Recent Posts

மஹா மாரியம்மன் - முத்துமாரியம்மன்

மஹா மாரியம்மன் 
முத்துமாரியம்மன் 



புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைக்கப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டதே கோடியக்கரை முத்துமாரியம்மன் கோவிலாகும்.  தஞ்சாவூரில் இருந்து தென்கிழக்காக 112 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இந்நகரம் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்ட வேதாரணியம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தெற்கில் அமைந் துள்ளது. 

கோடியக்கரையைப் பற்றி கூறப்படும் கதைகளில் பழைமை யானது இராமாயணகாலத்தை சேர்ந்ததாகும். இராமர் இராவணனுடன் போர்புரிவதற்காக இலங்கைக்குப் புறப்பட்ட போது முதலில் கோடியக் கரையில் இருந்தே இலங்கையைப் பார்த்தார். அங்கிருந்து பார்த்த பொழுது இராவணனுடைய நகரத்தின் பின்புறமே இராமருக்கு தெரிந்ததாம். வீரன் என்பவன் நேரிடையான போரின் போது பின்புறமாக எதிரியை தாக்கமாட்டான் என்பதால் தனுஶ்கோடிக்கு சென்று அங்கிருந்து இலங்கைக்குச் சென்றான் என்பது வாய்மொழியாக இங்கு வழங்கப்படும் கதையாகும். இங்கிருக்கும் இராமர் பாதம் என அழைக்கப்படும் இடம் இராமர் இங்கே வந்ததற்கான தொல்லியல் சான்று போலவே நின்று நிலவுகின்றது.  

மற்றொரு சம்பவமும் சொல்லப்படுகிறது. தக்ஷனின் மகளாக அவதரித்த உமாதேவி, தக்ஷன் யாகம் செய்த பொழுது தனது கணவனாகிய சிவபெருமானின் பேச்சைக் கேளாமல் யாகத்திற்குச் சென்று, தனது தந்தையாராலேயே அவமதிக்கப் பட்டதனால் மனமுடைந்து யாககுண்டலத்திலேயே உயிரைவிட, இதனைக் கேள்வியுற்ற சிவபெருமான் அடங்காத சினத்துடன் அங்கே சென்று தனது தேவியின் உடலை எடுத்ததுத் தலையில் சுமந்து, ஆக்ரோஶமாக  சுழன்றாட, பூமி நடுங்கியது. கடல் பொங்கியது. கோள்கள் யாவும் நிலைதடுமாறின. தேவர்கள் அஞ்சி நடுங்கினர். இதைக் கண்டு பொறுக்காத மகாவிஶ்ணு தனது சக்கராயுதத்தினால் அன்னையின் உடலை துண்டுகளாக்க, அவை சிவனின் கரங்களிலிருந்து ஒவ்வொரு இடங்களில் விழுந்தன. 

இவ்வாறு பாரதநாட்டின் பல பாகங்களிலும் சக்தியின் உடற்கூறுகள் விழுந்த இடங்களே சக்திபீடங்கள் என அழைக்கப்படுகின்றன. இச்சக்திபீடங்கள் ஐம்பத்தியொன்று எனவும் அறுபத்திநான்கு எனவும் புராணங்கள் கூறுகின்றன. தேவிபாகவத்தில் நூற்றியெட்டு சக்திபீடங்கள் என வியாசர் கூறுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ள சக்திபீடங்களில் கோடியக்கரையும்  ஒரு சக்திபீடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சக்திபீடத்தினை ருத்திராணி பீடம் என்றும், கோடவீ சக்திபீடம் என்றும் வெவ்வேறாக குறிக்கின்றனர். கோடவீ என்பது துர்க்கையைக் குறிக்கும். ருத்திராணி எனப்படுவது 

ஸ்ரீ பராசக்தியாகும். மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் என்பனவெல்லாம் பெயர்களில் வேறுபட்டாலும் பராசக்தியின் வெவ்வேறு வடிவங்களே. இதன்மூலம் கோடியக்கரை முத்துமாரியம்மன் திருக் கோயில் சிறப்புடைய சக்திபீடம் எனத் தெரிகிறது. மேலும் ருத்திராணியின் பீடமான ருத்திரகோடி என்னும் இத்தலமானது பின்னர் கோடியக்கரை என மாற்றமடைந்து உள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோடியக்கரை முத்துமாரியம்மன் கோவில் கால இடைவெளியில் பல்வேறு மாற்றங்களைக்கண்டு இன்று கோடிமுத்துமாரியம்மனாக அழைக்கப்படுகிறது.  

கோடிமுத்துமாரியம்மனுக்கும் வல்வெட்டித்துறை முத்துமாரியம் மனுக்கும் மிகநெருங்கிய தொடர்புண்டு. இதனை இன்னொரு வகையாகக் கூறினால் கோடியக்கரையில் இருந்த முத்து மாரியம்மனே வல்வெட்டித்துறையில் வந்து கோயில் கொண்டருள்வதாக வல் வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் தலவரலாறு கூறுகின்றது. 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை