Recent Posts

மஹா மாரியம்மன் - ஆழ்வார்பேட்டை - திருவருள்புரியும் திருவீதியம்மன்

மஹா மாரியம்மன் 

ஆழ்வார்பேட்டை - திருவருள்புரியும் திருவீதியம்மன் 



சுமார் 200 வருடங்களுக்கு முன் ஒரு நாள், நாகமணி அவர்களின் 5 தலைமுறைக்கு முன்பு நடந்த கதை. உடுக்கையடித்து குறிசொல்லும் ஒருவர், அருகிலிருந்தவரிடம் அங்கிருந்த கல்லைக்காட்டி இங்கு அம்மன் எழுந்தருளியிருப்பதாகவும் அவளை வணங்கிவந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும் என்று கூற, அவரும் அவ்வாறே வணங்கி வந்தார். அவரது குழந்தைகளும் அவ்வாறே வணங்கி வர அவர்கள் வாழ்வும் வளமாக அமைந்திருந்தது. அப்பொழுது அம்பாள் ஒரு சிறு கொட்டகையில்தான் கொலுவிருந்தாள். சுற்றிலும் தோப்பும் துரவுமாக இருந்தன. ஒருநாள் நாகமணியின் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட, அந்நோய் அதிகமாகி உடல்நிலை மோசமாக, நாகமணி அன்னையின் பாதமே தஞ்சம் என சரணடைந்தார். 

அப்பொழுது ஒரு பெரியவருக்கு அருள் வந்து தினமும் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் தன்னை பிரதக்ஷிணம் செய்து வர குழந்தை நலமாவான் என்று கூற அவரும் அவ்வாறே பக்தி சிரத்தையுடன் செய்து வந்தார். குழந்தை விரைவில் குணமானான். தன் வாரிசைக் காப்பாற்றிய அம்மனுக்கு கொட்டகையை மாற்றி கல் கட்டிடமாக மாற்றிக் கட்டினார். அதுமுதல் வளர்ச்சி பெற்று வந்த திருக்கோயில் இன்று பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது. 

அன்னையின் அருள்வாக்கின்படி அன்னையின் பக்தராகிய ஒரு சிற்பி அன்னையின் திருவுருவத்தை அமைத்துக் கொடுக்க, மூலவரின் பின்புறம் அழகுற வீற்றிருக்கிறாள் அன்னை, திருவீதியம்மன் என்ற திருநாமத்துடன். மூலவருக்கும் அன்னையின் வடிவில் செப்பு கவசம் செய்து அணிவித்துள்ளனர்.  

அன்னையிடம் நேர்ந்து கொண்டு குங்குமக் காப்பு சாற்றுவது அடிக்கடி நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். உடல்நலக் குறைவுள் ளவர்கள் மருத்துவமனைக்குச் செல்லுமுன் அன்னையை தரிசித்த பின்னரே செல்கின்றனர். அவ்வாறு நலம் பெற்றவர்கள் அன்னைக்கு குங்குமகாப்பு சாற்றி தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

அன்னையை பக்தர்கள் "மருத்துவச்சி’ என்றே அழைக்கின்றனர். இன்று ஆலயம் வளர்ந்து கணபதி, முருகன், தட்சிணாமூர்த்தி, மகாவிஶ்ணு, துர்க்கை, நவகிரகங்கள், ஆஞ்சனேயர், ஐயப்பன், சனீஸ்வரர் ஆகியோருடன் அற்புத தரிசனம் தருகிறாள் திருவீதியம்மன். கோயிலை நன்கு பராமரித்து வைத்துள்ளனர். அன்னையின் அலங்காரத் தைவிட்டு கண் அகல மறுக்கிறது. அவளுடைய தீக்ஷ்யண்யமான பார்வைபட்டால் நம் முன் வினைகள் ஓடிவிடும். வாருங்கள் அன்னையின் தரிசனம் பெறுவோம். 

முன்னர் இத்திருக்கோயிலில் உயிர்பலி கொடுக்கப்பட்டு வந்தது. ராமகிருஶ்ண மடத்தின் குருமார்கள் இங்கு வந்து அம்மனைத் துதித்து போற்றி வந்த பின்னர் அவர்களின் ஆலோசனைப்படி அம்மனுக்குச் சில சாந்திகளைச் செய்து உயிர்பலிகள் கொடுப்பது நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ராமகிருஶ்ணமடத்து குருமார்கள் இங்கு வந்து சென்றதால் இந்த இடத்திற்கே குருபுரம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார், இக்கோயிலின் பரம்பரை தர்மகர்த்தாக்களில் ஒருவரான திரு. ஜனார்த்தனன். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை