Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - புன்னைநல்லூர் மாரியம்மன்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

புன்னைநல்லூர் மாரியம்மன் 





புகழ் பெற்று விளங்கும் மாரியம்மன் திருக்கோயில்களில் புன்னை நல்லூரில் குடிகொண்டிருக்கும் மாரியம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

தஞ்சையை ஆண்டுவந்த மாராட்டிய மன்னர்களில் ஒருவரான வெங்கோஜி மகாராஜா அடிக்கடி திருச்சிக்கருகில் உள்ள சமயபுரத்தில் கோயில் கொண்டு அருளாட்சி புரிந்துவரும் ஸ்ரீ மாரியம்மனை தரிசித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந் தார். ஒரு முறை அவ்வாறு செல்லும் போது கண்ணபுரம் என்றழைக்கப்படும் சமயபுரத்தில் தங்கி அன்னையைத் தரிசித்துவிட்டு சிறிது கண்ணயற, கனவில் தோன்றினாள் அம்பிகை. தஞ்சைக்கு கிழக்கே 4 கல் தொலைவில் புன்னைக் காட்டில் தான் குடி கொண்டிருப்பதாகவும், புற்றுருவில் இருக்கும் தன்னை அங்கேயே வழிபடலாம் என்றும் கூறவே திடுக்கிட்டு கண் விழித்தார் மன்னர். 

தஞ்சை திரும்பியதும் புற்றுள்ள இடத்தைத்தேடி கண்டுபிடித்து அங்குள்ள புற்று இடத்தைச் சுற்றி சுத்தம் செய்து கூரை அமைத்து வழிபடலானார். அவ்வூரில் உள்ள பல நிலங்களை அக்கோயில் வழிபாட்டிற்காக தானம் செய்தார். பின்னர் வந்த மன்னர்கள் அன்னையை மறந்தனர். காலப்போக்கில் அவர் கட்டிய சிறு கட்டிடம் மழையில் இடிந்து விழுந்து மீண்டும் மண்மூடிக்கொள்ள வழிபாடு தடைப்பட்டது. 

18ம் நூற்றாண்டில் துளஜா என்பவர் தஞ்சையின் மன்னரானார். அவரது பட்டத்து இளவரசிக்கு வைசூரி கண்டு கண்பார்வை போகவே, மருந்துகள் குணமளிக்காத நிலையில் துவண்டிருந்த மன்னரின் கனவில் தோன்றினாள் தேவி. தஞ்சைக்குக் கிழக்கே உள்ள புன்னை வனத்தில் நான் குடிகொண்டிருக்கிறேன். என்னை வணங்கி ஆலயம் எழுப் பினால் உன் மகளின் கண்பார்வையை மீட்டுத்தருகிறேன் என்று கூற, கண்விழித்த மன்னர் உடனே புன்னை வனத்தைக்காண புறப்பட்டார். 

இறுதியில் ஊர் மக்களின் உதவியோடு புன்னை வனத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்த புற்றை கண்டார். புற்றைக்  கலைப்பதால் தெய்வகுற்றத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்று திகைத்து நின்ற மன்னர், சதாசிவப்ரம்மேந்திரரிடம் ஆலோசனை செய்தார். அவர் அன்னையை த்யானித்து புற்று மண்ணை அகற்ற அதற்கடியில் இருந்த அன்னையின் சிரசைக் கண்டார். 

பின்னர் புற்று மண்ணை நன்றாகக் குழைத்து அன்னையின் உடலை செய்து அதன் மீது புற்றிலிருந்து எடுத்த சிரசை வைக்க முழுஉருவம் பெற்றாள் அன்னை. அன்னையின் கீழே ஸ்ரீசக்கரம் வரைந்து அன்னையின் உருவத்திற்கு உயிர் கொடுத்தார் ஸ்ரீ ப்ரம்மேந்திரர். 

உரிய மந்திரங்கள் உச்சரித்து அன்னையை பிரதிஶ்டை செய்து எண்ணற்ற பதார்த்தங்களை அன்னை மனம் குளிர நிவேதனம் செய்து எல்லா உபசாரங்களும் இனிதே நிறைவுற அன்னைக்கு கற்பூர ஆரத்தி எடுத்தார் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரர். அன்னையின் அருள் பெற வந்திருந்த மன்னனின் மனம் குளிர அவள் மகள் கண்ணொளி பெற்று கற்பூர தீபத்தைக் காண ஆனந்த கண்ணீர் வடித்தனர் அனைவரும். புன்னை வனத்தில் இருந்த அம்மன் புன்னை நல்லூர் மாரியம்மன்’ ஆனாள்.  

மன்னனின் மகளுக்குக் கண்ணொளி வழங்கிய அன்னை, இன்றைக்கும் தன் பக்தர்களின் வாழ்வில் ஒளி வீசச் செய்து கொண்டிருக்கிறாள். 

இந்த மன்னரின் மரபில் வந்த சரபோஜி மன்னர் காலத்தில் இத்திருக்கோயில் மேலும் பொலிவு பெற்றது. அவர்தான் இக்கோயிலின் மஹாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பிரகாரம் எல்லாம் சிறப்புடன் அமைத்தார். இன்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத் துக்கு உட்பட்டதாகத் திகழும் இக்கோயிலில் ஆகம விதிப்படி 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. 

இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் பாடகச்சேரி இராமலிங்க ஸ்வாமிகள் எழுந்தருளியுள்ளார். தீவிர பைரவ உபாசகரான இவர் ஏராளமான அன்னதானம் இங்கு செய்து திருநீறு மூலம் மக்களின் நோய்களை விரட்டியவர். 

கீர்த்தி சோழன் என்ற மன்னன் அன்னையின் பேரருளால் தேவ சோழன் என்ற ஆண் மகனைப் பெற்று பல்லாண்டுகள் நல்லாட்சி செய்தான். 

உள் தொட்டி நிரப்புதல் அன்னை எழுந்தருளியுள்ள சந்நிதிக்கு அருகில் உள்ள தொட்டி உள் தொட்டி என்றும், பிரகாரத்தை ஒட்டியுள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய் கண்டவர்கள் குணமாக இத்தொட்டிகளில் நீரை நிரப்புகின்றனர். இதனால் அன்னை மனம் குளிர்ந்து அம்மை நோய் நீங்க அருள்வாள் என்பது நம்பிக்கை. 

புன்னை நல்லூர் மாரியம்மன் நான்கு கரங்களுடன் விளங்குகிறாள். வலது கீழ்க்கரத்தில் கத்தி, வலது மேற்கரத்தில் உடுக்கை, இடது கீழ்க்கரத்தில் குங்குமக்கிண்ணம், இடது மேற்கரத்தில் பாசம் தரித்துக் கொண்டு திரிசூலம் ஏந்தியவளாய் திகழ்கிறாள். அக்னி கிரீடமும், நாசியில் ஒளிவிடும் புல்லாக்குடன் இரு கரங்களிலும் வளையல்களை தரித்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். 

அன்னையின் திருவுருவம் முன்னர் பார்த்தபடி புற்று மண்ணால் ஆகியிருப்பதால் தினசரி அபி‌ேஶகம் உற்சவ மூர்த்திக்கே செய்யப் படுகிறது. மூலவருக்கு 5 ஆண்டுகளுக்கொருமுறை எண்ணெய் காப்பு சாற்றப்படுகிறது. 48 நாட்கள் வரையில் மூலஸ்தான மூர்த்தியை காண இயலாது. அதனால் திரையில் அன்னையின் படத்தை வரைந்து அதனையே மூர்த்தியின் முன் தொங்கவிடுவர். இந்த படத்திற்கே தினசரி அச்ச்சனைகள் நடைபெறும். 48 நாட்களும் இரு வேளையும் அம்பாளுக்கு சாம்பிராணி தைலம், புனுகு, அரதஜா, ஜவ்வாது ஆகியவற்றால் மட்டுமே அபி‌ேஶகம் நடைபெறும். தைலகாப்பின் போது அன்னைக்கு உஶ்ணம் அதிகரிப்பதால், அதைக் குறைப்பதற்காக தேவிக்கு முகம் முழுவதும் வியர்வையினால் முத்து முத்துக்களாக வியர்வை அரும்பும் இதனால் இந்த தேவி ிிமுத்து மாரியம்மன்” என்றும் அழைக்கப்படுகிறாள். 

அன்னைக்கு நிவேதிக்கப்படும் தயிர் பள்ளயமும், பாலும் பக்தர்களின் உடல் குறைவுகளை நிவர்த்தி செய்கிறது. முடி பிரார்த் தனை, பால்குடம் எடுத்தல், பால்காவடி, அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு போடுதல், நிலை மாலை சாற்றுதல் போன்றவை பக்தர்கள் நிறைவேற்றும் வேண்டுதல்களாகும். 

ஆடியில் முத்துப்பல்லக்கு, ஆவணி கடைஞாயிறு தேர், புரட்டாசி யில் தெப்போற்சவம், மற்றும் நவராத்திரி உத்ஸவம் என எல்லா மாதங் களிலும் அன்னைக்கு சிறப்பாக விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. 

தஞ்சை தரணியை ஆட்சி செய்யும் அன்னையின் அருள்பெற வாருங்கள் ! 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை