Recent Posts

மஹா மாரியம்மன் - பட்டுக்கோட்டை - நாடியம்மன்

மஹா மாரியம்மன் 

பட்டுக்கோட்டை - நாடியம்மன்   



தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதால் இப்பெயர் பெற்றாளோ? தன் பக்தர்களின் உயிராக, உயிர்நாடியாக அவள் இருப்பதால்தான் அவளை நாடியம்மன்” என்று அழைக் கிறார்கள் இவளை வழிபடும் பட்டுக்கோட்டை பக்தர்கள். இவளது பெருமைக்கு சாட்சி ஏதும் தேவையில்லை. ஆனால் லட்சக்கணக் கானோர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடும் அதிசயம் நடப்பது இந்த திருக்கோவிலில் மட்டும்தான். 

தஞ்சையிலிருந்து 45 கி.மீ. தெற்கேயுள்ள ஊர் பட்டுக்கோட்டை. கி.பி. 1600 ஆம் ஆண்டில் இந்த ஊருக்கு வீரமாநகர் என்று பெயர். அது மராட்டியர் ஆண்ட காலம். அப்போது இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். அவர் பெயரால் விளங்கி வந்த கோட்டை இருந்த இடத்தின் பெயர் நாளடைவில் சுருங்கி பட்டுக்கோட்டை ஆகிவிட்டது. 

மழவராயர் ஒரு முறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீக களையோடு ஒரு நங்கையைக் கண்டார். ஆனால் அரசரைப் பார்த்ததும் அவள் ஓட ஆரம்பித்தாள். ஓடிக்கொண்டே இருந்தாள். மன்னர், அம்மா ஓடாதே நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன், என்று கூறினார். ஆனால் அவள் வேகமாக ஓடி வந்து ஒரு புதருக்குள் மறைந்து விட்டாள்.  மாயப் புன்னகை மன்னரை யோசிக்க வைத்தது. வேந்தன் தன்னுடன் வந்த ஜனங்களை புதர் அருகே பார்க்குமாறு கூற அங்கே ஓர் அழகான அம்மன் சிலை பளபளத்தது. அவர் மனமுருகி, தாயே! வலிய வந்து ஆட்கொண்டவளே, இந்த ஊர்மக்களையும், என் குலத்தையும் நோய் நொடி இடர்பாடின்றிக் காப்பாற்றம்மா, என்று வேண்டிக்கொண்டு அங்கு கோவிலை எழுப்பினார். 

வயல்வெளி, பெரிய குளம் சூழ்ந்திருக்க பெரிய பெரிய குதிரை சிலைகளோடு அழகாக காட்சி தருகிறது அன்னையின் கோவில். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாகக் காட்சி தருகிறாள் அன்னை. 

மொட்டை போடுதல், அங்கப்பிரதட்சணம் போன்றவற்றோடு தாழம்பூ பாவாடை சார்த்துதல், வெண்ணெய் படையல் என்ற வித்தியாசமான நேர்த்திக் கடன்களும் வழக்கத்தில் உள்ளன. 

பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஶம் இருந்தாலும்  விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். எலுமிச்சை மாலை சார்த்துவது மிக விசேஶம். பட்டு மழவராய மன்னனுக்கு அளித்த வாக்கு பொய்க்காமல் இங்கு நின்று பக்தர்கள் எல்லோருக்கும் வரம் தருகிறாள் அன்னை நாடியம்மன். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கும் நாடி” என்கிற பெயர் சூட்டப்படுகிறது. 

கால வெள்ளத்தில் ஆலயம் சிதிலமடைந்தது. பட்டுக் கோட் டைக்கு 28 கி.மீ. தூரத்தில் நாடியம் என்றொரு ஊர். அங்கேயுள்ள கோசாமி மடத்தில் மனசு நாதர் சுவாமிகளின் கனவில் தன் கோவிலை சீர்திருத்தும்படி அம்பாள் உத்தரவிட, திருப்பணிக் குழு அமைக்கப் பட்டு வசூல் செய்து அம்பிகைக்கு யந்திரத்தகடு எழுதி பதித்தார். அம்மன் உருவத்தில் நாட்டியத்திலிருந்து வந்த சுவாமிகள் சக்தியை ஏற்றியதால் நாடியம்மா என்று பக்தர்கள் குறிப்பிட்டனர். அம்மனும் தரிசிக்க வரும் பக்தர்களின் நாடி பிடித்துப் பார்த்து அவர்கள் நோய், நொடி மட்டுமின்றி மனக் குறையையும் அறிந்து அகற்றுகிறாள். 

இத்திருக்கோவிலில் அம்பிகைக்கு வரகரிசிமாலை கோர்த்து கட்டுவதுண்டு. இங்கிருக்கும் நாகவல்லி மரத்திற்கு தாலி சரடு (கயிறு) கட்டினால் திருமணத்தடை நீங்கும்.  

ஒரு சமயம் மகேஸ்வரி என்பவரின் கணவர் துபாயில்  வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டது. மனிதர் தனியாக இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போனார். ஊருக்கு போன் செய்து விஶயத்தை தெரிவித்தார். உடனே மகேஸ்வரி நாடியம்மாவை வேண்டி தன் கணவர் நலம் பெற பிரார்த்தித்தாராம். அம்மன் அருளால் அவருக்கு ஐந்தே நாளில் முத்துக்கள் உதிர்ந்து ஆறாம் நாள் அலுவலகம் சென்றிருக்கிறார். ஒரு மாதம் பணிக்கு வரவேண்டாம் என்று கூறி அனுப்பிய அவரது முதலாளிக்கு ஒரே ஆச்சரியம். எப்படி இது சாத்தியமானது? அம்மன் அருள் இருந்தால் எதுவும் சாத்தியமே! மனமுருகி நாம் செய்யும் ஒவ்வொரு பிரார்த்தனையும் அவள் ஏற்றுக்கொள்வாள். 

ஆரப்பள்ளம், அணைக்காடு, பண்ணை வயல், மகராச சமுத்திரம், கரம்பயம் இந்த ஐந்து ஊர் மக்களும் தேர்வடம் பிடித்து அம்பாளை பயபக்தியோடு வழிபடுகின்றனர். பயிர் செழிக்க, வியாதி குணமாக, கால் நடைகள் நலமுடன் திகழ, சுற்றம் மணக்க நாடியம்மனை நாடி நலம் பல பெறுவோம்! 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...





கருத்துகள் இல்லை