Recent Posts

மஹா மாரியம்மன் - மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் - கூழ் ஊற்றுதல்

மஹா மாரியம்மன் 
மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் 
கூழ் ஊற்றுதல் 



சின்னம்மை மற்றும் தட்டம்மைகளில் இருந்து காக்கும் கடவுளாக வழிபடப்படுபவர் மாரியம்மன். நம் சமூகத்தில் காணப்படும் எந்த பழக்க வழக்கமும் காரணமின்றி உருவாக்கப்பட்டவை அல்ல. எந்த ஒரு மத நம்பிக்கையும் கண்மூடித்தனமாக உருவாக்கப்பட்டது அல்ல.  வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை மனதில் கொண்டு நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த இது போன்ற பழக்கங்கள் நிறைய உள்ளன. அதற்கு சிறந்த உதாரணம் கூழ் ஊற்றுதல். 

இந்தியாவை பொறுத்தவரை உஶ்ணம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுவது ஆடி மாதத்தில் நிகழ்கிறது. இத்தருணத்தில் வைரஸ்கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் செய்தி. அதன்படி ஆடி மாதத்தில் சின்னம்மை மற்றும் தட்டம்மை அதிக அளவில் பரவுகிறது. உயிர்க்கொல்லி நோயாக திகழ்ந்த அம்மை நோயை தடுக்க அதிக எதிர்ப்பு சக்தி தேவை. அதனை கேழ்வரகு கூழ் ஈடு செய்கிறது. 

கேழ்வரகு உடலை குளிர்விக்ககூடிய அரிய உணவு. அது மட்டுமின்றி வைரஸ் கிருமிகளில் இருந்து காக்கக் கூடிய அருமருந்தும் கூட. மேலும் உடலை ஆரோக்கியமாக வைக்கக் கூடிய இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து ஆகியவையும் அதிக அளவில் உள்ளது. கேழ்வரகை கூழாக தயாரிக்கும்  முறையிலும் அதன் மருத்துவ குணம் அதிகரிக்கிறது. 

கேழ்வரகு மாவை நீரில் கரைத்து ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து புளிக்க வைக்கின்றனர். மாலையில் அதில் அரிசி குருணையை கலந்து வேக வைத்து இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுவதால் உடலுக்கு நலமளிக்கும் ஈஸ்ட் உருவாகி குடிப் பதற்கு ஏற்ற வகையில் கூழ் புளித்து போகிறது. கூழுடன் சேர்க்கப்படும் முருங்கைக் கீரை இரும்புச் சத்து நிறைந்தது. 

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் உஶ்ணம் குறைந்து, வைரஸ் கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட இந்த கூழ் மிகவும் உதவுகிறது. அதுவும் அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து கிடைக்கும் பிரசாதம் என்றால் அதற்கு கூடுதல் சக்தி உண்டல்லவா? 

கேழ்வரகு கூழ் உடலுக்கு நல்லது என்று பிரசாரம் செய்தால் மக்கள் ஏற்பார்களா என்று தெரியவில்லை. அதனால்தான் அம்பாளின் பிரசாதம் என்று சொல்கிறார்களா? 

அநேகமாக எல்லா மாரியம்மன் கோயில்களிலும்  கூழ் வார்த்தல் வருடத்தில் பல முறை நடைபெறும். தற்போது பல கோயில்களில் கம்பு, சோளம், கேழ்வரகு முதலியவற்றை அரைத்து நீரில் கரைத்து கொதிக்கவைத்து கூழாக மாற்றுவர். 

ஒரு புதுப்பானை வாங்கி நன்கு சுத்தம் செய்து மஞ்சள், சந்தனம் குங்குமம் இட்டு வேப்பிலையால் அலங்கரித்து மாலை சூட்டி அதில் காய்ச்சிய கூழை ஊற்றி அத்துடன் பொடி செய்யப்பட்ட வெங்காயத்தை கலந்து அம்மன் முன் வைத்து பூஜை செய்து கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு எல்லோர்க்கும் கொடுத்து மகிழ்வர். 

மேற்கண்டபடி கூழ் செய்வதற்குப் பதிலாக அரிசியை கொதிக் கவைத்து கஞ்சி செய்து அதனையும் மேற்சொன்ன முறையில் வழிபட்டு எல்லோருக்கும் கொடுப்பதும் உண்டு. 

தற்போது புதுப் பானைகளுக்குப் பதிலாக எவர்சில்வர் மற்றும் பித்தளையாலான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கூழ் அன்னையின் பிரசாதமாக ஆவதுடன் நம் உடலையும் குளிர்விக்கும் தன்மையுள்ளதாகும். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை