Recent Posts

மஹா மாரியம்மன் - வேலூர் - செல்லியம்மன்

மஹா மாரியம்மன் 

வேலூர் - செல்லியம்மன் 


ஓம் சக்தி. தமிழகத்தின் பல பாகங்களிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். இங்கு தான் செல்லியம்மன் கோவில் கொண்டுள்ளாள். இவள் வேலூர் தோட்டப்பாளையம், பாலாற்றுக்கரை ஆகிய பகுதி களையும், அண்டை மாநில பக்தர்களையும் தன் அருளால் ஆள்கிறாள். கண்குளிர இவள் முகம் பார்த்தால் நிறைகிறது மனது. 

புதிய வாகனம் வாங்கினால் இவள் ஆலயம் வந்துதான் முதல் பூஜை. திருமணத்திற்கு இவளுக்குத்தான் முதல் பத்திரிகை, பிள்ளைகளுக்கு இங்கு தான் காது குத்து, என மக்கள் தன் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து நல்ல செயல்களுக்கும் அம்பாளிடம் அனுக் கிரகம் பெறுகின்றனர். 

தீச்சுவாலை கிரீடத்துடன் நான்கு கைகளில் டமருகம், சூலம், பாசம், கபாலம் ஆகியன ஏந்தி இரண்டடிக்கும் குறைவான ஆனால் வானளாவிய அருளுடன் வீற்றிருக்கிறாள் நம் செல்லியம்மன். ஆடி மாதத்தில் ஆயிரம் குடம் பாலாபி‌ேஶகம். பக்தர்கள் கொண்டு வரும் பாலை அவர்களே உற்சவருக்கு அபி‌ேஶகம் செய்யும் பாக்கியம் இத்திருக்கோவிலில் மட்டும்தான். நேர்த்திக்கடன் குதிரைச் சிலைகள் இங்கு நூற்றுக்கணக்கில் அணிவகுத்திருக்கும். நுழைவாயில் அருகிலும், தல விருட்சத்திலும் குழந்தை வரம் வேண்டி கட்டப்பட்ட தொட்டில்கள் ஏராளம். 

ஆலயத்தின் உண்டியலில் சம்பள கவர்கள் நிறைந்திருக்கும். அம்பாள் அனுக்கிரகத்தால் வேலை கிடைத்தவர்கள் தங்களது முதல் மாத சம்பளத்தை உண்டியலில் செலுத்துகின்றனர். தன்னை வழிபடும் அன்பர்களின் குறை தீர்ப்பதில் அவளுக்கு நிகர் அவளே! ராகு காலத்தில் தீபமேற்றுவது, வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்யும் பக்தர்களின் துன்பத்தை துடைப்பதே செல்லியம் மாவின் வேலை. 

பெரிய பெரிய பிரகாரங்கள் மற்றும் மண்டபத்துடன் அம்மன் கோவில் பிரம்மாண்டமாகத் திகழ்கிறது. அம்மன் அளவு கடந்த வசீகரத்துடன் காட்சி அளிக்கிறாள். கருவறையில் சப்த மாதர்கள் கருங்கல் பலகையில் புடைப்பு சிற்பமாகக் காணப்படுகிறார்கள். அவர்களில் ஒருவரான அன்னையவள் மட்டும் தனித்துத் தெரிகிறாள் சாமுண்டீஸ்வரி அம்சத்துடன். 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் எத்தமரெட்டி. இவரது முதல் மனைவிக்கு பொம்மி, திம்மி என இரட்டை ஆண் பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகள். சொத்துப்பிரச்சனை. எல்லா காலத்திலும் இப்பிரச்சனை மட்டும் மாறாது போலிருக்கிறது. கிடைத்ததை வைத்து நிறைவான வாழ்வு வாழ மக்கள் ஏன் பழகவில்லை? பெரிய கேள்விக்குறி? எவ்வளவு சொத்து இருந்தாலும் இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்ற நம் ஆசைப்பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. 

நிரந்தரமே இல்லாத இவ்வாழ்க்கைக்கு மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் துவேஶம், அகங்காரம் பொறாமை என்று மாறுமோ, அன்னைக்கே தெரியும்! 

பொம்மி, திம்மியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர், எத்தம ரெட்டியின் இரண்டாவது மனைவியின் குழந்தைகள். அவர்கள் இருவரும் தங்களது உயிர் பிழைக்க தப்பித்து அடைக்கலம் புகுந்த இடமே வேலூர் பாலாற்றங்கரை. அப்போது வேலூர் பிரதேசத்தை ஆண்ட சோழ மன்னனிடம் தங்கள் நிலைமையைச் சொல்லி தங்களுக்கு இடம் ஒதுக்க கேட்டுக் கொள்ள மன்னர் காட்டிய இடத்தில் வாழ்ந்தவர்கள், அங்கிருந்த எல்லையம்மன் கோவிலில் வழிபாடுகளை நடத்தினர். சப்த மாதர்களில் ஒருத்தியை தங்கள் குலதெய்வமான சாமுண்டீஸ்வரியாக பாவித்து வழிபட்டனர். 

ஒரு நாள் ஊர் புகுந்த கொள்ளைக் கூட்டத்தை பொம்மி, திம்மி இருவரும் சாமுண்டீஸ்வரி  அருளால் அடித்து விரட்டினர். இதன் மூலம் அம்பிகையின் பெருமையை, மகிமையை அறிந்த மக்கள் தாமும் வந்து வழிபடலாயினர். சகோதரர்கள் சாமுண்டீஸ்வரி என்று சொல்ல, மக்களோ செல்லியம்மன்” என்று பெயர் சூட்டி அழைத்தனர். அன்று முதல் இன்று வரை அம்பாள் தன்னை நாடிவரும் அடியவர்கள் வேண்டும் வரம் அருள்கிறாள். 

அம்மா ! நின் திருவடி சரணம் அம்மா! 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை