Recent Posts

மஹா மாரியம்மன் - மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் - மாவிளக்கு போடுதல்

மஹா மாரியம்மன் 
மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் 
மாவிளக்கு போடுதல் 




ரேணுகா தேவி நெருப்பில் வீழ்ந்து எழுந்தவுடன் அவள் பசியைத் தணிக்க அவ்வூர் மக்கள் அவளுக்குக் துளிமாவு என்கிற வெல்லம் நெய் கலந்த பச்சரிசி மாவைக் கொடுத்தனர். அதன் ஞாபகார்த்தமாக மாரியம்மன் திருக்கோயில்களில் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள். 

மாவிளக்கு செய்முறை: பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அத்துடன் வெல்ல சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும். பின்னர் அதன் மத்தியில் குழிவாக செய்து, அக்குழியில் நெய்விட்டு பஞ்சு திரியிட்டு அதன் நான்கு புறமும் சந்தனம் குங்குமமிட்டு, மலர் மாலை சூட்டி அலங்கரிப்பர். இந்த விளக்குகளை 2, 4, 6  என்றபடி தயார்செய்து அன்னையின் திருச்சந்நதியில் ஓரிடத்தை  சுத்தம் செய்து, கோலமிட்டு, வாழையிலை போட்டு தேவியை மனதில் தியானித்து தங்கள் ப்ரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி தீப விளக்குளை ஏற்றுவர். பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு நிவேதனப் பொருட்களை வைத்து திருவிளக்குகளுக்கு நிவேதனம் செய்வர். 

தீபம் மலையேறும் வரை அன்னையின் சந்நிதியில் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவர். பின்னர் அன்னைக்கு கற்பூர ஆரத்தி செய்து தங்கள் ப்ரார்த்தனையை நிறைவு செய்வர். உடல் குறை உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி, அன்னையின் திருச் சந்நிதியில் படுத்துக்கொண்டு தங்களின் வயிற்றுப் பகுதியிலோ அல்லது மார்புப் பகுதியிலோ மாவிளக்கை ஏற்றி வழிபாடு செய்வது முண்டு. சிலர் மாவிளக்குகளை ஏற்றி அழகான தட்டுகளில் வைத்து அலங்கரித்து தங்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அன்னையின் திருச்சந்நிதியில் வைப்பர். சிலர் விளக்குகளை அழகாக அலங்கரித்த சப்பரங்களில் வைத்து மேளதாளம் முழங்க எடுத்து வருவர். 

தீபம் மலையேறியதும் மாவிளக்குகளை ஒன்றாக சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்து அங்குள்ள பக்தர்களுக்கு வழங்குவர். அன்னைக்கு மாவிளக்கேற்றி வழிபட உங்கள் குறைகள் நீங்கி வளமோடு வாழ அன்னை அருள் புரிவாள். 

முளைப்பாலிகை ஊர்வலம் 

அம்மன் கோவில்களில் முளைப்பாலிகை தனி இடத்தைப் பெறுகிறது. ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு கொண்டாடப்படும் பல விழாக்களில் முளைப்பாலிகை ஊர்வலமும் ஒன்றாகும். இளம் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இதனை மேற்கொள்வர். 

நெல்கதிர்கள் போல முளைப்பாலிகைக் கதிர்கள் காற்றில் அசைந்தாடும் அழகே அழகுதான். வெறும் அழகிற்காகவும், அலங் காரத்திற்காகவும் இதை எடுத்து வருவதில்லை. முளைப்பாலிகை செழித்து வளர்வது போல குடும்பம் தழைக்கும். முளைப்பாலிகை எந்தளவுக்கு செழிப்பாக வளர்ந்துள்ளதோ அதே போல் தன் வாழ்வும் வளரும் என்பது நம்பிக்கை. பெண்ணிற்கு நல்ல கணவன் அமைவான். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நவதானியப் பாலிகை தெளித்து வளர்த்து தம்பதிகள் அதை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் இதற்காகத்தான். 

மழையினால் பெறும் தண்ணீர் இவ்வுலக உயிர்களின் ஜீவாதார மாக விளங்குகிறது. நாம் உண்ணும் உணவில் நீர் முக்கிய இடம் பெறுகிறது. உடலில் நீர்சத்து இருந்தால்தான் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் மழையே மரங்களையும், செடி கொடிகளையும் வாழ வைக்கிறது. அந்த தாவரங்களிலிருந்து பெறப்படும் காய்கறி, கனி, கீரைகளே நம் வாழ்வின் ஆதார சக்தியாகும். இத்தகைய மழையை நமக்களித்து அருள் புரியும் ஸ்ரீ மாரியம்மனுக்கு அவள் கொடுத்த மழையினால் விளைந்த தாவரங்களை அலங்கரித்து அவற்றைப் பெண்கள் தங்கள் தலையில் சுமந்து மேளதாளமும், ஆடல் பாடல்களும் தொடர ஊர்வலமாக வருவார்கள். 

ஊர்வலம் முடிந்ததும் அவற்றை வரிசையாக வைத்து அதைச் சுற்றி நின்று கும்மி, கோலாட்டம் ஆடி அன்னையைத் துதித்து பின் அவற்றை குளங்களிலோ, ஆறுகளிலோ விட்டுவிடுவர். 

முளைப்பாலிகை தாவரங்களை உருவாக்க நவதானியங்களையே பயன்படுத்துவர். நாம் உண்ணும் பல தானியங்களில் நவகிரகங்களுக்கு உகந்த நவதானியங்கள் நம் இந்து மதத்தில் சிறப்பான இடம் பெற்றுள்ளன. வழிபாடுகளிலும், ஹோமங்களிலும் இந்த நவதானியங் களே பயன்படுத்தப்படுகின்றன. கோதுமை, நெல், துவரை, பச்சைப் பயிறு, கடலை, மொச்சை, எள்ளு, உளுந்து, கொள்ளு ஆகிய நவ தானியங்களும் முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்,வெள்ளி,சனி,ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு உரியதாகும். 

இந்த நவதானியங்களை தண்ணீரில் இட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பர். 

முளைப்பாலிகை ஊர்வலத்திற்குத் தேவையான மண் சட்டிகளைத் தயார் செய்து செம்மண் இட்டு மண் நிரப்பி அதில் ஊறவைத்த நவதானியங்களை தெளிப்பர். ஒரு வாரத்தில் அவை நன்கு முளை விட்டு பார்க்க பச்சை பசேலென்று வளர்ந்து கண்களுக்குக் குளிர்ச் சியாகக் காட்சியளிக்கும். இவையே முளைப்பாலிகை ஊர்வலத்தில் இடம் பெறும். 

பெண்கள் இதனைச் சுமந்து செல்லும் போது பாலிகையில் உள்ள கதிர்கள் காற்றில் அசைந்தாடுவது கண்கொள்ளாக்காட்சி.  


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை