Recent Posts

மஹா மாரியம்மன் - காரைக்குடி - கொப்புடை நாயகி

மஹா மாரியம்மன் 

காரைக்குடி - கொப்புடை நாயகி   



செட்டிநாட்டு மக்களின் குல தெய்வம். எல்லாம் அம்பாள் பார்த்துக்குவா, என்ற நம்பிக்கை அவர்களை நலமாக வாழ வைக்கிறது. காலையில் கடை திறப்பதற்கு முன் நகரத்தில் உள்ள பெரும்பாலான கடைகளின் சாவியும் அம்மனின் காலடியில் வைக்கப்பட்டு பூஜித்து எடுத்த பிறகே விழிக்கிறது கடை வீதி. துரோகம், வஞ்சகம், ஏமாற்று செய்கிறவர்களையும் ிிநீயே பார்த்துக் கம்மா” என்று அவளிடம் தான் ஒப்படைக்கிறார்கள். செல்வம், ஆரோக்கியம், நிம்மதி, பகைவரிட மிருந்து பாதுகாப்பு என அனைத்தையும் ஒரு சேர அருள்கிறாள் அம்பிகை. 

வீரம்மிக்க மருது சகோதரர்கள், மோர் விற்ற இடையர் குல கிழவி இவர்களால் தொடர்ந்து திருப்பணி நடைபெற்றது. இத்தலத்தின் சிறப்பு, மூலஸ்தானத்தில் ஐம்பொன் விக்கிரகமாக எழுந்தருளி யிருக்கும் அம்பாளே உற்சவ காலங்களில் வீதி உலா வருகிறாள். 

அம்மனுக்கான நேர்த்திக்கடன்களில் ஒன்று மாலை மாற்றிக் கொள்வது. திருமணம் எங்கு நடந்தாலும் மறுநாள் மணமக்களை சந்நிதிக்கு அழைத்து வந்து அம்பாள் பாதத்தில் அர்ச்சனை செய்த மாலைகளை மாற்றிக்கொள்ளச் செய்கிறார்கள். இனி பெண்ணும், மாப்பிள்ளையும் அவ பொறுப்பு என்கிறார்கள். 

வேறு எங்கும் இல்லாத சிறப்பான ஒரு நேர்த்திக்கடனும் இங்கு இருக்கிறது. பக்தர்கள் விரும்பினால் விரும்பிய நாளில், விரும்பிய நேரத்தில் அம்பாளை புறப்பாடு செய்து திருவீதி உலா வரச்செய்ய முடியும். இதற்காக ஆகும் செலவை கோவில் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். 

காரைக்குடி சுற்று வட்டாரங்களில் 60,80 வயது முடிந்தவர்கள் இத்தகைய புறப்பாட்டை செய்து வழிபடுவதை வழக்கமாக வைத் திருக்கிறார்கள். இங்கு வந்து வழிபடும் அடியவர்களிடம் அவளது அருள் விழி பேசும். நம் குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்து விட்டால் அவ பார்த்துக்குவா. ஒப்பில்லாத வரப்பிரசாதி இவள். இவளது அடியார்கள் பலர் அழியாத காவியங்களாக பிள்ளைத்தமிழ், திருப்பள்ளியெழுச்சி மற்றும் இரட்டை மணிமாலை என அன்னையின் புகழை எழுதி வைத்திருக்கிறார்கள். 

"மைப்படிந்த கண்ணுடையாள் மலர்முகத்தாள் 
புன்னகையாள் பவளவாயாள் 
இப்படியால் இவ்வணத்தாள் என்றெழுதிக் காட்ட 
வொண்ணா இறைவியாவாள் 
ஒப்புடையாள் காரைநகர் ஊர்நடுவில் கொலுவிருக்கும் 
உலகம் ஈன்று 
கொப்புடைய நாயகியாள் கொய்மலர்சேவடி தலை 
மேற்கொண்டு வாழ்வோம்.” 

நகரத்தார் குடும்பத்தினருக்கு இவள் குல தெய்வம். பிள்ளை வரம் அருள்பவள். கரும்பு மாதிரி இனிப்புடன் அந்த குழந்தை தீர்க்காயுசு வாழ வேண்டும் என கரும்புத் தொட்டில் கட்டும் மக்கள் ஏராளம் ஏராளம். நோய் நொடியில்லாமல் வாழ வை தாயே! என்று வேண்டிக் கொண்டு கட்டுபவர் பலர். 

கொப்புடைநாயகி என்று ஏன் அழைக்கிறார்கள்? காரைக்குடிக்கு தெற்கே நாலு கல் தொலைவில் உள்ள செஞ்சை சங்கராபுரம் என்ற கிராமத்தில் காட்டம்மா என்று ஒரு பெண்மணி வசித்துவந்தாள். காட்டம்மாவினுடைய தங்கை தான் கொப்புடையம்மா. அந்த ஊர் எல்லைத் தெய்வம். பெயரும் காட்டம்மாதான். காட்டம்மாவிற்கு ஏழு குழந்தைகள். 

கொப்புடையம்மாவிற்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. அதனால் அவளுக்கு துளி கூட வருத்தமில்லை. தன் அக்காவின் குழந்தைகளை தன் குழந்தையாக நினைத்தாள். அவர் களிடம் உசிராக இருந்தாள். அக்குழந்தைகள் விருப்பப்படும் பதார்த் தங்களை செய்து ஊட்டுவதில் அலாதி மகிழ்ச்சி. 

ஆனால் அக்காவின் நினைப்போ வேறு மாதிரி. மனித மனம் தானே, அலைபாயும் எப்பொழுதும். அம்பாளிடம் அம்மா நீயே கதி நீ உன் விருப்பப்படி என்னை நடைமுறைப்படுத்து என்று அவளிடம் நம்மை ஒப்படைத்து விட்டால் இந்த சில பல சஞ்சலங்களுக்கு இடமே கிடையாது. தன் தங்கை குழந்தைகளிடம் கண்திருஶ்டி போட்டு விடுவாள் என்று நினைத்து அவள் வரும்போதெல்லாம் குழந்தை களைப் பார்க்க விடாமல் மறைத்தாள் அக்கா. குழந்தைகளிடமும் தன் தங்கையை பார்க்க அனுமதி தர மறுத்தாள். அவள் எதிரே குழந்தை களைப் பற்றி குறை கூறினாள். அக்காவின் மனதில் இருந்தது கொப்புடையம்மாவிற்குப் புரிந்தது. மனதும் வலித்தது. எப்பொழு துமே நாம் மனதார ஒரு செயலைச் செய்யும்போது நம் உறவினர்களோ நம் நண்பர்களோ வேறு அர்த்தம் செய்து பார்க்கும் போது நாம் கேலிக்கூத்து பொருள் போல ஆகி விடுகிறோம். ஒவ்வொருவருக்கும் நம் வாழ்க்கையில் இதுபோல வினோத அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். 

என்ன செய்வது? நமக்கு விதித்த விதி என்று நினைத்து ஒதுங்கி விட வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக இருக்க முடியும். கொப்புடையம்மாவும் தன் மனதை மாற்றிக்கொண்டு குழந்தைகளை மறக்க ஒரே வழி, தவம் இருப்பது தான் என்று நினைத்து தவம் மேற்கொண்டாள். பாவம் பேதைப் பெண். அவள் தவம் இயற்றிய இடமே காரைக்குடி. காரை மரங்கள் நிறைந் திருந்ததால் அப்பெயர். அவள் காலத்திற்குப்பின் அந்த இடத்திலேயே கொப்புடையம் மாவிற்கு கோவில் எழுப்பினார்கள். அம்பாள் காதில் அணிந்திருக்கும் நகையின் பெயர் கொப்பு. கொப்பு என்றால் கிளை என்றுகூட பெயருண்டு. கிளைகளே வம்சத்தை தழைக்க வைப்பதினால் அப்பெயரோ? குழந்தைகள் இல்லாத பெண்கள் இவளிடம் வந்து முறையிட்டால் உடனே அவர்கள் குறை தீரும். 

குழந்தைப்பேறு இல்லாத கஶ்டம் என்ன என்பது அத்தாய் அறியாததா? என்றுமே அன்னை தன்னை விட தன் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பாள். தான் பட்ட கஶ்டம் தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்பதில் மிக உறுதியுடன் இருப்பாள். 

கொப்புடையம்மன் பற்றி வேறொரு கதையும் உண்டு. காட்டம்மா தான் கொப்புடையம்மன் என்றும் கூட சொல்கிறார்கள். ஒரு ராஜா காட்டம்மாவை பூஜை செய்து கணக்கு வழக்கெல்லாம் கூட ஒப்பிப்பாராம்.  சுல்தான்கள் படையெடுத்த பொழுது காட்டம்மாவை ஒரு பெரிய வேப்பமரத்து பொந்தில் மறைத்து வைப்பாராம். அதற்கு காவலும் உண்டு. ராஜாவின் காலம் முடிந்த பின்னர் மாடு மேய்ப் பவர்கள் ஒரு சமயம் விக்ரகத்தை கண்டெடுத்து செஞ்சை சங்கராபுரத்து மகிழ மரத்தடியில் வைத்து வழிபடலாயினர். காரை மரக்காட்டை அழித்து வீடுகட்டி பின் அங்குள்ளவர்கள் அம்மனுக்கு கோயிலெழுப்ப நினைத்தபொழுது மாடுமேய்ச்சவங்க அவர்களிடமே அம்மனை ஒப்படைச்சுட்டாங்களாம். ஒப்படை அம்மனைத்தான் நாளடைவில்  கொப்புடை அம்மன்  என்று பேச்சு வழக்கில் மறுவியதாகக்கூட சொல்லப்படுகிறது. 

இத்திருக்கோவிலில் விநாயகர், மயில்வாகனன், காசி விசாலாக்ஷி, விஸ்வநாதர், தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் என அனைவரின் சந்நதிகளும் அதி அற்புதமாக அமைந்துள்ளது. 

கொப்புடை நாயகியின் தெப்ப உலா கண்ணுக்கு விருந்து. அம்மா! எல்லோர் குறைகளையும் தீர்த்து வையம்மா! 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...






கருத்துகள் இல்லை