Recent Posts

மஹா மாரியம்மன் - ஸ்ரீ முத்துமாரியம்மன்

மஹா மாரியம்மன் 
ஸ்ரீ முத்துமாரியம்மன் 



இலங்கையின் ரத்தினத் த்வீபம் எனப் போற்றப்படும் இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வளங்களும் சிறந்து விளங்கும் இறக்குவானை என்ற மலைப்பிரதேசத்தில் சிங்ஹராஜ தேசிய வனத்திற்கு அடிவாரத்தில் அமைந்துள்ள ஓரு மாபெரும் வினைத்தீர்க்கும் ஆலயமே இவ் ஆலயம். பல அற்புதங்களுக்கு உரித்தான இவ்வாலயம் அனைத்து இன, மத மக்களால் நம்பிக்கையோடு தற்போதும் போற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய ஆலயம். இறக்குவானை வாழ் மக்களின் வழிபாட்டிற்குரிய புனிதத் தலமாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் திகழ்கிறது. 

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு முஹம்மது ஸ்மெயில் அலி என்பவருக்கு ஓரேன்ஜ்பீல்ட் என்ற தோட்டத்தில் ஒரு பூவரச மரத்தின் கீழ் ஒரு பாம்பு புற்று காணப்பட்டது. அதற்கு அருகில் நான்கு ஈரப்பலா மரங்களும் இருந்தன. அவ்விடத்தில் ஒரு சிறிய கல்லாலான சிலையும் காணப்பட்டது. சங்கப்பிள்ளை பூசாரி என்பவர் சூமாரியம்மன் இவ்விடத்தில் வீற்றிருக்கிறார்’ என்று கூறி தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தார். இதை கேள்வியுற்ற ரெங்காயி என்ற பெண்மணி இரண்டு கண்களும் தெரியாதவள்.ஆனால் மனக்கண்களால் அம்மன் மேல் அளவற்ற பக்தியை கொண்டவள். 

ரெங்காயி அம்மன் சிலையாக அங்கு இருப்பதை உணர்ந்தாள். 48 தினங்கள் தொடர்ந்து விளக்கேற்றி வருவதாகவும் தன்னுடைய இரண்டு கண்களும் மீள பார்வை பெற வேண்டுமெனவும் அம்பாளிடம் வேண்டி தினமும் காலையில் குளித்து கோயிலை சுத்தம் செய்து விளக்கேற்றி வந்தாள். சில வேளைகளில் அப்புற்றிலுள்ள பாம்பு உலாவித் திரிகையில் அதனை கண் தெரியாத ரெங்காயி தடவுவாள். எனினும் அப் பாம்பு அவளை ஒன்றும் செய்யாது. தொடர்ந்து 48 தினங்கள் ரெங்காயி விளக்கேற்றி வழிபட கண்கள் இரண்டும் பார்வையைப் பெற்றன.  

பின்னர் கோவிலை கட்ட பலர் முன்வந்ததனர். ஆனால் அணல் டுல்லா ஸ்மெய்ல், காசிம் ஸ்மெய்ல் என்ற இருவரும் அதைத் தடுத்தார்கள். அன்று இரவு அவர்களது கனவில் அம்மன் தோன்றி பயத்தை தோற்றுவிக்க, மறு நாளே நிலச் சொந்தக்காரர்கள் கொட்ட கையை கட்ட அனுமதி வழங்கியதாக சொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து கோயில் மிகச் சிறியதாக அமைக்கப்பட்டது. ஆலயத்தின் சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்க மக்கள் அதிக அளவில் திருப்பணிகளில் பங்கு கொண்டனர்.

நடுவில் ஆலயம் செயற்படாது கவனிப்பற்ற நிலையில் கைவிடப்பட்டதன் விளைவாக அம்பாள் வெள்ளை நிற ஆடையுடன் நகரை சுற்ற ஆரம்பித்தாள். இதைக் கண்ட பக்தர்கள் பணிகளை சிறப்பாக தொடரும்படி அம்பாள் ஆணையிட்டதாக தெரிவித்தவுடன் அதைத் தொடர்ந்து பல விரிவாக்கங்களைக் கண்ட திருக்கோயில் இன்று சீரும் சிறப்பும் பெற்று விளங்கி வருகிறது. 

உலகமாகிய பந்தத்திலிருந்து ஆன்மாவை விடுவித்து இறைவன் பால் சேர்த்து இன்பம் அனுபவிக்கும் உயர்நிலைத் தத்துவமே பிரம்மோற்சவம். இதை இத் திருக்கோயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இதில் பெருந்திரளானோர் கலந்து கொள் கின்றனர். அதனைத் தொடர்ந்து வி‌ேஶட பூஜைகள் நடைபெறும். பின்னர் வேட்டைத் திருவிழாவும் சப்பரத் திருவிழாவும், தேர்திருவிழா வும் நடைபெறும். சர்வலோக நாயகியான அன்னை அம்பிகை, ‌ேஶாடச உபசாரங்களுடன் சர்வ அலங்கார நாயகியாக வீற்று தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வீதியுலா வருகிறாள். 

ஆலயத்தின் பிரதான விழாவான தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து மறுநாள் தீர்த்தோற்சவமும் அதற்கு அடுத்தநாள் பூங்காவனத் திருவிழாவும் நடைபெறும்.  

இன்று சப்ரகமுவ மாகாணத்தில் மகோற்சவம் நடைபெறும் ஆலயங்களில் முக்கியமானதாகவும் மற்ற ஆலயங்களுக்கு முன்னு தாரணமாகவும் திகழ்கிறது இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம். ஏறத்தாழ 150 ஆண்டுகள் பழைமையானதும் வரலாற்றுச் சிறப்புடையதுமான இவ்வாலயம் சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...





கருத்துகள் இல்லை