Recent Posts

மஹா மாரியம்மன் - குர்கான், அரியானா - சீதளா தேவி

மஹா மாரியம்மன் 

குர்கான், அரியானா - சீதளா தேவி




பஞ்சபாண்டவர்களுக்கும்,கௌரவர்களுக்கும் யுத்த முறைகளைக் கற்றுத்தந்த குரு துரோணாச்சார்யாரின் பிறந்த இடமான குர்கானை ஒட்டியுள்ள குர்கான் கிராமத்தில் குளத்தின் அருகில் திருக்கோயில் கொண்டு அமர்ந்துள்ளாள் சீதளா தேவி. இந்த தேவியை லலிதாமா என்றும் மாசாணிமா என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். சிரவண மாதம் தவிர மற்ற எல்லா மாதங்களிலும் அதிக அளவு பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சித்திரைமாதத்தில் இத்திருக்கோயிலின் பக்தர்கள் கூட்டம் கும்பமேளாவை ஒத்திருக்கும். தனது குழந்தைக்கு முதல் முடியைக் காணிக்கையாக கொடுப்பதற்கும், மணமான தம்பதியினர் அன்னையின் அருளைப் பெறுவதற்கும் அதிக அளவு வருகை தருகின்றனர். 

இத்திருக்கோயிலின் வரலாறு சற்று வித்தியாசமானது. ஶரத்வன் என்ற முனிவருக்கு இரண்டு குழந்தைகள். ஒருநாள் இந்த இரு குழந்தைகளும் தன் தவத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கருதிய முனிவர் இருவரையும் காட்டில் தனியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். காட்டில் வேட்டையாட வந்த சந்தனு என்ற அரசன் அவர்களைக் கண்டெடுத்து வளர்த்து வந்தான். சந்தனுவின் கருணையினால் (கிருபா) வளர்ந்ததால் ஆண்குழந்தை கிருபா என்றும், பெண்குழந்தை கிருபி என்றும் அழைக்கப்பட்டனர். கிருபியை துரோணாச்சார்யார் திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில்வித்தையைப் பயிற் றுவிப் பதற்காக துரோணர் அஸ்தினாபுரம் சென்றதால், கிருபி தனித்து விடப்பட்டாள். தவவாழ்க்கை மேற்கொண்ட கிருபி அங்கிருந்த மக்களால் தெய்வமாகப் போற்றப்பட்டாள். இவளே பின்னாளில் சீதளாதேவியாக வணங்கப்படுகிறாள் என்கிறது இத்தல வரலாறு. 

5000 ஆண்டுகால வரலாற்றை உடையது இத்திருக்கோயில். ஒருமுறை புரன்ஜித் என்ற மன்னனின் மகனுக்கு பக்கவாதம் வந்து மருத்துவர்களால் ஏதும் செய்ய முடியாத நிலையில் சீதளா தேவியிடம் வந்து வேண்டிக்கொண்டு அருகில் உள்ள குளத்திலிருந்து மண்ணை எடுத்து மகனின் உடல்முழுவதும் பூசி 15 தினங்கள் வைத்திருக்க, மகன் பூரண குணம் பெற்றான் என்கிறது வரலாறு. 

சுமார் 300 வருடங்களுக்கு முன் படரத் மற்றும் சிங்கா என்ற இரு சகோதரர்கள் குர்கானில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 1000 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. சிங்கா என்பவன் மிகவும் நல்லவன். எப்பொழுதும் பஜனைப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பான். இவனது பக்தியைக் கண்ட சீதளாதேவி அவனது கனவில் தோன்றி உடல்நலம் சரியில்லாதவர்களை அவன் தொட்டால் நோய் குணமாகிவிடுமென்று வரம் தந்தாள். 

அந்த வரத்தின் உதவியால் பலரையும் நோயிலிருந்து விடுவித் தான் சிங்கா. பின்னர் தனது சொத்துக்களை சகோதரனிடம் கொடுத்து விட்டு தவவாழ்க்கையை மேற்கொண்டான். தினமும் மண்ணினால் தேவியின் உருவம் செய்து அதை வழிபட்டு வந்தான். ஒருநாள் தேவியின் சிலை செய்ய குளத்திலிருந்து மண்ணைத் தோண்டிய பொழுது சீதளா தேவியின் உருவச்சிலை கிடைக்க, பின்னர் அதற்கொரு சிறிய கோயில்கட்டி வழிபட்டுவந்தான். அதுவே சீதளா தேவியின் திருக்கோயிலாக பின்னாளில் வளர்ந்தது. 

பரூக் நகர் என்ற இடத்தில் ஒரு ஏழை தச்சனுக்கு அழகான மகள் இருந்தாள். அவளை மணக்க விரும்பினான் அந்த நாட்டின் முகலாய மன்னர். வேற்று மதத்தவனாக இருந்த காரணத்தால் தச்சன் மறுத்துவிட்டான். மன்னர் பிடிவாதமாக இருந்த காரணத்தால் ஏழை தச்சனுக்கு வேறு வழி தெரியாமல் பக்கத்து நாடான பரத்பூர் நாட்டின் மகாராஜா சுராஜ்மல்லின் உதவியை நாடினான். அது உங்கள் உள்நாட்டு விவகாரம் என்று அந்த அரசன் மறுத்துவிட, சுராஜ்மல்லின் மகனிடம் கோரிக்கை விடுத்தான். 

மகனும் தன் தந்தையிடம் சிபாரிசு செய்ய, மன்னன் மீண்டும் மறுத்ததால்,  தந்தை தடுத்தும் கேளாமல் தானே மகன் டெல்லி மீது படையெடுத்துச் சென்றான். வழியில் குர்கான் வரும்போது குதிரைகள் மேலே செல்ல முடியாமல் தவித்தன. உடனே அரசவை ஜோதிடரைக் கேட்க, அங்குள்ள அம்மனை வணங்காததால் தான் குதிரைகளால் மேலே செல்ல முடியவில்லையென்று கூற, உடனே இளவரசன் தேவியை வழிபட்டு, இப்போரில் தான் வெற்றி பெற்றால் அம்பாளுக்கு பெரிய கோவில் எழுப்புவதாக பிரார்த்தித்துக் கொண்டான். அவ்வாறே போரில் வெற்றியும் பெற்றான். அம்பாளுக்கு பெரிய கோவில் எழுப்பினான். தச்சனின் மகளுக்கும் டெல்லி பாதுஶா விடமிருந்து விடுதலை கிடைத்தது. இவ்வாறு எழுப்பப்பட்ட திருக் கோயில் வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. சிறப்புமிக்க ஆலயத்தை நீங்களும் கண்டுகளித்து அன்னையின் அருளைப்பெறலாம். 

சிவனின் திருமுடியிலிருந்து தோன்றிய ஒளி அம்பிகையாக வடிவெடுத்தது. அந்த அம்பிகையே சீதளா தேவி என்றும் சொல்லப் படுகிறது. சீதளா தேவி தோன்றியதும் பரமேச்வரன் சீதளா தேவியை போற்றி துதித்த துதியே "சீதளாஶ்டகம்’ (அது இப்புத்தகத்தின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது). விருதுநகருக்கருகில் சுவர்ண சீதளா தேவி ஆலயம் அமைந்துள்ளது.ரேணுகாவின் 5 புதல்வர்கள் வசு, விஸ்வாவசு, பிருஹத்யனு, பிருத்வகண்வா, ராம்பத்ரா. ராம்பத்ராவே பரசுராமன் என்றழைக்கப்பட்டார். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...






கருத்துகள் இல்லை