Recent Posts

மஹா மாரியம்மன் - மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் - பொங்கலிடுதல்

மஹா மாரியம்மன் 
மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் 
பொங்கலிடுதல்



பொங்கலிடுதலை சில ஊர்களில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுவர். பெரும்பாலும் அன்னையின் கோயிலருகிலேயே பொங்கல் செய்வர். சில கோயில்களில் இதற்கென்றே பெரிய இடம் இருக்கும். திருக்கோயிலின் வீதி முழுவதும் அடைத்து பொங்கலிடு வதும் உண்டு. சில கோயில்களில் பொங்கல் வைக்கும் இடத்திற்கு 1முதல் எண்கள் கொடுத்து பொங்கலிடுபவர்களின் பெயர்களை குலுக்கிப்போட்டு அவர்களை அந்த வரிசையில் பொங்கலிட அழைப்பர். 

பொங்கலிடும்போது பெரும்பாலும் புதிய மண் பானையை வாங்கி சுத்தப்படுத்தி, மஞ்சள் சந்தனம் குங்குமமிட்டு வேப்பிலை கட்டி அடுப்பிலேற்றி பின் பொங்கல் வைப்பர். பெரும்பாலும் சர்க்கரை பொங்கலே பிரதானமாக செய்யப்பட்டாலும், வெண் பொங்கலும் செய்து படையலிடுவர். பொங்கல் தயாரானதும் அதனை பெரிய வாழை இலையில் வைத்து அதனுடன் பலவகை பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய் எல்லாம் வைத்து அம்மனுக்குப் படைத்து பின் கற்பூரம் ஏற்றி காண்பித்து படையலை நிறைவு செய்வர். பின்னர் அதனை எல்லோருக்கும் விநியோகம் செய்வர். 

தீக்குண்டம்/பூக்குழி /தீமிதி 

மாரியம்மன் திருவிழாக்களில் முக்கியமான ஒன்று தீக்குண்டம் இறங்குதல். இதனை தீமிதி உற்சவமாக வெகு சிறப்பாகக் கொண்டாடுவர். எதற்காகத் தீக்குண்டம்?  

அன்னை ரேணுகா தேவி ஜமதக்னி முனிவரின் மனைவியாக இருந்தபோது, ஜமதக்னி கார்த்தவீர்யாஜுனனால் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு, கணவர் இறந்தபின் இனி தனக்கென்ன வேலையென்று கருதி தீப்புகுந்தாள் என்று படித்தோமல்லவா? அதனை நினைவுறுத்தியே தீக்குண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. அம்மன் தீயில் இறங்கியபடி நாமும் தீயில் இறங்கினால் நம் பாவங்களும் ரோகங் களும் அம்மனின் அருளால் எரிக்கப்பட்டுவிடும் என்பது நம்பிக்கை. அன்னைக்குப் பிடித்தமானதைச் செய்தால் அன்னையின் அருள் கிட்டும் என்பதே இதன் பொருள். 

இதே போல் ராமாயணத்தில் ஒரு காட்சியுண்டு. ஒரு முறை சீதா தேவி குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ராமர், சீதையின் உச்சி வகிட்டில் சிந்தூரம் தரித்திருப்பதைப் பார்த்து அதன் காரணத்தை வினவ, ிஉச்சி வகிட்டில் சிந்தூரம் தரித்துக் கொண்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றாளாம் சீதை. சதா சர்வ காலமும் ராம நாமத்திலேயே லயித்திருக்கும் அனுமனுக்கு திடீரென்று ஒரு யோசனைத் தோன்றியது. உச்சி வகிட்டில் சிறு துளி இருக்கும் சிந்தூரத்திற்கே ராமனின் ஆயுள் கூடுமென்றால், உடல் முழுவதும் அதைத்தரித்தால் அவருக்கு மிக நீண்ட ஆயுள் கிடைக்குமல் லவா என்று எண்ணினார். 

வேறு எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. நெற்றி வகிட்டில் சிந்தூரம் இடுவது கணவனின் ஆயுளைக் கூட்டு மென்பதால்தான். மற்றவர்கள் அணிந்தால் இதனால் எந்த பலனுமில்லை என்பதெல்லாம் அனுமனுக்கு அந்த சமயத்தில் தோன்ற வில்லை. உடனே செயலில் இறங்கினார். தன் உடல் முழுவதும் சிந்தூரத்தைப் பூசிக்கொண்டு சீதையின் முன் வந்து நின்றார். அனுமனின் கோலத்தைக் கண்ட சீதை அனுமனிடம் காரணத்தை விளக்கியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு வேண்டுவ தெல்லாம் ராமனின் க்ஷேமம் ஒன்றுதான். அன்றிலிருந்து சிந்தூரத்தில் ப்ரீதியாகிவிட்டார் ஆஞ்சனேயர். 

நாமும் அப்படித்தான். அன்னை ரேணுகா தேவி தீக்குண்டத்தில் இறங்கியது அவள் கணவர் உயிர் நீத்ததால்தான். ஆனால் பக்தனுக்கு காரணகாரியங்கள் தேவையில்லை. அன்னை என்ன செய்தாளோ  அதனை நாமும் செய்தால் அன்னை மனம் குளிர்வாள். அவள் அருள் கிடைக்கும் என்பதே பக்தனின் எண்ணம். இதுவே தீவிர பக்தி நிலை. அன்னைக்கு ஒரு காணிக்கையாக இதனைச் செலுத்துகிறான் பக்தன். 

அந்நிலையில் அவன் கால்கள் தீக்குண்டத்தில் சுடுவதில்லை. அன்னையை மனதில் இருத்தி தீமிதிக்கும் போது தீக்குண்டத்தில் உள்ள நெருப்பு, மலர்களாக மாறி பக்தனின் கால்களுக்கு இதமளிக்கிறது. தகதகவென எரியும் தணல் மீது பக்தன் சாதாரண நிலத்தில் நடந்து செல்வது போல் ஆனந்தமாக நடந்து செல்வதை பார்க்கும் போதுதான் அந்த அன்னையின் தெய்வீகச் சக்தியை உணர்ந்து கொள்ள முடியும். தீநாக்குகளை செம்மலர்களாக எண்ணியே பக்தன் தீயிறங்குகிறான். இதனாலேயே தீமிதித்தலை பூ மிதித்தல் எனவும், தீக் குண்டத்தை 'பூக்குழி’ எனவும் பக்தர்கள் போற்றுகின்றனர். 

தீமிதிப்பதால் பக்தனின் பாவங்கள் எரிக்கப்படுகின்றன. உடலில் உள்ள ரோகங்கள் நீங்குகின்றன. பில்லி சூனியம் போன்றவற்றால் அவதியுறுபவர்கள் அதிலிருந்து விடுபடுகின்றனர். மாரியம்மன் கோயில் உற்சவத்தில் ஒரு நாள் - பெரும்பாலும் வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிறன்று தீமிதி உத்ஸவம் நடைபெறும். இது மாலை நேரங்களிலேயே நடைபெறுவது வழக்கம். 

இவ்விழா தொடங்குமுன் தேவையான அளவு பெரிய அகலமான குழியை வெட்டி அதில் உலர்ந்த மரக்கட்டைகளை நிரப்பிவைப்பர். குறிப்பிட்ட தினத்தன்று விழா தொடங்க இருக்கும் வேளைக்கு  

3 அல்லது 4 மணிநேரங்கள் முன் கட்டைகளை அன்னையை வேண்டிக் கொண்டு எரியவிடுவர். கட்டைகள் முழுவதும் எரிந்து நீராகி விடாமல் நெருப்புத் துண்டங்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்வர். பின்னர் அதன் மீது வைக்கோலை போட்டு எரியவிட்டு சாம்பலை ஏற்படுத் துவர். அதனால் கால்களில் எந்தவொரு பொருளும் குத்தாமலிருக்கும். அதன் அருகிலேயே பெரிய நீர்த்தொட்டி ஒன்றையும் வைத்திருப்பர். 

விழா துவங்குமுன் கையில் காப்பு கட்டிக் கொண்ட அல்லது நேர்ந்து கொண்ட பக்தர்கள் கோயிலில் உள்ள குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டு மஞ்சள் ஈரத்துணியுடன் நெற்றியில் விபூதியும் கழுத்தில் பூமாலையும் இடுப்பில் வேப்பிலையும் சொருகிக்கொண்டு வரிசையாக நிற்பர். 

முதலில் தீமிதிப்பவர் (பெரும்பாலும் கோயில் பூசாரி) நன்கு அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் சுமந்தவாறு அல்லது கையில் தீச்சட்டியுடன் முதலில் தீயில் இறங்கி நடந்து சென்று பின்னர் தண்ணீர் தொட்டியில் இறங்கி மீண்டு வருவர். பின்னர் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக தீயில் இறங்கி பின் கோயிலுக்குச் சென்று அன்னையை வணங்கி இல்லம் திரும்புவர். 

தீமிதி விழா எல்லா மாரியம்மன் கோவிலிலும் நடைபெறும். சமயபுரம் தலத்தில் அம்பாள் தன் குழந்தைகளை விரதம் இருந்து காப்பாற்றுகிறாள். அப்படிப்பட்டவள் தன் குழந்தைகள் கால்கள் தீயில் வெந்து போவதைப் பார்த்துக் கொண்டிருப்பாளா? அவளே அல்லவா அந்த தீயை தன் கைகளில் ஏந்தியிருக்கிறாள். 

ஒரு சமயம் வெள்ளையர் ஆண்ட நாளில் நெருப்பு மிதிக்கும் திருவிழா நடைபெற்றதாம். அப்போது அந்த நெருப்பில் மிதித்து நடந்து வந்த பக்தர்களைப் போட்டோ எடுத்த வெள்ளையன் ஒருவன். உடனே தன் கண்கள் இழந்தான். கதறி அழுதான். பின்னர் கோவில் அர்ச்சகர் கூறிய மாதிரி பிரார்த்தனை செய்து மன்னிப்பு கேட்டானாம் அம்பாளிடம். கண் பார்வை கொடுத்தாள் அம்பாள் மன்னித்ததற்கு அடையாளமாக. 

ஆழமான குழியில் மரங்களைப் போட்டு கொளுத்திப் பரப்பி அதன்மீது பக்தர்கள் நடந்து போன போது வெள்ளைக்காரன் இந்த நெருப்பில் எப்படி நடக்க முடிகிறது என்று குனிந்து  பார்த்தானாம். என்ன ஆச்சர்யம் தெரியுமா? அந்த வெள்ளைக்காரன் கண்கள் என்ன புண்ணியம் செய்ததோ? அந்த நெருப்பையே அம்பாள் தன்  கைகளில் ஏந்தியிருப்பது தெரிந்ததாம். இது அல்லவோ அன்னை அருள்! பக்தர்கள் கால் சுடாமல் தன் கைகளில் ஏந்தியிருக்கிறாள் நெருப்பை. 

நெருப்பு இறைவனின் சொரூபம். இறைவனும் சரி நெருப்பும் சரி தவறு செய்பவர்களைத் தண்டிக்கும். நெருப்பு குண்டத்தை மிகப்பெரிய அளவில் அமைத்து முறைப்படி விரதமிருப்பவர்கள் பாதங்களை நெருப்பு சுடுவதில்லை. 

கண்ணகி மதுரையை எரிக்கும் போது அக்னிதேவனிடம் பார்ப்பனர்கள், தர்மவான்கள், பசு, பத்தினி, பெண்கள், மூத்தோர், குழந்தைகள் ஆகியவர்களை விடுத்து தீயோர்களை மட்டுமே அழிக்குமாறு ஆணையிட்டாளாம் ிஎனும் இவரை கைவிட்டு தீத்திறத் தார் பக்கமே சேர்கீ என்று சொன்னாள் என்கிறது சிலப்பதிகாரம். கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய மாரி வழிபாட்டில் இடம் பெறும் குண்டத்தில் உள்ள அக்னி பக்தர்களாகிய நல்லவர்களைச் சுடுவதில்லை. 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை