Recent Posts

மஹா மாரியம்மன் - அகரம் - அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில்

மஹா மாரியம்மன் 
அகரம் - அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் 




விஜயநகரப் பேரரசு காலத்தில் வடநாட்டில் வசித்துவந்த சக்கராயர் அய்யர் என்ற பக்தர் ஒரு முறை தென்நாட்டிற்கு வர விருப்பப் பட்டார். வருமுன், அன்னையை நோக்கி, தான் தென் நாட்டிற்குச் செல்லும்போது அவளை எங்கு வணங்குவேன்  என்று கேட்க, அதற்கு அந்த தாய் இங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கொண்டு போ. எங்கே இருந்து என்னை வணங்க நினைக்கிறாயோ அந்த இடத்தில் இந்த மண்ணை வைத்துவிட்டு என்னை அழை. நான் வருவேன் என்று கூற, அவரும் அவ்வாறே அம்பாள் கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்துக் கொண்டு வரும்போது இங்கு வந்தார். குறிப்பிட்ட இடத்தில் மண்ணைக் கொட்டி, அதன் மேல் ஒரு கல்லை நட்டு வைத்து, அதை அம்பிகையாகக் கருதி வழிபட்டு வந்தார்.அவரது காலத்திற்குப் பின், இங்கு வசித்த பக்தர் ஒருவர் இந்த இடத்தில், அம்பாளுக்கு சிலை வடித்து ஒரு கோயில் எழுப்பினார். அவளுக்கு முத்தாலம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. மேலும், இரண்டு அம்மன் சிலைகளும் அருகில் வைக்கப்பட்டன. கேட்டதைத் தரும் அம்பிகையர்: மூன்று தேவியரது (இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி) கையிலும் அட்சயபாத்திரம் உள்ளது. இதனால், இவர்களிடம் கேட்டது கிடைக்கும். முத்தாலம் மனுக்காக தோன்றிய முதல் தலமாக இது கருதப்படுகிறது.   

பிரகாரத்தில் விநாயகர், பாலமுருகன், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன. அம்பாள் சன்னதிக்கு இருபுறமும் பூதராசா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இக்கோயிலில் விழா துவங்கும் முன், பூதராணியிடம் உத்தரவு கேட்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற பூதராசாவிடம் உத்தரவு கேட்கின்றனர். அப்போது, பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை துவங்குவர். கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலைச் செய்யாது விடுகின்றனர். அம்பாள் சன்னதியில் பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்கும் வழக்கமும் இங்கு உண்டு. 

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அம்பாள் சன்னதியில் 5 எலுமிச்சை மற்றும் மஞ்சளைக் கொண்டு வந்து அர்ச்சகரிடம் கொடுக்க, அதை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, ஒவ்வொன் றிலும் மூன்றை மட்டும் பிரசாதமாகத் தருகிறார். எலுமிச்சையை சாப்பிட்டும், மஞ்சள் கிழங்கை உடலில் தேய்த்து குளித்தும் வர, பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம்  கிடைக்கிறது. 

திருமணத்தடை உள்ளோர் இங்குள்ள அருள்ஞானசுந்தர மகா கணபதிக்கு தேங்காய் மாலை அணிவித்து வேண்ட திருமணம் கை கூடுகிறது. இங்கு விசாலாக்ஷியுடன், ஐந்து முகங்களுடன் கூடிய சுரலிங்கேசுவரர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.  

இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருவிழா நடைபெறும். பல்வேறு கோரிக்கைகளுக்காக, பக்தர்கள் கரும்புத் தொட்டில், அக்னிச் சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், அங்கப் பிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவர். சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.   

ஐப்பசி மாத முதல் செவ்வாய்க் கிழமையை 10ம் நாளாகக் கணக்கிட்டு, இங்கு விழா நடக்கிறது. சாமி சாட்டுதலுடன் துவங்கும் விழாவில், தினமும் பண்டாரப்பெட்டி அழைப்பு நடைபெறும். 9ம் நாள் காலையில் அம்பிகைக்கு கண்திறப்பு வைபவம் நடக்கும். பின், அம்பிகை ஆயிரம் பொன் சப்பரத்தில் கொலுமண்டபம் செல்ல, அங்கு விசேஶ பூசைகள் நடக்கும். 10ம் நாளில் மண்ணால் செய்யப்பட்ட அம்பிகை, சொருபட்டை என்னும் விமானத்தில் பூஞ்சோலை எனப் படும் மைதானத்திற்கு செல்வாள். மழையில் கரையும் விதமாக அமைக்கப்படும் விமானம் இது. மைதானத்தில் சிறப்பு பூசை செய்தபின், அம்பிகையை அங்கேயே வைத்து விடுவர். அதன்பின், 3 அல்லது 4 நாட்களுக்குள் மழை பெய்து, சிலை அதுவாகவே கரைந்து விடுவதாகச் சொல்கின்றனர். 

ஐப்பசியில் பிரம்மோத்சவம், ஆடி வெள்ளி, நவராத்திரி, திருக் கார்த்திகையன்று லக்ஷதீபம், மார்கழி மாதம் முழுதும் விளக்கு பூசை, ஜுரலிங்கேசுவரருக்கு சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபி‌ேஶகம் ஆகியனவும் சிறப்பாக நடைபெறுகின்றன.  இப்பகுதி மக்களுக்கான பிரதான குலதெய்வ வழிபாட்டுத்தலம் இது. பவுர்ணமி நாட்களில் அம்பிகைக்கு விசேஶ பூஜை உண்டு. 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை