Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - கண்ணனூர் ஆதிமாரியம்மன் திருக்கோயில்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

கண்ணனூர் ஆதிமாரியம்மன் திருக்கோயில் 




திருச்சி அருகே உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். தனது பக்தர்களுக்கு சமயம் அறிந்து உதவுவதால் சமயபுரம் மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள். இவ்விடத்தை எஸ்.கண்ணனூர் என்று அழைப்பர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ஆதிமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த இடமே சமயபுரத்தாள் பிறந்த தலமாகும். இத்திருக்கோயில் 500 வருடங்களுக்கு முற்பட்டதாகும்.   

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்தி செடிகள் சூழ வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் ஒருவர்  அருகில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார். உடனே எல்லோரும்  அந்த  இடத்திற்கு சென்று பார்த்ததில் அங்கு ஒரு புற்றைக் கண்டனர். அம்பாள், தான் அங்கு குடி கொண்டிருப்பதை குழந்தைக் குரல் மூலம் தெரிவித்துள்ளாள் என்பதை அறிந்த மக்கள் அங்கேயே ஒரு சிறு கோயில் அமைத்து ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வந்தனர். 

தைப்பூசத் திருவிழாவின் போது அம்மனை கொள்ளிடம் ஆற்றுக்கு அழைத்து வந்து பின்  கோயிலுக்கு அழைத்து செல்வர். ஒருமுறை அவ்வாறு செய்கையில் இடையில் ஒரு வேப்ப மரத்தடியில் அம்மனை வைத்து விட்டு, சற்று நேரம் இளைப்பாறி பின்னர் மீண்டும் அம்மனை கோயிலுக்கு அழைத்துச் செல்ல அம்மனை பல்லக்கில் தூக்கிய போது அந்த இடத்தை விட்டு அம்மனை எடுக்க முடியவில்லை. ஒரு சிறுமியின் மேல் அருள் வந்து, தான் காவிரி கரையில் இருக்க விரும்புவதாகக் கூறினாள். 

இதனால் பக்தர்கள் அம்மனை வழிபட்டு காவிரி கரையில் அம்மனை விட்டு சென்றனர். பின்னர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் ஆதிமாரியம்மன் கோயிலில் இருந்து பிடி மண் கொண்டு வரப்பட்டு கண்ணனூரில் கோயில் எழுப்பப்பட்டது. இதையே கண்ணபுரம் மாரியம்மன் என்பர். 

கண்ணனூரில் அம்மன் குடிகொண்டாலும், தன் பிறப்பிடமான சமயபுரத்தின் பெயரால் சமயபுரம் மாரியம்மன் என அழைக்கப் பட்டாள். தற்போது கண்ணனூரில் இருக்கும் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தவறாமல் அம்மன் பிறப்பிடமான ஆதிமாரியம்மன் கோயிலுக்கும் வந்து தரிசனம் செய்கின்றனர். 

இங்கு ஆண்டுதோறும் தைமாதம் பூச்சொரிதல் விழாவும், மாசிதிருவிழாவும், விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஆதி மாரியம்மன் கொள்ளிடம் காவிரிக்கு அழைத்து சென்றதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் கண்ணனூர் மாரியம்மன் சித்திரை திருவிழாவின் போது சித்திரை முதல் ஞாயிறு அன்று சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு தங்கி விட்டு செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. 

இங்கு திருமணம் நடக்காதவர்கள் நாககன்னி அம்மனை வணங்கி பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறை கோயில் வேப்ப மரத்தில் கட்டி சென்றால் திருமண தடைகள் நீங்கும். குழந்தை பேறு இல்லாத பெண்கள் ஆதி மாரியம்மனை வணங்கி நாககன்னியம்மன் முன்புள்ள வேப்ப மரத்தில் மரதொட்டில் கட்டி சென்றால் குழந்தை பேறு கிடைக்கும். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனை வேண்டி வழிபட்டு இரவில் தங்கியிருந்தால் நினைத்தது நடக்கும். 

இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வரும் ஆதிசக்தி நாககன்னியாகவும் காட்சி தருகிறாள். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை