்கறிகள் சமர்ப்பித்து பூஜை செய்து அந்தணர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ தானம் செய்வது பித்ரு தோஶம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அஶ்டமங்கலப் பொருள்களை தாலிபலத்திற்காக சுமங்கலிகள் தானம் செய்தால் அம்மனே பெண் உருவில் வந்து ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பதாக ஐதீகம். 

ராகு கேது தோஶம் நீங்கவும், குழந்தைப் பேறுக்காகவும், தொழில் பிரச்சினைக்காகவும் வேண்டிக் கொண்டால் சமயபுரத் தாள் சமய மறிந்து நிச்சயம் பலன்கொடுப்பாள் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி குணம் பெற தனி மண்டபம் உள்ளது. இவர்களுக்கு ஆலய அபி‌ேஶகத்தீர்த்தம் பிரசாத மாக வழங்கப்படுகிறது. 

அம்மனுக்கு உயிப்பலி கிடையாது. மாவிளக்கும், எலுமிச்சம்பழ மாலையும் விசேஶமானவை. புரட்டாசி நவராத்திரி பெருவிழா, மண்டபத்தில் எழுந்தருள்வார். விஜயதசமி அன்று அம்பு போடும் விசேஶம் நடக்கிறது. பிறகு மார்கழித் திருவாதிரையும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இவ்வாறு அம்பிகையின் திருவிழாக்கள் பட்டியல் நீடிக்கிறது. நம்முடன் துணையிருக்கும் அம்பாளுக்கு விழா எடுப்பதில்தான் எத்துணை பேரானந்தம்! 

தசரத சக்ரவர்த்தி இங்கு வந்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது. கண் கண்ட தெய்வம் இவ்வன்னை. உபாசனாசக்தியின் பலனை உடனுக் குடன் உணர்த்தும் கருணை முகில். 

சிறந்த பக்தரான ஒருவர் தர்மகர்த்தாவாக இருந்த காலம். யானை மட்டும் கோவிலுக்கு அப்போது இல்லை. உற்சவ சமயங்களில் பக்கத்து ஊர்களிலிருந்து வரவழைப்பது வழக்கம். என்ன காரணமோ அந்த வருடம் யானை வராது என்று கூறிவிட்டனர். பக்தர் தவித்தார். திருச்சி தெப்பக்குளத்து வீதியில் நடந்தவாறே கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டதைக் கண்ட வியாபாரியான அவரது நண்பர், தாமே வாங்கித் தருவதாகக் கூறினாராம். அதற்கேற்றாற்போல் ஆச்சர்யமாக குறைந்த விலையில் கிடைத்ததாம் ஒரு யானைக்குட்டி. 

கோவிலுக்கு மேளதாளத்தோடு யானையை அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது. புதிதாகையால் திடீரென்று மிரண்டால் என்ன செய்வது என்று இரண்டு தேங்காய்களை எடுத்துவரச் சொன்னான் பாகன். ஆனால் எடுத்துவர மறந்து விட்டனர். ஊர்வலம் தொடங்கி காவிரிப்பாலம் தாண்டியதும், யானை மிரளுவதைக் கண்ட பாகன் தேங்காய் கேட்டான். தேங்காய் இல்லை. அன்னையின் அருளால் உடனே சாலை ஓரத்திலிருந்த மரத்திலிருந்து இரண்டு தேங்காய்கள் விழுந்தன. யானைக்கு அதைக் கொடுத்தான். ஆயினும் அது அடங்காமல் குறுக்கே இறங்கி ஓடிவிட்டது. கடைசியில் யாவரும் வியக்கும் வண்ணம் அன்னையின் சந்நிதியில் கொடி மரத்திற்கு அருகில் போய் நின்றதாம். முன்பின் தெரியாத புது யானை தானே கோவில் முன் வந்து நின்றதைக் கண்டவர் மெய்சிலிர்த்தனராம். 

இதைப்போலவே மற்றொரு பக்தர் (திருச்சி மளிகைக்காரர்) வருடம் தோறும் வைகாசி 1ஆம் தேதி சிறப்பாக அபி‌ேஶகம் செய்து அன்னதானம் முதலியனவும் செய்வது வழக்கம். கோவிலுக்கு எதிரே யுள்ள வாய்க்காலில் தண்ணீர் விட எவ்வளவோ கேட்டும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பக்தர்கள் சிரமப்படுவார்களே என்று வருந்தினார் அப்பக்தர். அன்னையின் அருளால் அன்று மழை விடாது பெய்து வாய்க்கால் நிரம்பி ஓடியதாம். குறையின்றி அன்னதானம் செய்தாராம். இன்றும் தொடர்ந்து இத்தரும கைங்கர்யம் நடத்தப்பட்டு வருகிறது. 

இப்படி ஏராளமான அனுபவ அதிசயங்கள். பிரார்த்தனைக்குரிய சிறந்த தலம். சமயபுரத்தாளுக்கு கும்பாபி‌ேஶகம் என்றால், பணம் வேண்டுமே என்று கவலைப்படாமல் நடக்கும் கோயில் இது. அப்படி குவியும் நிதி. அன்பினால் கருணையினால் அடியார்களை ஆட்கொள்ளுபவள் ஆதிமகமாயி அம்மை சமயபுர நாயகி. 

கோவில் முன்மண்டபத்தில் படுத்து உறங்குபவர்களுக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்மன் நகர்வலம் வருவதாக ஐதீகம். 

கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வமான செல்லாண்டி அம்மனுக்கு முதல் பூஜை கொடுத்தபின்னரே உலகாளும் அன்னை பூஜை ஏற்கிறாள்.  சிவஸ்வரூபமாக விளங்கும் அம்பாளுக்கு சிவாச்சாரியார்களே பூஜை செய்து விபூதி பிரசாதமாக வழங்குகிறார்கள். 

விஜய நகரப் பேரரசின் காலத்தில் ஸ்தலவிருட்சத்தின் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம்.அர்த்த ஜாமப்பூஜை முடிந்ததும் இந்த நாகம் கருவறைக்குள் சென்று அம்மனைப் பூஜிக்குமாம்.அதனால் நிர்மால்யப் பூக்கள், கருவறையில் சிதறிக்கிடக்கும்.இந்தக்காட்சியை மறுநாள் உஶத் காலப் பூஜைக்குக் கருவறையில் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம். 

காலப்போக்கில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாகவே அந்த நாகம் வெளியே வருவதில்லையாம். அந்த இடத்தில் இப்போது கம்பிக் கதவு போட்டிருப்பதைக் காணமுடிகிறது. 

அன்னையின் திருவடிகளைப் பாடிப் பணிவோம். அவள் அருள் மழையில் நனைவோம். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை