Recent Posts

மஹா மாரியம்மன் - மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் - அக்னிசட்டி / பூவோடு

மஹா மாரியம்மன் 
மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் 
அக்னிசட்டி / பூவோடு 



மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும். மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீச்சட்டி எடுத்தல் பரவலாக எல்லா கோயில்களிலும் நடைபெறுகிறது. இதனையே தீசட்டி எடுத்தல் பூவோடு எடுத்தல் என்றும் அழைப்பர். 

தீச்சட்டி எடுப்பவர் விரதமிருந்து அம்மன் கோயிலிலோ அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளிலோ ஸ்நானம் செய்து, மஞ்சளாடை உடுத்தி, வேப்பிலையை இடுப்பில் சொருகிக்கொண்டு அம்மன் கோயிலுக்கு வந்து அங்கு தயாராக வைத்திருக்கும் தீச்சட்டியை கையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு அதற்கு மேல் வைப்பர். 

தீச்சட்டியானது பக்கவாட்டில் மூன்று துளைகளுடன் இருக்கும் அதன் அடியில் மணல் நிரப்பி, அதில் காய்ந்த மரக்குச்சிகளை இட்டு நெய் ஊற்றி கற்பூரம் ஏற்றி தீயை உண்டாக்குவர். பின்னர் அதனை சுற்றி  வரட்டியை அடுக்கி தீயை வளர்ப்பர். 

தீச்சட்டி எடுப்பவர் கையில் தீச்சட்டியுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு மேளதாளத்துடன் வீதிவழியாக எல்லோர் வீடுகளுக்கும் செல்வர். அவரை அம்மனாகக் கருதி அவரது பாதங்களைக் கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு கற்பூரம் காட்டி வழிபடுவர். இறுதியில் மீண்டும்  கோயிலுக்கு வந்து அம்மன் முன் தீச்சட்டியை வைத்துவிட்டு அம்மனை கற்பூரம் ஏற்றி வழிபட்டு வீடு திரும்புவர். 

இவ்வாறு தீச்சட்டி எடுப்பது விழாக்காலங்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் அம்மனுக்கு நேர்ந்துகொண்டு செய்வதுண்டு. பக்தனுக்கு நெருப்பு, அனலாகத் தெரிவதில்லை. பூவாக குளிர்கிறது. அதனாலேயே இதனை பூவோடு எடுத்தல் என்று கூறுகிறார்கள். இப்படி பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது. விஶ ஜந்துக்களால் ஏற்படும் பயம், இயற்கை சீற்றங்களால்  ஏற்படும் உபத்திரவங்கள் நீங்குகின்றன. 

உருள்தண்டம் 

அங்க பிரதக்ஷிணம் என்பதையே தமிழில் உருள்தண்டம் என்கிறார்கள். தன் அங்கங்கள் அனைத்தும் தரையில் படும்படி திருக்கோயிலின் பிரகாரத்தில் உருண்டு சென்று வேண்டுதலை நிறை வேற்றுவதை உருள்தண்டம்  என்கிறோம். எல்லா தெய்வங்களுக்கும் இப்படி உருள் தண்டம் நிறைவேற்றுவதுண்டு. 

மாரியம்மன் கோயில்களில் உருள்தண்டம் நிறைவேற்றும்போது ஸ்நானம் செய்து விட்டு ஈரத்துணியுடன் இடுப்பில் வேப்பிலையை சொருகிக்கொண்டு, கையில் வேப்பிலையைப் பிடித்துக்கொண்டு அன்னையின் திருநாமத்தை கூறிக்கொண்டு உருண்டு செல்வர். 

நாம் பிறந்ததும் இம்மண்ணில்தான். நாம் மறைவதும் இம்மண் ணில்தான். நாம் சிறு குழந்தையாய் இருக்கும்போது விளையாடியதும்  இம்மண்ணில்தான். எந்நேரமும் வாழும் இம் மண்ணை பூமாதேவி யென்று போற்றுவது நமது மதம். இம்மண்ணில் புரண்டு நேர்ச்சையை நிறைவேற்றுவது மாரியம்மன் திருக்கோயில்களில் தினந்தோறும் காணப்படும் நிகழ்ச்சியாகும். 

கரகம் எடுத்தல் 

மாரியம்மன் வழிபாட்டில் இடம் பெறும் மற்றொரு அம்சம் கரகம். கரகம் எடுக்கும் நாளன்று மேளதாளத்துடன் அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள நீர் நிலைகளுக்கோ அல்லது பொதுவான ஒரு இடத்திற்கோ சென்று அங்கிருந்து கரகம் எடுத்து வருவர். கரகம் எடுப்பதற்கு ஒரு புது பானையை வாங்கி அதனுள் பச்சரிசி, நீர் சேர்த்து அப்பானைக்கு மஞ்சள் சந்தனம் குங்குமம் இட்டு, வேப்பிலை சாற்றி, பூக்களால் அலங்கரித்து கும்பத்தில் மீது தர்பை கூர்ச்சம், மாவிலை தேங்காய் வைத்து உச்சியில் எலுமிச்சம்பழம் வைத்து கும்பம் போல் ஜோடிப்பர். பிறகு இக்கரகத்தை அம்மனாக எண்ணி பூஜை செய்து கற்பூரம் ஏற்றி வணங்குவர். பின்னர் காப்பு கட்டியவர்கள் அம்மனை மனதில் தியானித்து தங்கள் தலையில் கரகத்தை தூக்கி வைத்துக்கொண்டு மேளதாளத்துடன் தாரை தப்பட்டை முழங்க ஆடிப்பாடிக் கொண்டு மாரியம்மன் கோயிலுக்கு வந்து கருவறையில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுவர். இதுவே கரகம் எடுத்தல் ஆகும். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை